65
65. சமய நூல்கள் வேதம்
ஆகமம் என்ற இரண்டையுமே பெரிதும் எடுத்துப் பேசுவதோடு கலைகள் எனச் சிலவற்றைப் பிரித்துக்
கூறுகின்றன. ‘கற்றிலேன் கலைஞானம்’, ‘கலைநவின்ற பொருள்கள்’ என மணிவாசகரும், ‘வேதசாத்திரம்
மிருதி புராண கலைஞானம் விரும்பு அசபை வைகரியாதித் திறங்கள் மேலாம் நாதமுடிவான வெல்லாம் பாசஞானம்’
என்று அருணந்தி சிவனாரும், ‘பலகலை ஆகமவேதம் யாவையினும் கருதும் பதிபசுபாசம் தெரித்தல்’ என்று
உமாபதி சிவனாரும், கலைத்திறத்தை வேறுவைத்தே கூறக் காண்கின்றோம். காலம், நியதி, கலை என
வரும் தத்துவக்கூறுகளை விளக்கும் மாதவச் சிவஞான முனிவர், கலை என்பது கலித்தல் என்னும் செயல்மேல்
நிற்பதாகக் கொண்டு, ‘கலித்தல் நீக்குதலும் செலுத்துதலுமாதலின் மலத்தை நீக்குதலால் கலையெனப்
பெயராயிற்று’ என்பர். கற்றவர் பலரும் பொதுவாகக் கற்கப்படுவது கலை என்பர்; கலை என்பது உடம்புக்கும்
பெயராதலால் அதனை மறைத்து அணிசெய்யும் ஆடைக்கும் அது பெயராதல்போல் அதனைப் பேணிப்
போற்றி வளர்த்தற்குரிய செயல்வகைக்கேற்ற அறிவுதரும் நூல்களைக் கற்பதும் கலையாம் என்பவரும்
உண்டு. சிலர் செயற்குரிய கல்வி கலை யாயினும், செய்கையிலும் செய்யப்படும் பொருளிலும் காண்பவர்
கண்ணையும் கருத்தையும் கவரத்தக்க அழகு அமையச் செய்வது கலை என்பர். காண்பவர் கண்ணையும்
கருத்தையும் ஈர்த்துப் பொருளின் அமைப்பு, செய்பவன், செயல், செய்யப்படுபொருள் ஆகிய கூறுகளைப்
பற்றி மக்களைச் சிந்திக்குமாறு தூண்டி அறிவின்பம் பயத்தலின் கலையுணர்வும் வேண்டப்படுதலால்,
பலவேறு கலைநூல்களையும் சமய நூல்களோடு ஒப்பவைத்து உரைக்கின்றனர். அவற்றையும் வடலூர்
வள்ளலார் காண்கின்றார். மணக்கும் மலரிடைத் தேனுண்டு சிறக்கும் வண்டுபோல இதய மலரிடை ஞான
மணக்கும் மலரிடைத் தேனுண்டு சிறக்கும் வண்டுபோல இதய மலரிடை ஞானமணக்கும் இறைவன் திருவடிச்
சிந்தனையாற் பிறக்கும் இன்பமாகிய தேனை உண்டு மகிழும் பெருமக்கள் திருவருட்காட்சியில் கலந்து
கருவி கரணங்கட்கு அதீதமாகின்றனர். அதற்குரிய இயற்கை நிலை யாது எனக் கலைஞர் கண்டறிய மாட்டாமையால்
அவர்கள் அந்நிலைக்குரிய முறையும் நெறியும் எம் கலை அறிவுக்குக் காண்பது அரிதாகின்றது என
உரைக்கின்றனர். மேலும் அவ்வகையில் அவர்களிடையே கருத்து வேற்றுமையும் இல்லை. இவ்வாறு கலைஞானம்
கையற்று வருந்தப் பரம்பொருளின் பரமாந்தன்மையை வள்ளலார் உணர்கின்றார்.
2135. மணக்குமலர்த் தேனுண்ட வண்டே போல
வளர்பரமா னந்தமுண்டு மகிழ்ந்தோர் எல்லாம்
இணக்கமுறக் கலந்துகலந் ததீத மாதற்
கியற்கைநிலை யாததுதான் எம்மாற் கூறும்
கணக்குவழக் கனைத்தினையும் கடந்த தந்தோ
காண்பரிதிங் கெவர்க்கும்எனக் கலைக ளெல்லாம்
பிணக்கறநின் றேலமிடத் தனித்து நின்ற
பெரும்பதமே மதாதீதப் பெரிய தேவே.
உரை: தேனுண்ட வண்டுபோலப் பரமானந்த முண்டு மகிழ்ந்தோர் கலந்து அதீதமாதற்கு இயற்கை நிலை யாது? அதனை எம்மாற் காண்பதரிது எனக் கலைகள் எல்லாம் ஒலமிடத் தனித்துநின்ற பெரும் பதத்தனாவன் மதாதீதமான பெரிய தேவன் எ.று.
பலவேறு மதங்கட்குரிய வேதங்களும் ஆன்மங்களும் இந்நிலையிலேயே நின்றொழிவதால் 'மதாதீதப் பெரிய தேவே' என்று கூறுகின்றார். (65)
|