66
66. திருமூலர் முதலிய சான்றோர்கள் திருவம்பலம் பற்றிய உரைகளில் பரம்பொருளை யோகத்தாற்
காணுமிடம் ’பொது’ என்றும், அங்கே நடம் புரிவது பூரண ‘சிற்சிவம்’ என்றும் கூறுவர். அட்டாங்கயோகிகள்
தமது யோகக் காட்சியில் விளைவது போதம் (ஞானம்) என்றும், அதனால், துவாதசாந்தத்தில் சந்திரமண்டலத்தின்றும்
ஒழுகும் ஞானமிர்தமாகிய தேன் உண்டு இன்புறுவது சிவபோகம் என்றும் கூறுவர். வேறுசிலர் யோகத்திற்
கண்டுணர்வது பிரமம் என்பர். வேறுசிலர் யோகத்திற் காட்சிப்படுவது எல்லாப் பொருட்கும் மேலாகிய
பரம்பொருள் என்றும் கூறுவர். அவை யாவும் அவரவர் தகுதிக்கு ஒத்தன; மறுக்கத் தகுவன அல்ல. ஆயினும்
பரமசிவம் அதுவென்றும் இதுவென்றும் சுட்டியறியப்படும் பொருள் அன்று. ஆதலால், சிவயோகத்தில்
விளையும் மௌனத்தைத் தலைப்பட்டுச் சும்மா இருப்பதே சுகம் என்னும் யோகியர் உள்ளனர். அவரைச்
சிவபரம்பொருள் தனது தண்ணிய பேரருளாற் கலந்து கொண்டு பெருவெளியாய் விளங்குவதாகும். மக்களுடம்பிலிருந்து
யோகம் புரியும் இவர்களைக் கலந்துகொள்வதால் மலக்கலப்புறுதலும் இல்லை என்று இயம்புகின்றார்கள்.
சமரசப் பெருநிலைப் பெருமானாகிய வடலூரடிகள் ‘பொதுவென்றும் பொதுவில் நடம் புரியா நின்ற பூரண
சிற்சிவமென்றும் போதானந்தம் அதுவென்றும் பிரமமென்றும் பரமமென்றும் வகுக்கின்றோர் வகுத்திடுக,
அதுதான் என்றும் இது என்றும் சுட்டவொணாததனாற் சும்மா இருப்பதுவே துணிவெனக் கொண்டிருக்கின்றோரை,
விதுவென்ற தண்ணளியால் கலந்துகொண்டு விளங்குகின்ற, பெருவெளியே விமலத் தேவே’ என்று
விளம்புகிறார், விது-சந்திரன்.
2136. பொதுவென்றும் பொதுவில்நடம் புரியா நின்ற
பூரணசிற் சிவமென்றும் போதா னந்த
மதுவென்றும் பிரமமென்றும் பரமமென்றும்
வகுக்கின்றோர் வகுத்திடுக அதுதான் என்றும்
இதுவென்றும் சுட்டவொணா ததனால் சும்மா
இருப்பதுவே துணிவெனக் கொண்டிருக்கின் றோரை
விதுவென்ற தண்ணளியால் கலந்து கொண்டு
விளங்குகின்ற பெருவெளியே விமலத் தேவே.
உரை: பொதுவாய், பொதுவில் நடம்புரியும் பூரண சிற்சிவமாய், போதானந்த மதுவாய், பிரமமாய், பிரமமாய் இருப்பது என்று வகுக்கின்றோர் வகுத்திடுக; அது இது என்று சுட்டவொண்ணாதாய், சும்மா இருப்பதுவே துணிவு என இருக்கின்றோரைத் தண்ணளியால் கலந்து கொண்டு விளங்கும் பெருவெளியானவன் மகாதேவனாகிய விமலத்தேவன் எ.று.
தில்லையம்பலத்தைப் பொது என்றல் மரபு. நடம் புரியும் பெருமானைக் குறைவின்றி நிறைந்த ஞான மூர்த்தி என்பது பற்றிப் பூரண சிற்சிவம் என்று விளக்குகின்றார். போகம் என்றது, ஈண்டு யோக முடிவின்கண் எய்துகின்ற ஞானம் தரும் இன்பம். அதுபற்றியே,
'யோகமும் போகமும் யோகியர்க் காகுமால்; யோகம் சிவரூபம் உற்றிடும்; உள்ளத்தோடு போகம் புவியிற் புருடார்த்த சித்திய தாகும் இரண்டும் அழியாத யோகிக்கே'
என்கின்றனர். பொது என்பது முதலாக வகுத்துரைக்கப் படுவனவற்றை மறுப்பது வடலூர் அடிகள் கருத்தன்று என்பது விளக்கவே 'வகுக்கின்றோர் வகுத்திடுக' என்று இசைக்கின்றார். சும்மா இருக்கின்ற யோகியர் உடலுட் கலந்து நிற்பினும் அக் கலப்பால் இறைவனை மலம் பற்றுவதில்லை என்றற்கு, “விமலத் தேவே” என்று விளக்குகிறார். (66)
|