51

     51. சிவஞான ஒழுக்கத்துக்கு இடையூறு செய்வன இருவகைப் பற்றுக்களாகும். அவை யான், எனது என இரண்டாம். யான் செய்தேன், யான் நினைத்தேன், யான் சொன்னேன் என வினைகட்கு முதலாய உள்ளத்தே நின்று திகழும் பற்று. இஃது இல்லையாயின் உலகியல் வாழ்வில் பொருள்செய்தலும் புகழ்ஈட்டுதலும் இல்லையாம். செய்வினை முதல்வனாய் உலக வாழ்க்கையோடு ஒருவனைத் தொடர்புபடுத்துவது இந்த அகப்பற்றாகும். செய்வினையால் விளையும் பொருளையும் புகழையும் எனது எனது எனத் தொடர்புறத்துவது புறப்பற்று. செய்வானும் செய்வினையுமாய்த் தொடர்புறுத்துவது அகப்பற்றெனின், உடையானும் உடைமையுமாய் இயைபுறுப்பது புறப்பற்று. இவ்விருவகைப் பற்றுக்களின் உந்தலாலும் ஊக்கத்தாலும் ஒருவற்கு உலகவாழ்வு இயலுகின்றது; வாழ்வுக்கு இன்றயமையாத அறிவும் ஆண்மையும் பொருளும் புகழும் தொழிற்பட்டு உருப்பெறுகின்றன. ஒக்கலும் மக்களும் சுற்றமும் நட்பும் உலகியலிற் பற்றுடையார்க்கே அமைவன; பொன்னும் பொருளும் ஈட்டி, ஈதலும் துய்த்தலும் இசைநிறுத்தலும் செய்யும் வாழ்வுக்கு இந்த இருவகைப் பற்றுக்களே அச்சாணியாகும். வாழப் பிறப்பித்த இறைவன் வாழ்வாங்கு வாழ்தற்கு இப் பற்றுக்களை உளவாக்கி ஒவ்வோர் உயிரையும் இயக்குகின்றன. ஒருவர்க் கொருவர் உதவி வாழ்தலும் பிணங்கிப் பொருதலும் இப்பற்றுக்களின் விளைவேயாகும். இக்கருத்துப் புலப்படவே மணிவாசகப் பெருமான் “யான் எனது என்று அவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே” என்று உரைக்கின்றார். உலகியல் இன்பங்களை நுகர்பவரின் உள்ளத்தை இயக்கும் இவ்விருவகைப் பற்றும், நாளடைவில் பெருகித் தமக்கு இடமாகிய உள்ளத்தை முற்றவும் விழுங்கிவிடும். எழுகின்ற எண்ணம் அனைத்தும் இவ்விரண்டின் அடியாகவே இருக்கும். அரசியல் வாணிகம் தொழில் முதலிய நாட்டின் வாழ்க்கைக் கூறுகள் பலவும் இவ்விரண்டினாலே வளம் பெறுகின்றன. எங்கள் அரசு, எங்கள் தொழில், எங்கள் நாடு, எங்கள் சமுதாயம் என்ற உணர்வும், அதற்கேற்ற செயலும் தோன்றி நாட்டின் பெருமையை வளர்த்து மேம்படுத்தற்கு இப்பற்றுக்கள் இன்றியாமையாதே வேண்டப்படுகின்றன. சுற்றம் தழுவலும் பெரியோரைத் துணைக் கோடலும் யான் எனது என்ற பற்றுணர்வு பயன்படுதற்காகும். படைப் பெருக்கமும் உழுபடைச் சிறப்பும் இப் பற்றுக்கள் இல்வழி இல்லை. சுருங்கச் சொல்லின், இம்மை வாழ்வு ஏற்றம்பெற வேண்டின் யான் எனது என்னும் இருவகைப் பற்றும், உலகில் வாழ்பவனது உள்ளமுழுதும் நிறைந்து தொழிற்படவேண்டும் என்று தெளியலாம்.

 

      இவ்வுலகில் நீங்கி, இது நல்கும் இன்பங்களிற் பற்றவிட்டவழி மேலுலகாகிய அம்மை வாழ்வுக்கு மக்களுயிர் உரிமை எய்துகிறது. இவ்வுலகில் இன்பங்களால் விழுங்கப்பட்டிருக்கும் உயிரறிவு அவற்றிலிருந்து

