60

     60. இறைவன் மூவர்கள் முதல்வனாய் விளங்கும் நிலையை எண்ணிய வள்ளலார், ஏனைத் தேவர் இனங்களை நோக்குகின்றார். அவர்கள் அனைவரும் பரமனது பரமாந்தன்மையை அறிதல் வேண்டித்தத்தம் மனம் கருவியாக முயன்று, மாட்டாமையால் வேதங்களை வினவ, அவையும் தமது இயலாமை கூறிக் கை விரித்த திறத்தை நினைத்து வியக்கின்றார்.

2130.

     உருத்திரர் நாரணர்பிரமர் விண்ணோர் வேந்தர்
          உறுகருடர் காந்தருவர் இயக்கர் பூதர்
     மருத்துவர்யோ கியர்சித்தர் முனிவர் மற்றை
          வானவர்கள் முதலோர்தம் மனத்தால் தேடிக்
     கருத்தழிந்து தனித்தனியே சென்று வேதங்
          களைவினவ மற்றவையுங் காணேம் என்று
     வருத்தமுற்றாங் கவரோடு புலம்ப நின்ற
          வஞ்சவெளி யேஇன்ப மயமாம் தேவே.

உரை:

     உருத்திரர் நாரணர் பிரமர் முதல் வானவர் ஈறாக அனைவரும் மனத்தால் தேடிக் கருத்தழிந்து, தனித்தனியே சென்று வேதங்களை வினவ, அவையும் காணேம் என்று வருத்தமுற்று அவரோடு புலம்ப நின்ற வஞ்ச வெளியாய் இன்பமாய் இலங்குபவன் மகாதேவன். எ.று.

     உருத்திரர், நாரணர், பிரமர், இந்திரர் எனப் பன்னையிற் கூறியது.
     'நூறு கோடி பிரமர்கள் நுங்கினார்
     ஆறு கோடி நாராயணர் அங்ஙனே
     ஈறுகங்கை மணலெண்ணில் இந்திரர்
     ஈறில் லாதவன் ஈசன் ஒருவனே'

என்று திருநாவுக்கரசர் தெரிவிப்பதுபற்றி ஞான நுண்பொருளைக் காண்டற்குக் கருவி மனமே யாதலின், 'மனத்தால் தேடி' என்று கூறுகின்றார். 'ஞானக்கண்ணில் சிந்தை நாடி' என்று சிவஞானபோதம் கூறுகிறது. திருமந்திரமும், 'எண்ணுயிரத் தாண்டு யோகம் இருப்பினும், கண்ணாரமுதனைக் கண்டறிவாரில்லை, உள்நாடி ஞானத் தொளிபெற நோக்கினால், கண்ணாடிபோலக் கலந்து நின்றானே' என்பது காண்க. பரம்பொருளின் உண்மையுணர்ந்தும் எட்டாதபடி விலகிநிற்பது பற்றி, “வஞ்சவெளி” என்று உரைக்கின்றார். 'வேதம் கிடந்து தடுமாறுகின்ற வஞ்சவெளி' (திருவிளை) என்று பரஞ்சோதியாரும் பகர்கின்றார். வஞ்ச வெளியாயினும் எண்ணும் சிந்தைக்கும் இடையறா இன்பம் நல்குவது புலப்பட 'இன்பமயமாய் தேவே' என்கின்றார்.

     (60)