56
56. யோக நெறியின் துன்பத்தை
நன்கறிந்தும் யோகியர் அதனை மேற்கொள்வதற்குக் காரணம் யாதாகலாம் என வடலூர் அடிகள் சிந்திக்கின்றார்.
பத்தி நெறியில் நிற்கின்ற பெரியோர்களையும் நோக்குகின்றார். அவர்கள் பரம்பொருளின்
அருட்பேற்றை மனத்தால் நினைத்து அதன் பெருமைகளையும் அருட்செயல்களையும் வாயால் எடுத்தோதி,
உளம் கரைந்து உடல் சிலிர்த்துக் கண்ணீர் பெருக்கிக் கதறிப் புலம்புகின்றார்கள். இவ்வாறு
பலகாலம் முயன்றும் திருவருட்பேறு எய்தாமை கண்டு வருந்திப் புலம்புவதை மெய்ம்மை யுணரும் மேலோர்
கண்டு அஃது இனி வாராது என்று தெரிந்து யோக நெறியை மேற்கொண்டனர் போலும் எனத் தெளிகின்றார்.
அவரது யோகத்தைத் தாமும் எண்ணிப் பார்க்கின்றார். யோக உறுப்பாகிய அந்தக் கரணத்தை ஒடுக்கி
அதன் செயலை விலக்குகின்றார்கள். இடைகலை பிங்கலை முதலிய கலைகளை நெறிப்படுத்தடக்குகின்றார்கள்.
பொறிபுலன்களாகிய புறக்கருவிகளின் வாயில்களை அவிக்கின்றார்கள். அவற்றிற்கு முதற் காரணமாகிய
மாயை செய்யும் மயக்கத்தைப் போக்குகின்றார்கள். மனம் நினைத்தலும், வாய் பேசுதலும், உடல்
செயல்படுதலுமாகிய வினைகட்கு மூலமாகிய கன்ம மலத்தையும் அக்கன்மங்கள் நல்கும் அறிவையும் விலக்குகின்றனர்.
இக் கன்மமும் மாயையும் உயிரைத் தொடர்தற்குக் காரணம் சகச மலமாவது எண்ணி, அதனால் உளதாகும்
அறியாமை தடிப்பை நீக்கி மெய்ப்பொருள் என்னும் அதனைக் காண்பதாகிய தான் என்னும் சுட்டியறிவும்
அறிவகற்றி நிற்கும் நிலையில், பரம்பொருள் அவரொடு கலந்து நிற்கும் திறத்தை அடிகளார் அறிகின்றார்.
‘நாலந்தக் கரணமும் ஒரு நெறியாய்ச் சித்திக்கே உய்த்திட்டுத் திகழ்ந்த மெய்ப்பரம்பொருள்
சேர்வார் தாமே தானாகச் செயுமவன்’ என்று ஞானசம்பந்தரும், பின்வந்த சான்றோர்களும் அறிவுறுத்துவதை
உணர்கின்றார்.
2126. மட்டகன்ற நெடுங்காலம் மனத்தால் வாக்கால்
மதித்திடினும் புலம்பிடினும் வாரா தென்றே
கட்டகன்ற மெய்யறிவோர் கரணம் நீக்கிக்
கலையகற்றிக் கருவயெலாம் கழற்றி மாயை
விட்டகன்று கருமமல போதம் யாவும்
விடுத்தொழித்துச் சகலமல வீக்கம் நீக்கிச்
சுட்டகன்று நிற்கஅவர் தம்மை முற்றும்
சூழ்ந்துகலந் திடுஞ்சிவமே துரியத் தேவே.
உரை: மனவாக்குகளால் முறையே மதிக்கினும் புலம்பினும் வாராதென்று மெய்யறிவோர் கலை கருவி கரணம் எல்லாம் கழற்றி, மாயை அகன்று கன்ம மலபோதம் விடுத்துச் சகசமல வீக்கம் நீக்கச் சுட்டகன்று நிற்க, அந்நிலையில் அவரைச் சூழ்ந்து கலந்து கொள்ளும் சிவன் துரியத்தே விளங்கும் தேவதேவன். எ.று.
அளவிறந்த நெடுங்காலம் என்பதற்கு, “மட்டகன்ற நெடுங்காலம்” என்கிறார். மனத்தால் மதித்தும், வாக்காற் புலம்பியும் நெடுங்காலம் கழித்தமை தோன்ற இவ்வாறு கூறுகிறார். இந் நெறிக்கண் நின்றவர் பலர். அவருள் ஒருவரும் இன்னதன்மைத்து என எடுத்துரையாமல் 'இன்னவுரு இன்ன நிறம் என்றறிவதேல் அரிது' என்றும், 'இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன், இவன் இறைவன் என்றெழுதிக்காட்டொணுது' என்றும், 'இன்ன தன்மையன் என்றறியவொண்ணா எம்மான்' என்றும், “இது அவன் திருவுரு இவன் அவன் எனவே அமரரும் அறியார்” என்றும், “கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரை” என்றும் உரைப்பதால், 'வாராதென்று மெய்யறிவோர்' கண்டவர் என்று கூறுகின்றார். மெய்ம்மை காணும் நுண்ணறிவு படைத்த மேலோர் என்றற்கு, அவரை 'மெய்யறிவோர்' என்று கூறுகிறார். மெய்யறிவோர் மெய்ம்மை காண்பதே கருத்தாகவுடையவராதலால் அவர்கள் வாராதென்று துணிந்தும் முயற்சியைக் கைவிடுபவரல்லர். ஆதலால் உயிரறிவை ஒருமைப்படுத்திக் கனவும் சுமுத்தியும் நிகழும் கழுத்தையும் இதயத்தையும் கடந்து உந்தித் தானமாகிய துரியத்தில் நிறுத்திசத் சிந்தித்திருப்பர் என்றும், அங்கே சிவபரம் பொருள் கலந்துகொள்ளும் என்றும் விளக்குவாராய், வடலூர் அடிகளார், 'சுட்டகன்று நிற்க அவர் தம்மை முற்றும் சூழ்ந்து கலந்திடும் சிவமே' என்றும், துரியத்து நிகழும் அந்நிலையில் பரதெய்வமாகிய அச்சிவம் காட்சிப்படுமாறு காட்டற்குத், 'துரியத் தேவே' என்றும் சொல்லுகின்றார். ஏனைக் கரணமும் கலையும் பொறியும் கன்மமும் மாயையும் சகசமலத்தையும் நீக்கி உயிரறிவை அறிவுருவாக்குதற்குத் துணை செயவனவே அன்றிச் சிவத்தைக் காட்டுவன அல்ல என்பது விளங்க, அவற்றின் நீக்கத்தைப் படிப்படியாக எடுத்துரைக்கின்றார். (56)
|