64

     64. வேதப்பொருளைப் பரமன் அருளியபோது முனிபுங்கவர் சிலர்க்கு ஆகமங்களை அருளினான் என்பர். அவை மூலாகமம் இருபத்தெட்டு என்றும், உபாகமம் பல என்றும் கூறுவர். இவை கூறுவனவற்றைச் சித்தாந்தம் என்பர். வேதாந்தம் சித்தாந்தம் என்ற இரண்டையும் கண்ட உமாபதி சிவனார் ‘வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தம்’ என்பர். குமரகுருபரும் இக் கருத்தை, ‘ஒரும் வேதாந்தமென் றுச்சியிற் பழுத்த சாரம் கொண்ட சைவசித்தாந்தம’ என்று கூறுவர். படைப்பு வடிவாயுள்ள அண்டபிண்டங்கள் அனைத்தும் காரியப்படுதற்கு முதற் காரணமாவது மாயை என்னும் பரிக்கிரக சத்தி என்றும், அதனைக் காரியப்படுத்தி உலகு உடம்பு கருவி கரணம் என்று படைத்துச் செயற்படுத்துவது சிவசக்தி என்றும் சிவாகமங்கள் உரைக்கின்றன. பரிக்கிரக சத்தி, அண்டபிண்டங்களாக்த் தோன்றுங்கால், சுத்தமாயை அசுத்தமாயை, பிரகிருதி மாயை என முத்திறப்படும். சுத்தமாயை சிவம் (நாதம்), சத்தி (விந்து), சாதாக்கியம், ஈசுவரம், சுத்தவித்தை என ஐந்தாகும். அசுத்தம் கலை, வித்தை, அராகம், புருடன், காலம், நியதி, மாயை என ஏழாம், பிரகிருதிமாயை, பூதத்தொகுதி 10, இந்திரியத் தொகுதி 10, மானதத் தொகுதி 4 என இருபத்து நான்கு, இவற்றுள் சுத்தமாயையின் உச்சியில் நிற்கும் சத்தியை விந்து என்றும், அதன்மேல் நிற்கும் சிவதத்துவத்தை நாதம் என்றும் கூறுவர். மாயைக்கு மேல் அதனைத் தனக்குள் ஒடுக்கி நிற்கும் சிவசத்தியைப் பரவிந்து என்றும், அச் சத்தியைத் தனக்குள் ஒடுக்கி நிற்கும் பரசிவத்தைப் ‘பரநாதம்’ என்றும் கூறுவர். இந்நிலைகளை எண்ணுகின்றார் வள்ளலார். இவற்றை விரித்துரைக்கும் ஆகமங்கள் பரநாத நிலைக்கு வேறாய் அப்பாலாலய்ச் சின்மய தன்மயமாய் நிற்கும் பரம்பொருளைப் பற்றி ஒன்றும் உரைக்கவில்லை. அதனை உய்த்துணரும் அடிகளார் உரைக்கின்றார்.

2134.

     பரிக்கிரக நிலைமுழுந் தொடர்ந்தோம் மேலைப்
          பரவிந்து நிலையனைத்தும் பார்த்தோம் பாசம்
     எரிக்கும்இயற் பரநாத நிலைக்கண் மெல்ல
          எய்தினோம் அப்பாலும் எட்டிப் போனோம்
     தெரிக்கரிய வெளிமுன்றும் தெரிந்தோம் எங்கும்
          சிவமேநின் சின்மயம்ஒர் சிறிதும் தேறாம்
     தரிக்கரிதென் றாகமங்க ளெல்லாம் போற்றத்
          தனிநின்ற பரம்பொருளே சாந்தத் தேவே.

உரை:

     பரிக்கரகமாகிய மாயை, அதனுள் விரிந்த பரவிந்து நிலை, பரநாத நிலை ஆகியவற்றைப் பார்த்து, அப்பாலும் எட்டிப் போனோம்; வெளிமூன்றும் கண்டோம்; சிவத்தின் சின்மயம் காணோம் என்று ஆகமங்கள் போற்றும் பரம்பொருள் சாந்தநிலையில் உள்ள தேவதேவனே எ.று.

     உயிர்கள் உறையும் மாயாகாரிய வெளியை மாயவெளி எனவும், திருவருள் வெளியை ஞானவொளி என்றும், சிவசத்தியிற் சீவன் ஒடுங்கும் நிலையைப் பரவொளி என்றும் கூறுவர். இம் மூன்றும் வடமொழியில் மாயாகாசம், சிதாகாசம், பராகாசம் என்றும் கூறப்படும். பராகாசத்தை உபசாந்தம் என்பதும், இவ் வெளிகளைப் பாழ் என்பதும் வழக்கம். மாயப்பாழ்-சீவன், வியோமப்பாழ் - மன்பரன்; மூன்றாம்பாழ் -“சிவசத்தியில் சீவன் ஆய வியாத்தமெனும் பாழ்” என்று திருமூலர் கூறுவர். (திரு.மந்.2496)

     (64)