67
67. இனி, வடலூர் அடிகள் பரம்பொருளின்
இயல்கூறும் வேதம் ஆகமம் என்ற இரண்டையும் நோக்குகின்றார். அவற்றின் முதலிலும் இடையிலும்
இறுதியிலும், ஏன் எல்லாப் பகுதியிலும் உரைக்கப்டும் பொருள்களில் ஆங்காங்குப் பரம்பொருளின்
இயல்நலமே அமைந்திருப்பதைக் காண்கிறார். எனினும், அங்கே முழுதும் கூறப்படாது எச்சமுற்று, அப்பாலும்
ஆராயவேண்டிய சூழ்நிலையே நிலவுகிறது. அந்த நூற்பொருளில் ஒன்றாகத் திகழும் உயிர்ப்பொருள் தோறும்
அப் பரம்பொருள் கலந்தும் கலவாமலும் உளது. உயிர்கள் அப் பரமனை அடைதற் பொருட்டு வகுக்கப்பட்டுள்ள
பல்வேறு நெறிகளைக் காணலுற்று, அவற்றையும் கடந்து ஞாலமணி மன்றில் இன்பவருவாய்க் காட்சிதந்து
அருள் நடம்புரியும் சிவமாதலை நோக்குகிறார். அது மோனப் பெருமலையாகவும் முக்கட் பெருமானாகவும்
தோன்றுகிறது; உருவாகிய நிலையில் ஏனைத் தேவர்கள் வகை யெல்லாவற்றலும் பெரிய தேவனாய்ப் பிறங்குவது
கண்டு மகிழ்கின்றார்.
2137. அருமறையா கமங்கள்முதல் நடுவீ றெல்லாம்
அமைந்தமைந்து மற்றவைக்கும் அப்பா லாகிக்
கருமறைந்த உயிர்கள்தொறுங் கலந்து மேவிக்
கலவாமல் பன்னெறியும் கடந்து ஞானத்
திருமணிமன் றகத்தின்ப உருவாய் என்றும்
திகழ்கருணை நடம்புரியும் சிவமே மோனப்
பெருமலையே பரமஇன்ப நிலையே முக்கட்
பெருமானே எத்திறத்தும் பெரிய தேவே.
உரை: அருமறை ஆகமங்கள் முதல்நடு ஈறு எல்லாம் அமைந்து அப்பாலாய், உயிர்தோறும் கலந்தும் கலவாமல் பன்னெறியும் கடந்து ஞான மணிமன்றில் இன்பவுரவாய்க் கருணை நடம்புரியும் சிவமாய், மோனப் பெருமலையாய், பரம இன்ப நிலையாய், முக்கட் பெருமானாயவன் மகாதேவன் எ.று.
இங்கே கூறிய வேதங்கள் பொதுவாக நால்வகைப்படினும் ஒவ்வொன்றும் பல கூறுபட்டு மந்திரம் பிராமணம் என்ற வடிவில் அமைந்துள்ளன. இவ்வாறே ஆகமங்களும் சரியாபாதம், கிரியாபாதம், யோகபாதம், ஞானபாதம், என நால்வகைப்பட்டு, மூலாகமம் உபாகமம் என இருவகையால் இயன்றுள்ளன. இவற்றின் முதலிலும் நடுவிலும் இறுதியிலும் பரம்பொருளின் இயலும் நலமும் கூறப்படுமாயினும், அவை முடிந்த முடிபாகா. அவற்றிற்கு அப்பாலும் ஆய்ந்து உணரக்கூடிய நிலையில் இருப்பது கொண்டே 'மற்றவைக்கும் அப்பாலாக்கி' என்று கூறுகின்றார். உலகில் உயிர்த்தோற்றம் அனைத்திற்கும் முதல் கருவாயினும், கருவாராயும் அறிஞர் (Embryologists) எவராலும் இதுகாறும் உயிர் எனப்படுவது தனியே காணப்படாமையால், 'கருமறைந்த உயிர்கள்' என்று சிறப்பித்துத் துரைக்கின்றார். (67)
|