63

    63. பரம்பொருளின் பரமாந்தன்மையை அறியும் முயற்சியில் சோர்வும் தடுமாற்றமும் எய்திய வேதங்களைப் பின்வந்த சான்றோர் வேதஞானமும் தங்கள் உலகியல் அனுபவஞானமும் கொண்டு ஆராய்ந்து வேறு சில முடிவுகளைக் கண்டனர். அவர்கள் எழுதிய நூல்கள் உபநிடதங்கள் எனப்பட்டன. வேதநூலறிவின் முடிவாகக் கண்டதனால் அவற்றை வேதாந்தம் என்றனர். பிற்காலத்தோர் உபநிடத மந்திரங்களை வேதமென்றே கூறும் வழக்கத்தைக் கைக்கொண்டனர். இந்நாளில் இவ் வுபநிடதக் கருத்துக்களைப் பரப்பும் வேதாந்திகள் செல்வமும் செல்வாக்கும் பெற்று இவ்வுபநிடத சமயமே இந்து சமயம் என்று பேசியும் எழுதியும் வருகின்றனர். இவர்களுக்குச் சங்கரர் உபநிடதங்களுக்கெழுதிய உரையும் பிரம்மசூத்திரத்துக் கெழுதிய உரையும் பகவத் கீதையும் துணையாக உள்ளன. இவ்வுபநிடதங்களையும் வடலூர் வள்ளலார் காண்கின்றார். உடம்பொடு உறையும் உயிர் உடற்குள் பலவேறு அவத்தைகளை உறுவது பொதுவுண்மை. அவற்றை நான்கினுள் அடக்கிச் சாக்கிரம் (நனவு), சொப்பனம் (கனவு), சுழுத்தி (உறக்கம்), துரியம் (பேருறக்கம்) என் வேதாந்திகள் கூறுவர். நனவு நிகழும் இடம் புருவநடு, கனவுக்குக் கழுத்து, சுழுத்திக்கு இதயம், துரியத்துக்கு உந்தி. நனவின்கண் புருவ நடுவிலிருக்கும் ஆன்மா, கனவில் கீழ் நோக்கிக் கழுத்தின் கண் தங்கும், சுழுத்தியில் மார்பின் கண்ணும் தங்கும். கீழ் நோக்கிச் செல்லும் இதனைக் கீழாலவத்தை என்றும் உந்தியினின்றும் மேனோக்கி வருவதை மேலாலவத்தை என்று கூறுவர். இவற்றின் வேறாகத் தாதுகதாவத்தை, குணாவத்தை, அவத்தாந்தராவத்தை, ஆதாரகரணகதாவத்தை, சங்க்ஷேபாவத்தை அனுபவாவத்தை எனப் பலவாகக் கூறுவதும் உண்டு. உடம்பின்கண் கீழும் மேலுமாக உயிர் மேற்செல்வதுண்டு. அதனைப் பராவத்தை என்பர். புருவ நடுவிலிருந்து பிரமரதிக்கரம், பரசாக்கிரம், அதற்குமேல் மூன்றங்குலம் பரசொப்பனம், அதற்குமேல் மூன்றாங்குலம் பரசுழுத்தி, அதன்மேல் மூன்றங்குலம் பரதுரியம், அதற்கு மேல் அதீதம்; அதனை மாயப்பாழ் என்பர். அதற்கு அப்பால் போதப்பாழ், அதற்கு அப்பால் உபசாந்தப்பாழ் என்று கூறுவர். அந்நிலைகளைக் கண்ட வேதாந்தம், அதற்கு மேலே விளங்கும் பரம்பொருள் நிலையை உள்ளவாறு உணர்ந்துரைக்கும் திறமின்றி நின்றொழிவதை வள்ளலார் உணர்கின்றார்.

2133.

     தோன்றுபர சாக்கிரமும் கண்டோம் அந்தச்
          சொப்பனமும் கண்டோம்மேல் சுழுத்தி கண்டோம்
     ஆன்றபர துரியநிலை கண்டோம் அப்பால்
          அதுகண்டோம் அப்பாலாம் அதுவும் கண்டோம்
     ஏற்றஉப சாந்தநிலை கண்டோம் அப்பால்
          இருந்தநினைக் காண்கிலோம் என்னே என்று
     சான்றவுப நிடங்களெலாம் வழுத்த நின்ற
          தன்மயமே சின்மயமே சகசத் தேவே.

உரை:

     பரசாக்கிரம் பர சொப்பனம், அதற்கு மேலுள்ள பரசுழுத்தி, அதற்கு மேலுள்ள பாதுரியம் கண்டோம்; அப்பாலும் அப்பாலும் கண்டோம்; உபசாந்த நிலை கண்டோம்; அப்பால் இருக்கும் உன்னைக் காண்கிலோம் என்று உபநிடதம் கூற நின்ற தன்மயமாய்ச் சின்மயமானவன் சகசமான தேவதேவன். எ.று.

     துரியநிலைக்கு அப்பாலை அதீதமெனப் பொதுப்படக் கூறும் எல்லையில் முதற்படி மாயப்பாழ், அதற்கு 'அப்பாலாம் அது' என்றது போதப்பாழ். அதற்கு அப்பாலை உபசாந்தம் என்றமையின் கீழ் நின்ற இரண்டும் முறையே மாயப்பாழும் போதப்பாழும் ஆயின. (திருமந். 2495). இவ்வாறு பரசாக்கிர முதலியவற்றைக் கண்டோம். ஆனால் உபசாந்தத்திற்கு அப்பால் உள்ள நின் நிலையைக் காண்கிலோம் என்று உபநிடதம் கண்ட உயர்ந்தோர் கூறுவதை அவ்வுபநிடதங்களின் மேல்வைத்து வள்ளலார் அருளுகின்றார். யாதொன்றின் கலப்புமின்றித் தானே தானாய் நிற்பது பரம்பொருள் என்றற்குத் தன்மயம் என்றும், ஞானிகளின் ஞானத்துக்குப் பொருளாய் விளங்குதலின் சின்மயம் என்றும் தெரிவிக்கும் வள்ளலார், இயற்கையாய் அமைந்ததேயன்றிச் செயற்கையாய் இயன்றதன்று என்பதை வற்புறுத்தற்குச் 'சகசத்தேவே' என்று இசைக்கின்றார். சகசம் இயற்கை, செயற்கை ஆகந்துகம் எனப்படும்.

     (63)