52

     52. ‘கண்டும் கண்டிலேன்’ என்ற திருவாதவூரர் பெருமானை நினைத்த வடலூர் வள்ளல் அவர் சிவத்திற் கலந்த வரலாற்றை நினைக்கின்றார். “புண்ணிய மன்றுள் ஆடும் ஈசனது அடிக்கீழ் எய்தி ஈறிலா அறிவானந்தத்தோடு கலந்து நின்றார்” என்று பரஞ்சோதியார் உரைப்பது நெஞ்சில் ஒளிர்கின்றது. “அறிவானந்தத் தேசு” மனக் கண்ணில் தோன்றுகிறது. அவ்வொளி, எங்கும் பரந்து எல்லாம் கடந்து பெருவெளியாய்ப் பிறங்குகிறது; ஒருபால் வாதவூரரை நோக்குகின்றார்; அவரது ஞானவொளியுருவம் முடிவறியாத உயரிய மலை போன்றது. இப் பெருமலையும் சிவவொளி தோய்ந்து கரைந்து வெளியாகிறது; அவ்வெளி சிவத்தின் பரவெளியிற் படிந்துவிடுகிறது. அதனை ஞானக் கண்ணிற் கண்டு இன்பமெய்தும் தம்மை வள்ளற்பெருமான் பார்க்கின்றார். மெய்யுணர்வன்றி வேறு உணர்வில்லாத வாதவூரரை நோக்கத் தமது உணர்வு இருள்கலந்த ஒளிபோலப் பொய்யுணர்வு நிறைந்திருப்பது தெரிகிறது. இந்நிலையில் சிவம் பரப்பும் பெருவெளி கண்டு இன்புறும் திறம் தமக்குண்டாகியிருப்பது வியப்பைத் தருகிறது. இதற்குக்காரணம் சிவபரம் பொருளின் திருவருட்பெருக்கே என்று உணர்ந்து உவகை மீதூர்கின்றார். வாதவூரர் மெய்யுணர்வே வடிவாயதற்கு ஏது, அவரது தூய அன்பு என்று உணர்விற் புலனாகலால், உண்மையன்பரைச் சிவம் தானே அடைந்து கையகத்துக் கனிபோல அவர்கட்குக் காட்சிதரும் அருட் செயலைப் பரவுகின்றார். அதனால், அன்பர் அன்பு மேலீட்டால் உள்ளம் கரைந்துருகுவாராக, அவ்வுள்ளக் கருத்தின் உட்புகுந்து அருளொளி தந்து அதன் வாயிலாக அவர்கள் சிவத்தை அடைந்துய்யும் நெறிகாட்டுவதை நம் வள்ளலார் காண்கின்றார். அந்த அருளொளி அவர்தம் புறத்தும் பரவி மேலோங்குகிறது. இருள் கலந்தொளிரும் பூதவொளி போலாது ஒள்ளொளியாய் விளங்குவது தெரிகிறுது. இவ்வொளி கற்பனையன்று உண்மையே என ஓர்ந்துணர்ந்து உவகையுறுகின்றார் வள்ளலார்.

2122.

     மெய்யுணர்ந்த வாதவூர் மலையைச் சுத்த
          வெளியாக்கிக் கலந்துகொண்ட வெளியே முற்றும்
     பொய்யுணர்ந்த எமைப்போல்வார் தமக்கும் இன்பம்
          புரிந்தருளும் கருணைவெள்ளப் பொற்பே அன்பர்
     கையுறைந்து வளர்நெல்லிக் கனியே உள்ளம்
          கரைந்துகரைந் துருகஅவர் கருத்தி னூடே
     உய்யுநெறி ஒளிகாட்டி வெளியும் உள்ளும்
          ஓங்குகின்ற சுயஞ்சுடரே உண்மைத் தேவே.

உரை:

     திருவாதவூரரைச் சுத்த வெளியாக்கிக் கலந்து கொண்ட வெளியாய், கருணைவெள்ளம் பொற்புருவமாய். மெய்யன்பர்க்கு அங்கை நெல்லிக்கனியாய், உய்யுநெறிக்குரிய ஒளிகாட்டியருளும் சுயஞ்சுடராய்த் திகழ்பவன் மகாதேவன். எ.று.

