54
54. இனி, புராண இதிகாசங்கள்
நாம் காண நிற்கும் அண்டங்கள் பல கோடி என்று கூறுவதை நினைக்கின்றார். ‘அண்டப் பகுதியின்
உண்டைப் பிறக்கம், அளப்பருந்தன்மை வளப்பெருக் காட்சி ஒன்றனுக்கொன்று நிறைறெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன’ என மணிவாசகரும் கூறுவர். பலவேறு சக்திகள் சேர்ந்து பிண்டித்து
நிற்பது அணு. அதனால் பிண்டம் என்றும் அதனைக் கூறுவர். அண்டம் அளப்பரும் பெருமைக்கும் பிண்டம்
அளப்பரும் சிறுமைக்கும் எல்லையாகும். அண்டங்கள் எத்துணைப் பலவாய்ப் பேதமாய் உள்ளனவோ அத்துணைப்
பேதமும் பன்மையும் பிண்டத்துக்கும் உண்டு. இவற்றையெல்லாம் எண்ணுகின்றார் வடலூர் வள்ளல்.
பின்பு நாம் வாழும் அண்டத்தைப் பார்க்கின்றார். கடலையும் மண்ணையும் இவ்விரண்டினுள்ளும் உள்ளவற்றையும்
வானத்தையும் வானத்திலுள்ள மீனையும், இவற்றுக்கும் நிலத்துக்கும் இடையே பரக்கும் அணுக்களையும்,
இவற்றின் வேறாக உள்ளவற்றையும் நினைந்து இவை இத்துணையென எண்ணக் கூடுமோ எனச் சிந்திக்கின்றார்.
சிந்தனையில் முயன்றால் இவற்றையும் அளந்துவிடலாம்; ஆயினும் பரம்பொருளை யாராலும் அளப்பரிது
என்று வேதங்கள் கூறுவது நினைவில் எழுகிறது. ‘வேதமே நூல்கட்கெல்லாம் மிக்கது’ என்றும், ‘வேதமே
எல்லாம் காட்டும் விளக்கெனப்படுவது’ என்றும், ‘விளங்கிய கலைகட் கெல்லாம் இறையதும் வேத நன்னூல்,
களங்கமில் பொருளாம் ஞானக் கண்ணதும் வேதநன்னூல்’ என்றும் சான்றோர் கூறுவதை நினைக்கின்றார்.
வேத நூல் அறிவாலும் பரம்பொருள் அறியப்படாதாயின் வேதத்துக்கும் நெடுந்தூரத்தில் உள்ளது பரம்பொருள்
எனத் துணிகின்றார்.
2124. பேராய அண்டங்கள் பலவும் பிண்ட
பேதங்கள் பற்பலவும் பிண்டாண் டத்தின்
வாராய பலபொருளும் கடலும் மண்ணும்
மலையுளவும் கடலுளவும் மணலும்வானும்
ஊராத வான்மீனும் அணுவும் மற்றை
உள்ளனவும் அளந்திடலாம் ஒகோ உன்னை
ஆராலும் அளப்பரிதென் றனந்த வேதம்
அறைந்திளைக்க அதிதூர மாகுந் தேவே
உரை: அண்ட பிண்ட பேதமும், பிண்டாண்டத்தின் பொருளும் கடலும் மண்ணும் மலையும் அவற்றின்கண் உள்ளனுவும், வானும் வான் மீனும், அணுவும் மற்றைய உள்ளனவும் ஆகிய அனைத்தையும் அளந்திடினும், அளப்பரிது என்று அனந்த வேதம் அறைந்து சோர்ந்தொழியும் அதிதூரத்திருப்பவன் மகாதேவன். எ.று.
அண்டங்கள் யாவும் நிலவுலகு போலும் உண்டைகள் எனப்படுதலால், 'பேராய அண்டங்கள்' என்று சிறப்பிக்கின்றார். நீரில் ஊர்ந்தோடும் மீன்களின் வேறுபடுத்தற்கு 'ஊராத வான்மீன்' என்கிறார். வேதங்கள் எண்ணிறந்தன என்றும், காலவெள்ளத்தில் மறைந்தன போக எஞ்சியவற்றை வியாசர் நான்காக வகுத்தனர் என்றும், கந்தபுராணம் முதலியன கூறுகின்றன. அதுபற்றியே 'அனந்த வேதம், என்றார். வேதமும், பரம்பொருளாகிய அனந்தத்தைக் காணமாட்டாமை பற்றி “அனந்த வேதம்” எனப்பட்டது என்பதும் உண்டு. (54)
|