68
68. யாதானுமொரு தொடர்புண்டானாலன்றி
ஒருவரிடத்தில் அன்புகொள்வது மக்கள் இயல்பன்று. அன்பு முதிர்ந்தவழி அருளாளராவர். மக்களில்
நல்ல அறிவு ஒழுக்கங்களில் சிறந்தவரிடத்தில்தான் அருள் உள்ளம் காணப்படும். அவர்கள் உள்ளத்தின்
அருணிலையை நுணுகி ஆராய்வோமாயின், அவர்கட்கும் அவர்களால் அருளப்படுபவர்க்கும் அருள்தொடர்பு
உண்டாதற்கு ஒர் காரணம் காணப்படும். அவர்கள் தமது தன்மையை உணர்ந்து தம்முடைய இறைவனை உணர்ந்து,
அவன் தம்மை உடையனாவது போலவே, எல்லா உயிரையும் உடையன் எனக் காண்கின்றனர். அக்காட்சி,
அவனால் அருளப்படும் முறையில் ஏனையோர் அனைவரும் தம்மைப்போல இறைவனது அருட்டொடர்புடையர் என்ற
உணர்வை நல்குகிறது. அதனால், அவர்கள் ஏனை எல்லாவுயிரிடத்தும் முதிர்ந்த அன்பாகிய அருள் செய்யும்
பெருமக்களாகப் பிறங்குகின்றனர். இஃது உயிரப்பண்பாக இருப்பதை வடலூர் வள்ளல் எண்ணுகின்றார்.
இவ்வகையில் இறைவன் பால் தொடர்புண்டானாலன்றித் தம் மனத்தில் இறைவன்பால் மெய்யன்புண்டாகாது
எனத் தெளிகின்றார். அதனால் தொடர்புகாண முயல்கின்றார். உயிர் நீங்கின உடம்பு உணர்வற்ற
அணு அணுவாய்ச் சிதைந்து கெடுவது காண்பவர்க்கு, உடம்பு கெடாது நெடிதிருத்தற்கு உணர்வு வடிவாகிய உயிர்
இன்றியமையா தென்பது தெரிகிறது. உயிரோடு கூடிய உடம்பினும், யாதானுமொரு காரணத்தால் ஒரு உறுப்பு
உணர்வற்றதாயின், நோயாய்த் துன்பம் செய்கிறது. அதனால், நாம் பெறும் இன்பத்துக்கு உயிர்
காரணமாவது தெரிவதால் உயிரை இன்பம் தருவதென்று எண்ணி ‘இன்னுயிர்’ என மொழிகின்றோம். உயிர்
போல, அருளொளி தந்து இன்பம் செய்வதுபற்றி இறைவனை இன்னுயிர் என்று பாராட்டுகின்றோம். அகத்துறைப்
பாராட்டுக்களில் இன்பம் தரும் காதலியைக் காதலன் “உயிரே” என்பதும், காதலனை காதலி உயிரே
என்பதும் பார்க்கின்றோம். இம்முறையில் வள்ளலார் இறைவனை ‘எனக்கு உயிர்’ என்கிறார். உயிர்
தான் உறையும் உடற்கு இன்பவுணர்வால் கிளர்ச்சியும் வளர்ச்சியும் நல்குகிறது; இறைவன் நம் உயிரறிவுக்கு
விளக்கமும் துளக்கமில் காட்சியும் நல்குகிறான்; அதனால் இறைவன் உயிர்க்குயிராய் உள்ளான்
என்று கூறுகிறார். தன் உடற்குள் எங்கும் கலந்து உயிர் உறைகிறது; அதனால் உணர்ச்சி உடல்
முழுதும் பரவி இருப்பதற்கு இடமேற்படுகிறது. இறைவன் உயிர்க்குயிர் எனப்படின், அவன் கலந்து
உறைவதற்கு உயிர் இடமாதல் வேண்டும். மற்று, உடல் தன்னின் வேறாய உயிர் தங்குதற்கு இடமாவதுபோல,
உயிரும் இறைவன் தங்குதற்கு இடமாம் என்று சில சான்றோர் கூறுகின்றனர். அவர் கருத்தையும் தழுவிச்
செல்பவராதலால், வடலூர் அடிகள், இறைவனை உயிர்குயிர் என உரைக்கின்றார். தமிழ்ச்
சான்றோர் உயிர் நிற்க இடந்தருவது உடம்பேயன்றி பிறிதோர் உயிர் தன்னுள் நிற்க இடம்
தருவது உயிரியல்பன்று; உயிர்வரின் அதனோடு உடனுறைவதுதான் இயல்பு; அதனால் இறைவன் உடம்பினுள்
உயிரோடு உடன்நிற்பன் என்றும், உடன் நின்று உயிரறிவுக்கு உண்மையுணர்வு காட்டுவன் என்றும் கூறுகின்றார்கள்;
உயிரும் மெய்யுமாகிய எழுத்துக்களின்மேல் வைத்து விளக்குவதும் செய்கின்றார்கள். அதனால்
இறைவனுக்கும் தமக்கும் உள்ள தொடர்பை என் இன்னுயிர்க்குத் துணைவன் நீ என்று வள்ளலார் வாய்மலர்ந்துரைக்கின்றார்.