நீங்கி வெளிவரவேண்டும். உலகியல் பொருளின்பங்களின் நிலையாமை அதற்குத்தக்க துணைபுரிகிறது. நிலையாமையும் அதுபற்றி எழும் துறவுணர்வும் இருவகைப்பற்றுக்களின் வலியை அழிக்கின்றன. அதனால், பற்றறுதி தோன்றி இறைவன் திருவருள் இயக்கத்தையும் சிறப்பையும் உணரும் ஞானம் பயக்கின்றது. அவ்வழியில் திருவருள் ஞானம் இன்பம் பயந்து தன்னையே நினைத்தொழுகுமாறு உயிரறிவை ஈர்த்துப் பிணிக்கின்றது. திருவருளிலே உயிரறிவு அழுந்தி, அதுவல்லது சார்பு பிறிதில்லை என்று உணர்ந்து, அதுவதுவாய் இயைந்துவிடுகிறது. அவ்வருட்கு முதலாகிய பரசிவத்தின் ஞானப்பரப்பில் உயிர் ஒன்றி உடனாகும் உயர்வு பெறுகிறது. அவ்வுயரிய பதம் பெற்ற உயிர் உலகியல் வாழ்வில் உடம்பொடு கூடியிருப்பினும், அதனை இயக்கும் இருவகைப்பற்றுக்கட்கு இரையாகி மாசு படுவதில்லை; உயிர் அப்பற்றுக்களை நாடாதவாறுபோல அப்பற்றுக்களும் உயிரை அடைய இயலுவதில்லை. இப்பற்றும் பாசமும் இல்லாத இன்பப்பெரும்பதத்தை உயிர் எங்ஙனம் அடைகிறது? எனின், பற்றற்ற வழி உண்மையுணர்வின்கண் திருவருள் ஞானவொளிபரப்பி அப்பெரும்பதத்தைச் சிந்தைக்கண் காட்டிச் சீர்பெறுவிக்கிறது. அங்ஙனம் காணுமிடத்துத் தெவிட்டாத பேரின்பம் பெருக்கெடுத்து வருவது உணர்ந்து, அதனோடு கலந்து அருள்வாழ்வு பெறுகிறது. இந்தப் பேரின்ப ஞான வாழ்வை நோக்குமிடத்து, ஞான நூல்களில் தலையாய மறைகளை உயிரறிவு நினைக்கின்றது. அம்மறைகள் பலவும் தன் அகத்தேயுள்ள மந்திரங்களாலும் பிராமணங்களாலும் வேள்வி வகைகளையே பெரிதெடுத்துப் பேசுகின்றன. அவை யாவும் உலகில் இம்மை வாழ்வுக்கு ஆக்கமாய், இருவகைப் பற்றுக்களின் காரியமாய் இயலுகின்றனவேயன்றி, ஞானப்பேற்றுக்குப் புறம்பாய்ப் பிற்பட்டு ஒழிக்கின்றன. ஒரோரு கால் ஞான வெல்லையை எட்டினும், அதனைக் கைவரப்பெறும் நெறியறியாது தடுமாறி “ஓம்” என  ஓலமிடுவதன்றி, வேறு செயலின்றி உலகியலிலே மடங்கிவிடுகின்றன. இவற்றைத் தம் அருளறிவுகொண்டு இன்ப வெள்ளத்தில் மூழ்கித் திளைக்கும் வடலூர் வள்ளற் பெருமான், அந்நிலையில் அறிவறை போகாது தமக்கு அந்த ஞானக் காட்சியின்பத்தை நல்கிய பரம்பொருளைப் பரவுகின்றார்.

2121.

     பற்றறியா முத்தர்தமை எல்லாம் வாழைப்
          பழம்போல விழுங்குகின்ற பரமே மாசு
     பெற்றறியாப் பெரும்பதமே பதத்தைக் காட்டும்
          பெருமானே ஆனந்தப் பேற்றின் வாழ்வே
     உற்றறியா தின்னுமின்னும் மறைக ளெல்லாம்
          ஒலமிட்டுத் தேடநின்ற ஒன்றே ஒன்றும்
     கற்றறியாப் பேதையேன் தனக்கும் இன்பம்
          கனிந்தளித்த அருட்கடலே கருணைத் தேவே.

உரை:

     முத்தரை விழுங்கும் பரமாய், மாசு பெறாத பெரும்பதத்தைக் காட்டும் பெருமானாய், ஆனந்தப் பேற்றின் வாழ்வாய், மறைகளெல்லாம் ஓலமிட்டுத் தேடநின்ற ஒன்றாய், பேதையேனுக்கும் இன்பம் அளித்த அருட் கடலாய்க் கருணைத் தேவனானவன் மகாதேவன். எ.று.