     திருவாதவூரர், தமது மெய்யுணர்வால், தமக்குமேல் ஒருவர் இல்லென உயர்ந்த மண்ணாளும் வேந்தர் முதல் தமக்குக் கீழ் ஒருவர் இன்றி மேலோர் ஏவின செய்யும் ஏவலர் உள்ளிட்ட அனைவரும் காண உயர்ந்த பெருமானாதலால், அவரை “மெய்யுணர்ந்த வாதவூர் மலை” என்று குறிக்கின்றார். திருமன்றில் ஞானநாடகமியற்றி ஞானவொளி பரப்பும் கூத்தப்பெருமான் சுடர்விட்டுக் கரையும் சூடம்போலக் கரைந்துருகச் செய்து இறுதியில் அவர் இருந்த இடத்தை மாசுமறுவற்ற வெளியாக்கியது பற்றி, “சுத்த வெளியாக்கி” என்று உரைக்கின்றார். இவ்வாறு வெளியாக்கியது ஏன் என்றெழும் வினாவுக்கு விடைதருவதுபோல், தான் நின்றாடும் இடம் ஞானப் பெருவெளியாதாலால், தான் அவரோடு கலத்தற்பொருட்டு வெளியாக்கினான் என்பது புலப்பட, “வெளியாக்கிக் கலந்து கொண்ட வெளியே” என்று விளம்புகின்றார். வாதவூரடிகளின் மாண்பும் அவரை ஞானவெளியாக்கி அதனுட் கலந்துகொண்டு உண்ர்த்தும் சிவத்தின் திருவருட் செயலும் நினைத்து நோக்குமிடத்து, நோக்குகின்ற தமக்கும் தம்மையொத்த பிறர்க்கும் இன்பமுண்டாதலை உணர்கின்ற வள்ளற்பெருமான், இவ்வின்பம் சிவன் தர வருவது உணர்ந்து அதனைத் தருதற்குக் காரணம் அருள் மிகுதியல்லது பிறிதில்லை எனத் தெளிந்தமை புலப்பட, “பொய்யுணர்ந்து எமைப்போல்வார் தமக்கும் இன்பம் புரிந்தருளும் பொற்பே” என்று பாராட்டுகின்றார். தம்மையும் வெளியாக்கிக் கலந்து கொள்ளாது உடலோடே உலகில் இருக்கச் செய்வதுபற்றி, மெய்யுணர்வுக்கு மாறாய “பொய்யுணர்ந்த எமைப் போல்வார்” என்று குறிக்கின்றார். தாம் உணர்ந்தவை யாவும் உடலோடு கூடிய உலக வாழ்க்கையுணர்வே என்றும், அது நிலையின்றித் தேய்ந்து பொய்யாவதாதலின், “முற்றும் பொய்யுணர்ந்த எமை” என்றும் விளக்குகின்றார். இத்தகைய எமக்கும் இன்பம் புரிந்தருளுவது திருவருட்குப் பொற்பு என்றற்குக் “கருணை வெள்ளப் பொற்பே” என்று போற்றுகின்றார். அன்பரது அன்பின் அளவுக்கு ஒப்பத் தோன்றி யருளுவது விளங்க “அன்பர் கையுறைந்து” என்று உரைத்து, இறைவனது எளிமையைக் காட்டி, அன்புறுத்திய திறம் விளங்க “நெல்லிக்கனி” என்று கூறுகின்றார். அவ்வருட்செயல் அங்கை நெல்லிக்கனிபோல மெய்ம்மையானது என்றொரு குறிப்பும் இங்கே புலப்படுத்துகின்றார். நெல்லியின் காய் வளர்ந்து கனியாகுமேயன்றிக் கனிக்கு வளர்ச்சி கிடையாது. “வளர்நெல்லிக்கனி” என்றது, எளிமையாய்ப் போந்து இன்புறுத்தும் அவ்வளவில் நில்லாது, தனது பெருமை முற்றும் கண்டுகளிக்குமாறு உணர்வைப் பெருக்கும் அருட்செயலைக் காட்டுதற் பொருட்டாம். திருவருள் உணர்வு பெருக, ஞானக் காட்சி விரிதலால் மெய்யன்பு பெருகி உள்ளம் கரைவது தோன்ற, “உள்ளம் கரைந்து கரைந்து உருக” என்றும், உருகுங்கால் அவர் கருத்தின்கண் அருள் ஒளி காட்டியருள்வதை “அவர் கருத்தினூடே ஒளிகாட்டி” என்றும் உரைக்கின்றார். இதனை ஞானசம்பந்தர், “உருகுவார் உள்ளத்து ஒண்சுடர்” என்று அறிவிக்கின்றார். அவ்வொளி உய்யும் நெறி காட்டுமென்றற்கு “உய்யுநெறி ஒளி காட்டி” என்கிறார். ஞானவான்களின் அகத்தே நிறையும் ஞானவொளி அவர் மேனியிலும் திகழ்வது பற்றி “வெளியும் உள்ளும் ஓங்குகின்ற சுயஞ்சுடரே” என்று உரைக்கின்றார். உண்மைப் பொருளாகிய பரம்பொருட்டு அஃது இயல்பு என்பதை, “அறிநீர்மையில் அறியும் அவர்க்கறிவும் அறிவருளும் குறி நீர்மையர்” என்று ஞானசம்பந்தர் அருளுவதால் அறியலாம்.

     இதனால் மெய்யுணர்ந்த வாதவூரடிகள் போன்ற மேலோரைச் சிவபோகத்தில் சேர்க்கும் திருவருள் திறமும் அன்புக்கு எளிமையாய் தோன்றி அறிவருளி, நெறிகாட்டி யுய்விக்கும் திறமும் தெளிவிப்பது பயன்.

     (52)