58

     58. வேதம் ஆகமம் என்ற இரண்டையும் கண்ட வள்ளலார், இடை நின்ற உபநிடதங்களையும் கலைநூல்களையும் எண்ணுகின்றார். உபநிடதங்கள் வேதத்தின் முடிபொருள் உணர்த்துவன என்று கொண்டு வேதாந்தம் என்பதும் சிவஞானத்தை முடிந்த முடிபாக வகுத்துரைப்பது பற்றிச் சிவாகமத்தைச் சித்தாந்தம் என்பதும் வழக்கம். ‘வேதசாரம் இதம் தந்த்ரம் சித்தாந்தம் பரமம் சுபம்’ என்று மகுடாகமம் கூறுகிறது. இவற்றுள் வேதப்பொருளைப் பரம்பொருளே உரைத்தமையால், அதனை ‘அபௌருஷேயம்’ என்பாரும், பரம்பொருள் உரைத்த செம்பொருளே மக்களினத்தில் உயர்ந்தோரான முனிபுங்கவர்கள் ஓதப்படும் ஓத்துவடிவில் உரைத்தவையாகலின், ‘வேதம் பௌருஷேயம்’ என்பாரும் இரு திறத்தினர் உண்டு. ‘அரியகற்று ஆசற்றார் கண்ணும் இன்மை அரிதே வெளிறு’ என்ற தமிழ்மறைக் கொப்ப, மக்களால் உரைக்கப்பட்ட வேதங்களும் உபநிடதங்களும் ஆகமங்களும் பிற கலைகளும் பரம்பொருளை முற்றவும் கண்டுரைக்கும் ஆற்றலுடையனவல்ல என்று கற்ற கல்வியாலும் கேட்கப்படும் கேள்வியாலும் தெளிகின்றார். மக்களின் இயற்கையறிவை ஊனக்கண் என்றும், செயற்கையான நூலறிவைப் பாசம் என்றும் குறித்து இவையிரண்டும் பரம்பொருளாகிய இறைவனை அறியா என்ற கருத்துப்பட ‘ஊனக்கண் பாசம் உணரா பதியை’ என்று சிவஞானபோதமும், அதற்கு உரை கூறிய சிவஞானசித்தி, ‘பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிய பரம் பரணை’ என்று கூறுவதையும் வள்ளலார் பார்க்கின்றார். இவ்வுண்மையைத் தமிழ்மக்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென்ற அருளுணர்வு வள்ளலாரின் உள்ளத்தே எழுகின்றது. அதனால் அவற்றைப்பற்றி எளிய சொற்களால் கேட்போர் மனம் தெளிவுற்றுக் குளிர்ச்சி எய்துமாறு இயம்புகிறார்.

2128.

     பாங்குளநாம் தெரிதுமெனத் துணிந்து கோடிப்
          பழமறைகள் தனித்தனியே பாடிப் பாடி
     ஈங்குளதென் றங்குளதென் றோடு யோடி
          இளைத்திளைத்துத் தொடர்ந்து தொடர்ந்தெட்டுந் தோறும்
     வாங்குபர வெளிமுழுதும் நீண்டு நீண்டு
          மறைந்துமறைந் தொளிக்கின்ற மணியே எங்கும்
     தேங்குபர மானந்த வெள்ள மேசச்
          சிதானந்த அருடிசிவமே தேவ தேவே.

உரை:

     நாம் தெரிதும் என்று பழமறைகள் தனித்தனியே பாடிப் பாடி, ஈங்குளது ஆங்குளது என ஓடியோடி இளைத்துத், தொடர்ந்து தொடர்ந்து எட்டுந்தோறும் பரவெளி முழுதும் நீண்டு நீண்டு மன்றந்து ஒளிக்கும் மணியாய் பரமானந்த வெள்ளமாய்ச் சச்சிதானந்த அருட்சிவமாவன் தேவதேவன். எ.று.

     வேதங்கள் நூல்வகையுள் அடங்கி அசேதனமாதலின், அவற்றை ஓதியுணர்ந்து பிறர்க்கும் உரைக்கும் வேத ஆசிரியர்களான முனிபுங்கவர் வேதபாரகர், வேதநெறி ஒழுகும் வேதியர் முதலாயினர் செயலை வேதங்கள் செய்வதாக அவற்றின் மேல் உரைப்பது இலக்கண மரபாதலின், வள்ளலார், வேதங்கள் தமக்குரிய பொருளை வழங்கிய பரம்பொருளைப் பாடியும் தேடியோடியும் தொடர்ந்தும் காணமாட்டாது புலம்புவதாக உரைக்கின்றார். மணிவாசகரும் 'வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்த கன்ற நுண்ணியனே' என்று கூறியருளுவது வள்ளலார்க்கு ஆதரவு தருகிறது. பரமன் அறிவுறுத்த பொருளைத் தம்மகத்தே கொண்டிருத்தல் வேதங்கள்பால் அமைந்த பாங்கு. வேதங்கள் எண்ணிறந்தனவாதலால் “கோடிப் பழமறைகள்” என்று உரைக்கின்றார். ஆயுந்தோறும் ஆயுந்தோறும் ஆராய்ச்சிக்கு அகப்படுவது போலத் தோன்றி அப்பாலுக்கப்பாலாய்ச் சென்று மறைதல் பற்றிப் பரவெளி முழுதும் “நீண்டு நீண்டு மறைந்து மறைந்து ஓளிக்கின்ற மணியே” என்று தெரிவிக்கின்றார். ஆய்வார்க்கு ஆயுந்தோறும் பெரியதோர் இன்பம் தந்து ஊக்குவது பற்றி “எங்கும் தேங்கு பரமானந்த வெள்ளமே” என்றும், “சச்சிதானந்தமே” என்றும், “அருட்சிவமே” என்றும் புகழ்ந்து பாராட்டுகின்றார். நிலைபேறும் உண்மையுமில்லாத ஏனை அறிவுப்பொருள் நல்கும் இன்பத்திலும் வேறாய் நிலைத்த அறிவாய் விளங்கும் இன்பம் சச்சிதானந்தம் என்க.

     (58)