61

      61. வேதங்களின் முயற்சிக்கும் எட்டாமல் அப்பாலாய், மணிபோல் விளங்குவது கண்டு, ‘கண்டும் கண்டிலேன் என்ன கண்மாயம்’ (திருவாச) என்றவாறு கையற்ற அவ்வேதங்கள் கதறுவதை வள்ளலார் கருதிப் பார்க்கின்றார். மறைகள் யாவும் பரம்பொருள் உள்பொருளாய் இயங்குவதைப் பார்த்து, அளவைகளால் அளந்து காணலாம் என்று எண்ணி அளந்து, அளவு காணாமல் இரக்கமிகுந்து சிவ சிவ என்று ஏங்கி அழுது பின்வாங்குவதை நோக்குகின்றார். அவற்றின் ஆராய்ச்சிக்குப் புலனாகும் பரவெளியில் அப்பரம்பொருள் இருந்த வண்ணமே இருக்கிறது. இருக்கின்ற அது, உலகில் வாழும் உயிர்களாகிய நமக்குத் தாய்போல் தனது தண்ணருளைச் செய்து அறிவு நெறியில் வளரச் செய்கிறது. உயிர்களும் காலந்தோறும் அறிவுத் துறையில் வளர்ந்து வருகின்றன. இதனைக் காணும்போது வள்ளலாரின் உள்ளம் வியப்பு மிகுந்து மகிழ்கிறது.

2131.

     பாயிரமா மறைஅனந்தம் அனந்தம் இன்னும்
          பார்த்தளந்து காண்டும்எனப் பல்கான் மேவி
     ஆயிரமா யிரமுகங்க ளாலும் பன்னாள்
          அளந்தளந்தோர் அணுத்துணையும் அளவு காணா
     தேயிரங்கி அமுதுசிவ சிவவென் றேங்கித்
          திரும்பஅருட் பரவெளிவாழ் சிவமே ஈன்ற
     தாயிரங்கி வளர்ப்பதுபோல் எம்போல் வாரைத்
          தண்ணருளால் வளர்த்தென்றும் தாங்குந் தேவே.

உரை:

     பாயிரமாம் மறைகள் யாவும் பார்த்து அளந்து காண்பேம் எனப் பல்கால் மேவி அளந்து, அணுத்துணையும் அளவு காணாது, சிவ சிவ என்று ஏங்கித் திரும்பப் பரவெளியில் வாழ்கின்ற சிவம், தண்ணருளால் எம்மை வளர்த்துத் தாங்கும் தேவதேவன். எ.று.

     முன்னே சொன்ன பழமறைகள் வியாசர் காலத்தில் நிலவினவாக இருக்கலாம். அவற்றிற்கும் முந்திய காலத்தில் தோன்றிய மறைகள் பரம்பொருளைக் கண்டிருக்கலாமே என்ற ஐயமொன்று எழுதலின், அவைகள் நிலையும் அதுவே என்றற்குப் 'பாயிரமாம் மறை அனந்தம் அனந்தம்' என்று குறிக்கின்றார். பாயிரம்-பின்னர்க் கூறப்படும் நுண்பொருளைப் பருப்பொருளாக முன்னுறக் காட்டுவது. 'ஆயிர முகத்தான் அகன்ற தாயினும் பாயிர மில்லது பனுவலன்று' என்பது மரபு.

     முன்னே மொழிந்த பழமறைகள் தனித்தனியே முயன்றன. பாயிரமாமறைகள் ஒன்றாய்த் திரண்டு பல்லாயிர நெறிகளில் முயன்று அணுவளவும் பரம்பொருளின் தன்மையை அறியமாட்டாவாயின. மாட்டாமை தோன்றியபோது, சிறுவர் அழுவதுபோல இம்மாமறைகளும் அழுதன என்றற்கு, 'அளவு காணாதே இரங்கி அழுது' என்று கூறுகிறார். ஆயினும் இவை ஐயா என்றோ அம்மே அப்பா என்றோ அழாமல் 'சிவ சிவ' என்று ஏங்கி அழுது திரும்பின என்கிறார். அறிவு நிறைந்த வேதவேதியர்க்கு எட்டாதாயினும் போதிய அறிவில்லாத உயிர்கட்கு, அது வளருமாறு வளர்த்துவரும் தாயாந்தன்மையை வியந்து, “ஈன்ற தாய் இரங்கி வளர்ப்பதுபோல் எம்போல்வாரைத் தண்ணருளால் வளர்த்து என்றும் தாங்கும் தேவே” என்று பரவுகின்றார்.

     (61)