59
59. சிவயோகத்துக்குக் குறியாக நிற்பது ஓம் என்னும் பிரணவம்.
‘சாற்றுகின்றேன் அறையோ சிவ யோகத்தை
ஏற்றுகின்றேன்
நம்பிரான் ஒர் எழுத்தே’ (884)
எனத் திருமூலர் கூறுவர். இதனை அவரே அகர உகர மகரமென மூன்றாகப்
பிரித்து ‘தானே அகார உகார மதாய் நிற்கும்’ ( 889 ) என்பர். இவற்றுள்,
அகாரம் உயிரே உகாரம் பரமே
மகாரம் மலமாய்
வரும், முப்பத்திற்
சிகாரம் சிவமாய்
வகாரம் வடிவமாய்
அகாரம் உயிரென்
றறையலு மாமே’ (975)
என்று கூறுவர். இவ்வகர வுகரமகாரங்களை ஓம் என ஒன்றாக்கிச்
சிவாய நம என்ற ஐந்தெழுத்தைக் கூட்டி ஒம் சிவாயநம எனச் சிந்திப்பது சிவயோகம் என்பர்.
இதனைச்
சிகார வகார யகார முடனே
நகார மகாரம்
நடுவுற நாடி
ஒகார
முடனேஒருகா லுரைக்க
மகார முதல்வன்
மதித்து நின்றானே (982)
என்று திருமூலர் உரைப்பர். ஓம் என்பதனோடு சிவாய என்ற
எழுத்துக்கள் சேர்வதால் யோகமும் ஞானமும் கைகூடும்; சிவன் அருளிடைத் தங்கிச் சிவமாகும். இதுபற்றியே,
‘மருவும்
சிவாயமே மன்னும் உயிரும்
அருமந்த யோகமும்
ஞானமு மாகும்;
தெருள் வந்த சீவனார் சென்றிவற் றலே
அருள்தங்கி
அச்சிவ மாவது வீடே’ (979)
என்று கூறுகின்றார். பின்வந்த பெரியோரும் ‘அஞ்செழுத்தால்
ஆன்மாவை அரனுடைய பரிசம், அரனுருவும் அஞ்செழுத்தால் அமைந்தமையும் அறிந்திட்டு’ யோகநெறியில்
நிற்க (சிவ. சித்தி. 9.8) என்று உரைப்பர். இவ்வுரைகளால் தெளிவெய்திய ஞானவள்ளலாதலால்,
வடலூர் அடிகள், சிவயோகர் பிரணவ எழுத்தையும் அதன் கூறுகளையும் பின் அவற்றை மருவும் ஐந்தெழுத்தையும்
அறிந்தே யோகம் புரிவர் என்று தெரிவிக்கின்றார். அவர் உள்ளத்தே இயன்று விளங்கும் அறிவு,
கனிமரம் போல் வளர்ந்துயர்ந்து உச்சியில் அன்பு மலர்ந்து காய்த்துக் கனிந்து நிற்கும் என்றும்,
அதன் சுவை மௌனமயா நிறைந்து செவ்வியறிந்து நுகரப்படும்; அப்பொழுது சிவம் அனுபவிக்கப்படும்.
இவ்வளவும் மாயா காரியமாகிய உடம்பொடு கூடி உலகில் நிகழ்தலின், மாயையின் சேட்டை யாதாகும்
எனின், அதன் கழுத்தரியப்படும்; கருமமலத்தின் கட்டு அறுபட்டொழியும்; இவற்றைச் செய்துயரும்
சான்றோர்பால் பேரருளைச் செய்து, அவரது அவ்யோக முயற்சிக்கு உயரிய துணையாய்ப் பரம்பொருள்
நிற்கும். இந்நிலையில் யோகியர் மோனவெளியில் நிறைந்து திகழும் சிவானந்தம் பெற்று இன்புறுவர்.
