55

       55. சரியையாதி தவயோகத்தை விட்டு, உடலை ஒறுத்தாற்றும் யோக நெறியும் வேறே உண்டு. முன்னைய சமயகுரவர்கள் இன்றைய மக்கட்கு ஆகாதென்று அதனை விலக்கிவிட்டனர். அன்றியும், காடு மலைகளில் தனித்து உறைவதும், மழை பனி வெயில்களால் உடலை வாட்டுவதும், ஆங்காங்குக் கிடைக்கும் கனி சருகு கிழங்குகளை யுண்பதும், நீர் பலகால் மூழ்குவதும், நிலத்திற் கிடப்பதும் முதலாகத் தம்மைச் சுற்றிலும் தீ மூட்டி நடுவே ஊணும் உறக்குமும் இன்றி, ஒன்றிய உள்ளத்துடன் புரியும் யோக நெறியும் உண்டெனக் கூறுவர். அந் நெறிகளில் நிற்பவர்க்கும் இறைவனது அருட்காட்சி எய்தாமற் போவதுண்டு. அந்நெறிகள் பலவற்றையும் மக்கட்குரைக்கும் வேதங்களுக்கும் அவற்றை ஒதியுணரும் முனிவர்க்கும் இறைவனது இன்பப்பேறு கிடைப்பதில்லை. ஞானநெறியில் முயன்று ஞானமயமாய் நிறைந்த அருட்செல்வர்பால், சிவ பரம்பொருள் அவர் உள்ளம் கலந்து உவட்டா இன்பம் தருவதாம் என்ற உண்மையை வடலூரடிகள் கல்வி கேள்விகளாலும் உண்மையனுபவத்தாலும் உணர்கின்றார்.

 

2125.

     கற்பங்கள் பலகோடி செல்லத் தீய
          கனலினடு ஊசியின்மேல் காலை ஊன்றிப்
     பொற்பறமெய் உணவின்றி உறக்க மின்றிப்
          புலர்ந்தெலும்பு புலப்படஐம் பொறியை ஓம்பி
     நிற்பவருக் கொளித்துமறைக் கொளித்து யோக
          நீண்முனிவர்க் கொளித்தமரர்க் கொளித்து மேலாம்
     சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து ஞானத்
          திருவாளர் உட்கலந்த தேவ தேவே.

உரை:

     கற்பகோடி காலம் கனல் நடுவில் ஊசிமேற் காலையூன்றி உடலுணர்வு உறக்கமின்றிப் புலர்ந்து, எலும்பு புலப்பட, ஐம்பொறி ஓம்பி நிற்பவர்க்கும் மறைக்கும் நீள்முனிவர்க்கும் அமரர்க்கும் ஒளித்துச் சிற்பத்தில் இன்மயமாய் நிறைந்து, ஞானத்திருவாளர்களின் உட்கலந்து நிற்பவன் தேவதேவன். எ.று.

     இதன்கண் ஊசியின்மேற் காலையூன்றித் தவம் செய்யுங்கால் பிறவுயிர்கள் நெருங்கித் தீமை செய்யாமைப் பொருட்டுச் சுற்றிலும் தீ வளர்த்தலால், 'தீயகனலின் நடு' என்று கூறுகிறார். நெருங்கும் உயிர் கட்குத் தீங்குசெய்வது பற்றித் தவத்தார்க்கு அரண் செய்வதாயினும் அத்தீ தீயதே என்றற்குத் “தீயகனல்” என்று தெரிவிக்கின்றார். ஊசியின் மேல் காலை ஊன்றி நிற்பது, இரேசக பூரக பிராணாயாமங்களால் உடலை இலே சாக்கி நிறுத்துவதை உட்கொண்டுளது. அங்ஙனம் நிறுகுமிடத்து மனம் பொறிவழி யோடாது ஒன்றி நிற்கும் என்பர். உடற்குப் பொற்பும் வளமையும் தருவன உணவும் உறக்கமுமாகும். இரண்டும் இல்வழிப் பொற்பும் வளமும் இழந்து, அவ்வுடம்பை யுண்ணும் விலங்கும் புள்ளும் நெருங்காவாம். அதுபற்றியே 'பொற்பற மெய் உணவு உறக்கமின்றிப் புலர்ந்து, என்று வள்ளலார் உரைக்கின்றார். அந்நிலையில், அவரது உடலின் நிலையை, 'எலும்பு புலப்பட' நிற்கும் என்கிறார். நக்கீரரும் 'ஊன்கெட என்பெழுந்து இயங்கும் யாக்கையர்' என்று கூறுவர். உலகியற் பக்கம் பரந்து அது நல்கும் பல்வேறு காட்சிகளைக் கண்டு மனத்துக்களித்து அதன் ஒருமையைச் சிதைத்தலால் 'ஐம்பொறியை ஓம்பி' என்று இயம்புகிறார். உடலின்றும் பிரியும் உயிர்க்கு யாதானுமொரு நோய் வாயிலாகும்; நோயே இல்வழி உயிர் பிரிவதின்றி நெடுங்காலம் உடம்போடே கிடக்கும்.

     இக் கூறிய கடுந்தவத்தால் யோகியருடல் நோயற்ற நிலையை எய்துவதால், அவர்கள், 'கற்பகங்கள் பலகோடி' வாழ்வாராகின்றனர். ஆயினும் அவரது தவமும், உடலை ஓம்புதற்கும் மெய்ப்பொருட்காட்சி பெறுவதற்குமான இரண்டுபட்டு அலமருதலால், பரசிவத்தைக் காண்டற்கு மாட்டாவாகின்றன. அதுபற்றியே, 'பொறியை ஓம்பி நிற்பவர்க்கு ஒளித்து' என்றார். யோக முறைகளையும் தவநெறிகளையும் உரைக்கும் வேதங்கள், மக்களால் உரைக்கப்பட்டன வாகலின், அவற்றாலும் காண்பதரிது என்பதைச் சான்றோர் பலரும் பலகாலும் எடுத்துரைத்தலால், 'மறைக்கொளித்து' என்றார். முதலிற் சொன்னது யோக நெறியில் முயல்பவர்களை; முயன்று நெடிய பல சித்திகளைப் பெற்ற பெரியவர்களை 'யோக நீள் முனிவர்' என்று குறிக்கின்றார். இம் முனிவர்களும் சிவத்தோடு ஒன்றியுடனாகும் அத்துவிதமாகாது, முனிவர்களாய் உலகில் வாழ்தற்குக் காரணம், சிற்பதமும் சின்மயமும் பெறாமையாதலால், 'யோக நீண்முனிவர்க் கொளித்து' என்றார். அமரர் பெற்றுள்ள வாழ்வு போகம் நோக்கி யதேயன்றி, ஞானம் நோக்கியதன்று. அதனால் 'அமரர்க்கொளித்து' என்று இசைக்கின்றார்.

     (55)