57

     57. இனி, ஆகமாந்தமாகிய சிவநெறிக்கண் நின்று, சிவத்தின் உருவம் அருவம் அருவுருவம் என்ற முக்கூற்றில் உருவக்கூறுகளான ஈசன், உருத்திரன், மால், அயன், என்ற நான்கு; அருவக் கூறாகிய சிவம், சத்தி, நாதம், விந்து, என்ற நான்கு; அருவுருவமாகிய சதாசிவம் ஒன்று, அவற்றோடு மேல்நின்ற பரசிவம், பராசக்தி, பரவிந்து என்ற நான்கு ஆகிய இவற்றைக் கடந்து அப்பால் பிரணவமென ஒன்றாய், அவ்வொன்றின் உட்கூறுகளான அகர வுகர மகரங்களின் நடுநின்ற ஒன்றன உகரமாய், அதன் நடுவுள்முகமாகும் நமசிவாய எனவும் புற வட்டமாக சிவயநம எனவும் அமையும் திருஅம்பலத்தின் ஒரு முதலாய் நின்று சிவஞானநிறைவால் எண்குணம் அமைந்த முத்தான்மாக்களை தன்மம் ஞானம் வைராக்கியம் ஐசுவரியம் என்ற குணபாவகம் நான்கினோடு, கலை முதல் மண் ஈறாக மூலப்பகுதி யுட்படத் தத்துவம் முப்பத்திரண்டுக்கும் மேலே இருத்தி வாழ்விக்கும் இறைவனாய், ஏனையோர்க்கு மாயைவிடத்தே கருக்கொண்டு தோன்றும் உடல், கரணம், புவனம், போகம் நான்கையும் அவற்றோடு கூடிய வாழ்வுக்கு உறுதியென அமைந்த அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கையும் உபதேசமுறையிற் காட்டி இவற்றின் வேறாய் இவற்றைக் கடந்து நிற்கும் கடவுளாவன் தேவவேன் என்று உரைக்கின்றார்.

2127.

     உருநான்கும் அருநான்கும் நடுவே நின்ற
          உருஅருவ மொன்றும்இவை உடன்மேல் உற்ற
     ஒருநான்கும் இவைகடந்த ஒன்று மாய்அவ்
          வொன்றினடு வாய்நடுவுள் ஒன்றாய் நின்றே
     இருநான்கும் அமைந்தவரை நான்கி னேடும்
          எண்ணான்கின் மேலிருத்தும் இறையே மாயைக்
     கருநான்கும் பொருணான்கும் காட்டு முக்கட்
          கடவுளே கடவுளர்கள் கருதுந் தேவே.

உரை:

     உருநான்கு அருநான்கு நடுநின்ற உருவருவம் ஒன்று; இவற்றுடன் மேல் நின்ற நான்கு; இவை கடந்த ஒன்றுமாய் ஒன்றின் நடுவாய் நடுவுள் ஒன்றாய் நின்று, இருநான்கும் அமைந்தவரை நான்கினோடும் எண்ணான்கின்மேல் இருத்தும் இறையாய், மாயைக் கருநான்கும் காட்டும் முக்கண் கடவுளாய்க் கடவுளரால் கருதப்படுபவன் மகாதேவன். எ.று.

     இதன்கண், ஒரு நான்கும் கடந்த ஒன்று என்றது ஓங்காரப் பிரணவம். பிரணவம் அகரம் உகரம் மகரம் என்று பிரியும். நடுவாவது உகரம். அந் நடுவின் உள்முகம் நமச்சிவாய என்பது. அதன் நடுவில் ஒன்றாய் இலகுவது 'சி' என்னும் முதற்பொருள். இவ்வுகரத்தின் புறவட்டம் சிவாயநம. இரண்டும் சேர்ந்தது திருவம்பலம். உள்வட்டம் சிதாகாசம்; புறவட்டம் பராகாசம் இதனை,

     'நாடும் பிரணவம் நடுவிரு பக்கமும்
     ஆடும் அவர் வான் அமர்ந்தங்கு நின்றது
     நாடும் நடுவுண் முகம் நமசிவாய
     ஆடும் சிவயநம புறவட்டத் தாயதே'
     (திருமந். 922)

என்று சான்றோர் குறிப்பது காண்க. நான்கினோடும் என்பதை எண்ணான்கு என்பதோடு கூட்டித் தத்துவம் முப்பத்தாறையும் கொள்வர். அது பொருந்தாது. நான்கினோடும் என்பது இருத்தி யென்பதனோடு முடிவதே இலக்கண மரபு. 'கலையாதி மண்ணந்தம் காணில் அவை மாயை, நிலையாவாம்', என்று மெய்கண்டார் உரைத்தருளுவதால், கலை முதல் மண் ஈறாக எண்ணப்படும் தத்துவம் முப்பத்தொன்று; அவற்றோடு மூலப் பகுதியின் விளக்கமாகிய குண தத்துவம் சேர முப்பத்திரண்டா தலைக் கருதியே 'எண்ணான்கு' எனக் கூறுகின்றார். இம் முப்பத்திரண்டும் சேர்ந்தே இவ்வுலகமும் உட்ம்பும் உருவாகியுள்ளன. உயிர்கட்கு இவ்வுலகுடம்புகளின் தொடர்பறுப்பதே இறைவன் திருவுள்ளமாதலால், “எண்ணான்கின் மேல் இருத்தும் இறையே” என்று இயம்புகிறார். மேல் என்பது இறைவன், 'நவந்தரு பேதமாக நடிக்கும்' சுத்த மாயா மண்டலமாகிய ஞானாகாசம். எண்குணத்தர் உடம்பொடு கூடியிருத்தலின் அவர் கட்கு அறம், அறிவு, உரம், செல்வம், என்ற நான்கும் வேண்டப்படுதலின் நான்கினோடும் என “உயர்பின் வழித்தாகிய ஒடுக்கொடுத்துச்” சிறப்பிக்கின்றார்.

     (57)