     இருவகைப் பற்றுக்களையும் அறவே துடைத்தெழிந்து முத்தராயின சான்றோர் மீள அவற்றை நினையாராதலின், அவர்களைப் “பற்றறியா முத்தர்” என மொழிகின்றார். அறிதல்-நினைத்தல்; நன்றியறிதல் என்றாற்போல. பரம்பொருளின் ஞானப்பரப்பினுள் தங்குதடையின்றி ஒடுங்குவது பற்றி, “வாழைப்பழம் போல விழுங்கின்ற பரமே” என்று கூறுகின்றார். ஞானவெளியில் இம்முத்தான்மாக்களாகிய சிவஞானிகள் எய்தும் பதம் உலகியற் பதங்கள்போல மாசும் மறுவும் எய்துவதன்று என்றற்கு, “மாசு பெற்றறியாய்ப் பெரும்பதம்” என்று புகழ்கின்றார். மாசு பெறுதற்கு ஏற்ற சிறுமைக்கிடமின்றித் தூய்மையே உருவாய் நிலவும் பெருமையுடையது என்றற்குப் “பெரும் பதம்” என்கிறார். மாசுற்ற பெத்த நிலையில் திருவருள் ஞானம் விளங்கித் தோன்றி அப் பெரும்பதத்தைக் காட்டாமையால், உண்மைஞானப் பேற்றல் சிந்தைக்கண் சிவம் தோன்றி அந்தப் பெரும்பதத்தின் பெருமையைக் காட்டியருளுவது விளங்கப் “பதத்தைக் காட்டும் பெருமானே” என்று கூறுகின்றார். “காண் பரார் கண்ணுதலாய் காட்டாக் காலே” என்று அருளுரை சிவத்தின் காட்டும் உபகாரத்தை வற்புறுத்துவது காண்க. மேலும் அப் பெரும்பதம் ஆனந்த நிலையம் என்றற்கு, “ஆனந்தப் பேற்றின் வாழ்வே” என்று இசைக்கின்றார். நான்மறைகள் முனிபுங்கவர்களால் செய்யப்பட்டவை; அவர்களும் மக்களேயாதலின் அவர்கள் அறிந்துரைப்பனவும் குறையுடையனவே; அதுபற்றியே சான்றோர் தேவஞானம் இறைவனைக் காட்டமாட்டாத பாசஞானம் என்றனர். “பாசஞானத்தாலும் பார்ப்பரியன் பரம்பரன்” எனச் சிவஞானசித்தியார் தெரிவிக்கிறது. அக்கருத்தை உட்கொண்டே “உற்றறியாது இன்னும் இன்னும் மறைகளெல்லாம் ஓலமிட்டுத் தேடநின்ற ஒன்றே” என்று உரைக்கின்றார். உற்றறியாது என்பதில், உற்றும் அறியாது எனத் தொக்குநின்ற உம்மையை விரித்தல்வேண்டும். வைதிக ஞானம் சிவத்தின் பெருநிலையை ஒரொருகால் காணினும், உலகியலையே அடிப்படையாகக் கொண்டமையால், அப்பெருநிலையின் பெருமைப்பண்பை உணரமாட்டாதாயிற்று. அதனால் தான், உற்றும் அறியாது இன்னும் ஓலமிட்டுத் தேடுகின்றன என்று வள்ளற்பெருமான் உரைக்கின்றார். “உலகியல் வேதநூல் ஒழுக்கம்” என்று சேக்கிழார் பெருமானும் தெரிவிக்கின்றார். அன்றியும் வேதங்கள் பலதெய்வக் கோட்பாடுடையவை; பரம்பொருள் ஒன்றே என்ற உணர்வு வேதாந்தம் எனப்படும் உபநிடதக் காலத்தில்தான் தோன்றிற்று. செத்துப் பிறக்கின்ற சிறு தெய்வங்களையே இருக்கு முதலிய வேதங்கள் புகழ்ந்து பரவுவது கண்ட முனிவர் சிலர், எல்லாவற்றையும் தனக்குள் அடக்கி ஒன்றாய் விளங்கும் பிரம்ப்பொருளைத் தாம் எழுதிய உபநிடதங்களில் உரைத்தனர். சாந்தோக்கிய வுபநிடதம் “ஏகம் ஏவ அத்விதீயம் பிரமம்” என்று கூறுவது காண்க. ஆதலால்தான் “ஓலமிட்டுத் தேட நின்ற ஒன்றே” என்று கூறுகிறார். அன்றியும், உபநிடதங்கள் கூறும் பிரமம் என்னும் சொல்லே அவ்வேதங்களிற் காணப்படும் தெய்வங்கட்கெல்லாம் பெரியது என்ற பொருள் தருவது.

     வேதவைதிக நூல்களைக் கல்லாமை ஒரபாலாக, கற்றற்குரிய உரிமை ஞான நூல்களையும் தான் கற்கவில்லை; அதனால் பேதையாகிய அடியேன் நின் திருவருளையே சிந்திப்பதொன்றொழிய வேறில்லாமை கண்டு தனக்கும் திருவருள் ஞான இன்பத்தை மனம் கனிந்தளித்தமையைப் பாராட்டிப் “பேதையேன் தனக்கும் இன்பம் கனிந்தளித்த அருட் கடலே கருணைத்தேவே” என்று பாடுகின்றார். பேதைக்கு இன்பம் அருளுவதென்பது பொருந்தாத ஒன்று; இறைவன் திருவுள்ளத்துக் கனிந்த அருள் பேதைமையைப் பொருளாகக் கொள்ளாது இன்பம் கொடுத்தமை தோன்ற, “இன்பம் கனிந்தளித்த அருட்கடலே” என்றார். கருணையே திருவுருவாக அமைந்தமையின் அக் கருணை அதனைப் பெறுவாரது பேதைமை முதலிய குறைகளை நோக்கும் இயல்புடைத்தன்று என்றற்கு கருணைத் தேவே என்றார்.

     இதனால், மகாதேவனது கருணை நலம் விளக்கப்படுவது காணலாம்.

     (51)