62
62. வேதங்கள் பாடின என்றும்,
அளந்து பார்த்தன என்றும் வள்ளலார் கூறினாரன்றோ? அப்பாட்டிலும் அளந்த அளவிலும் இருந்த
பொருள் யாதாகலாம் என்று எழுந்த கேள்விக்கு விடை கூறுகின்றார். அண்டகோள அடுக்குகள் பிண்டங்கள்
என்ற இவற்றின் இயல்புகள், இவற்றினிடையே வாழும் உயிர்களின் தன்மைகள் காணப்பட்டன; இவை
ஏன் இப்படி அமைந்துள்ளன என ஆராய்ந்து இவை இறைவன் திருவிளையாட்டு என்ற முடிவுக்கு வந்தன. அதனை
வள்ளலார் நமக்கு அறிவிக்கின்றார்.
2132. அந்தரமிங் கறிவோமற் றதனில் அண்டம்
அடுக்கடுக்காய் அமைந்துள வறிவோம் ஆங்கே
உந்துறும்பல் பிண்டநிலை அறிவோஞ் சீவன்
உற்றநிலை அறிவோமற் றனைத்து நாட்டும்
எந்தனைநின தருள்விளையாட் டந்தோ அந்தோ
எள்ளளவும் அறிந்திலோம் என்று
முந்தனந்த மறைகளெலாம் வழுத்த நின்ற
முழுமுதலே அன்பர்குறை முடிக்கும் தேவே.
உரை: அந்தரமும் அண்டகோள அடுக்கும் பிண்டமும். சீவன்களுமாகிய இவற்றை அறிவோம்; இவற்றை நாட்டிய சிவத்தின் விளையாட்டை எள்ளளவும் அறிந்திலேம்; என்னே! என்று மறைகளெல்லாம் வழுத்த நின்ற முழுமுதல், அன்பர் குறைமுடிக்கும் இறைவனாகிய மகாதேவன் எ.று.
இதன்கண் அந்தரம் என்பது இவ்வண்டங்களை தாங்கித் தன்னகத்தே கொண்டிருக்கும் வெளி, இவனை விஞ்ஞானிகளிற் சிலர் ஈத்தர் (Ether) என்பர்; சிலர் காஸ்மாஸ் (Cosmos) என்பர்; பிண்டங்கள் ஒவ்வொன்றும் தனக்குள் பல பொருள்கள் செறிய நின்று ஒன்றையொன்று உந்திக் கொண்டிருத்தலால் 'உந்துறும் பல் பிண்டம்' என்றார். அணுவியல் விஞ்ஞான நூல்களைக் காண்க. இவ்வனைத்தும் ஒருவகை ஒழுங்கும் நெறியும் முறையும் கொண்டு சிறிதும் பிறழ்தலின்றி அமைத்தலின் 'நாட்டும்' என்றும்; இங்ஙனம் அண்டங்களும் பிண்டங்களும் அமைப்பது பரம்பொருட்கு எளிதாக அமைந்திருப்பதால் 'எந்தை நினது அருள் விளையாட்டு' என்றும் கூறி, இதன் இயல்பைச் சிறிதும் அறியமாட்டாமை தோன்ற 'எள்ளளவும் அறந்திலேம்' என்று வேதங்கள் வழுத்துகின்றன. இப் பெற்றித்தாயினும் பரம்பொருள் தன்பால் அன்பு செலுத்தும் நன்மக்கள் வேண்டும் குறைகளை முடித்துத் தருவதில் தவறுவதில்லை என்ற உண்மையை, 'அன்பர் குறை முடிக்கும் தேவே' என்று சிறப்பிக்கின்றார். (62)
|