53

      53. பரம்பொருளை உலகில் காணப்படும் பொருள்களில் காண்கின்றார். ஒலி, வடிவு, நிறம், சுவை முதலியவற்றின் மேல் செல்லும் செவி, கண் முதலிய பொறிகளால், கேட்டல், காண்டல், நாற்றம், உற்றறிதல் முதலிய தொழில்களைச் செய்து பெறும் பயன் யாவும் பரம்பொருளின் அருள். அவை எங்கும் மலிந்திருத்தற்கும் அதுவே காரணம். பொறியும் புலனும் பொருளும் பயனும் மலிவும் எல்லா வகையும், உலகியல் வாழ்வுக்குத் துணையாம் வகையில் ஒன்றாய் இலகுதற்கும் தான் ஒன்றே காரணமாகிறது. ஒன்றாகியும், எல்லாம் குறைவற நிகழ்தற்கும் அதன் வல்லமையே சிறந்து தோன்றுகிறது. வேறுவேறு பொருள்கள் தோன்றி வேறு வேறு செயல் வகையால் விளக்கமுறச் செய்யினும், மற்ற உயிர்களைப்போல் பரம்பொருள் சலிப்பதில்லை. எல்லாம் தன்வயமாய்த் தன் மயமாய்ச் செய்து நிற்பதில் தனிப்பொருளாக விளங்குகிறது. மக்களினத்திற் காணப்படும் ஆண், பெண், அலி என்ற கூறுபாட்டுக்கு இடமாகாது அருள்வடிவாய்த் திகழ்கிறது. இத்தகைய சிவபரம் பொருள் பேரின்பமாகிய போகத்தில் அமர்ந்திருப்பதையும் வள்ளலார் கண்டறிகின்றார்.

2123.

     ஒலிவடிவு நிறஞ்சுவைகள் நாற்றம் ஊற்றம்
          உறுதொழில்கள் பயன்பலவே றுளவாய் எங்கும்
     மலிவகையாய் எவ்வகையும் ஒன்றாய் ஒன்றும்
          மாட்டாதாய் எல்லாமும் வல்ல தாகிச்
     சலிவகையில் லாதமுதற் பொருளே எல்லாம்
          தன்மயமாய் விளங்குகின்ற தனியே ஆண் பெண்
     அலிவகையில் லாதவகை கடந்து நின்ற
          அருட்சிவமே சிவபோகத் தமைந்த தேவே.

உரை:

     ஒலி வடிவு நிறம் முதலியவாய், சுவைமேற் செல்லும் நாற்றம் ஊற்றம் முதலிய தொழிற்பயனாய், எங்கும் மலிவகையாய், ஒன்றாய், எல்லாம் வல்லதாய், சலிவகையில்லாத முதற் பொருளாய், எல்லாம் தன் மயமாய் நிற்கும் தனியாய், ஆண் பெண் அலி என்ற வகை கடந்து அருட்சிவமாவன் சிவயோகத்து அமைந்த தேவதேவன். எ.று.

     உலக வாழ்க்கைக்குத் துணையாம் வகையில் எவ்வகைப் பொருளினும் பரம்பொருள் வேற்ற ஒன்றாய்க் கலந்திருக்கினும், பொருள்கள் அப் பரம்பொருளாகமாட்டா என்றற்கு, 'ஒன்றும் மாட்டாதாய்' என்று கூறுகிறார். மக்களினம் ஆண், பெண், அலி என மூவகையாதலும், அல்லாத உயிர்ப் பொருள்களிடத்து அவ்வேறுபாடு இல்லாமையும் கண்டமை புலப்பட, ஆண் பெண் அலி வகை, அல்லாதவை எனப் பிரித்துரைக்கின்றார். பரம்பொருளின் அருள் விளங்கும் நிலை சிவம் என்றற்கு “அருட்சிவமே” என்றும், அந்நிலை சிவபோகம் என்றற்குச் “சிவபோகத் தமைந்த தேவே” என்றும் சிறப்பிக்கின்றார்.

     (53)