2129. எழுத்தறிந்து தமையுணர்ந்த யோகர் உள்ளத்
தியலறிவாம் தருவினில்அன் பெனுமோர் உச்சி
பழுத்தளிந்து மவுனநறுஞ் சுவைமேற் பொங்கிப்
பதம்பொருந்த அநுபவிக்கும் பழமே மாயைக்
கழுத்தரிந்து கரமமலத் தலையை வீசும்
கடுந்தொழிலோர் தமக்கேநற் கருணை காட்டி
விழுத்துணையாய் அமர்ந்தருளும் பொருளே மோன
வெளியினிறை ஆனந்த விளைவாந் தேவே.
உரை: எழுத்தறிந்து தம்மையும் உணர்ந்த யோகர் உள்ளத்து அறிவாம் தருவில் அன்பெனும் உச்சியில் பழுத்து, மவுனச்சுவை பொங்கிப் பதம் பொருந்த அனுபவிக்கும் பழமாய். மாயையை அரிந்து கன்மமலதைப் போக்கும் கடுந்தொழிலராகிய தொண்டர் தமக்கே கருணை காட்டி விழுத்துணையாய் அமர்ந்த பொருளாய், மோனவெளியில் ஆனந்த விளைவாகிறவன் மகாதேவன். எ.று.
'எழுத்தறியத் தீரும் இழிதகைமை' எற்றற்போலப் பிரணவத்தையும் ஐந்தெழுத்தையும் அறிந்தவழிச் சிவயோகச் செந்நெறியையும், அதனால் யோகத்தை மேற்கொள்ளும் தம்மையும், தமக்குத் துணைபுரியும் திருவருளையும் உணர்வது பற்றி 'எழுத்தறிந்து தமையுணர்ந்த யோகர்' என்று கூறுகின்றார். தம்மையுணர்தற்கு 'எழுத்தறிவு படிமுறைக் காரணமாம் என அறிதல் வேண்டும். உள்ளத்தின் இடமாக ஆன்மவறிவு நெடி துயர்ந்து நிற்குமாறு விளங்க உள்ளத்து இயல்அறிவாம் தரு' என்கிறார். தரு-மரம். அதன் உச்சியில் ஞானம் பழுத்து மோனநிலையாகிய சுவை நிறைந்து நுகரப்படும் பதம் நோக்கியிருக்கும் என்பார், 'அன்பு எனும் ஓர் உச்சி பழுத்து அளிந்து மௌன நறுஞ்சுவை மேற் பொங்கிப் பதம் பொருந்த அனுபவிக்கும் பழமே' என்று கூறுகின்றார். அன்பு என்பது சிவஞானம் எனத் திருஞானசம்பந்தர் அறிவுறுத்துவர் எனச் சேக்கிழார் (ஞானசம். 843) உரைப்பர். அந்த ஞானத்தால் காணப்படும் சிவம் ஞேயமாய் விளங்குவது தோன்றப் 'பதம் பொருந்த அனுபவிக்கும் பழமே' என்று காட்டுகின்றார். இவ்யோகத்துக்கு இடையூறாகும் மாயையும் கருமமலத் தளையும் எங்ஙனம் கெடும் என்று எழும் ஐயத்தை, இறைவன் அப்பெருமக்கள்பால் அருள்செய்து துணை புரிவன்; அவ்வாற்றல் இடையூறுகள் கடியப்படும். அதனைக் 'கடுந் தொழிலோர் தமக்கே நற்கருணை காட்டி விழுத்துணையாய் அமர்ந்தருளும் பொருளே' என்று விளக்குகிறார். அருள் வழங்கும் துணை என்றற்கு 'விழுத்துணை' என்பது அறிக. மோனமாம் சுவையை நுகரும் யோக நிலையில் சிவானந்தம் விளைந்து இன்புறுத்தும் திறத்தை, 'மோனவெளியில் நிறை ஆனந்த விளைவாம் தேவே' என்று உரைத்தருளுகின்றார். இதனால், எழுத்தறிந்து தம்மையுணர்ந்து தமையுடைய சிவத்தைப் பெற முயலும் சிவ யோகியர் உள்ளத்தே அறிவு வளர்ந்து உயர்ந்து அன்பாகிய ஞானம் பழுத்து மோனச் சுவை நிறைந்து சிவானந்தத்தை விளைவிக்கும் நிறம் கூறப்படுவது காணலாம். (59)
|