இனி, இவ்வுயிர்கள் எங்கிருந்து வந்தன என எண்ணமிட்ட பெரியோர் சிலர், உலகம் உயிர் ஆகிய
எல்லாம் பரம்பொருள் ஒன்றினிடத்திருந்து தோன்றின; அதுதான் எல்லாவற்றிற்கும் தாய் என்று
உரைக்கின்றார்கள். அவர் கருத்தையும் தழுவிச்செல்லும் சமரச ஞானியாதலால், வடலூர் வள்ளல்
இறைவனைத் தன்னை ஈன்ற அன்னையாகத் தொடர்பு படுத்துகின்றார். இறை உடனிருந்து உயிரறிவுக்கு
நலம் தீங்கு காட்டி விளக்கம் தந்து சிறப்பிக்கிறது. ஈன்று புறந்தருபவள் தாய் எனின், அறிவு
தந்து சான்றோனாக்குபவன் தந்தை என்பது பற்றி இறைவனை “என்னுடைய அப்பன் நீ” என்று உறவு செய்கின்றார்.
உடம்பொடு கூடி உயிர் வாழ்க்கை நடத்துமிடத்து அரும்பொருள்களை ஈட்டி இன்பம் காணுகிறது. இன்பம்
தரும் பொருளை உயிர் என்னும் மரபுபற்றி, நினைந்தவழி இன்பம் தரும் நலம் கண்டு, இறைவனை “என்
அரும்பொருள் நீ” என்று பாராட்டுகின்றார். ஈட்டிய பொருளின் அருமையையும் அது நல்கும் இன்பத்தையும்
எண்ணும் போது அதன்பால் அன்பு உள்ளத்தில் ஊறுகிறது; அருமையும் இன்பமும் இறையுருவாதல் கண்டு,
“என் இதயத்து அன்பும் நீ” என்று புகழ்கின்றார். அன்புடையார்பால் நன்மொழியும் நற்செய்கையுமே
தோன்றி நன்னெறி காட்டுவது உலகியலில் காண்பது. அதனையே காட்டுதல் துற்றி இறைவனை “என் நன்னெறி
நீ” என்று இயம்புகிறார். பொருளுற்ற வழி உடனிருத்தலும் நீங்கியவழி விலகி நீங்குதலும் செய்வது
உறவன்று; குளத்துக் கொட்டியும் ஆம்பலும்போல ஒட்டியுறுவதுதான் உறவு என நீதி நூல் கூறுகிறது. அதற்கேற்ப,
இறைவன் இமைப்போதும் நீங்காதே உடனுறைதலால் எனக்குரிய உறவு நீ என்று கூறுகின்றார். உயிரறிவு
உண்மை காணமாட்டாமல் திகைக்கும்போது, தெள்ளிய நெறியைக் காட்டி இன்புறுவித்தும், தவறு செய்தவழித்துன்பம்
நுகர்வத்தும் நல்லறிவு உதவும் திறம்பற்றி எனைக் கலந்த நட்பும் நீ என்று உரைக்கின்றார். உயிர்
வாழ்வுக்கு இடனாகிய உடற்கூறுகளும் உலகியற் பொருள்களும் ஒர் ஒழுங்கிலே நின்று பொருளும் நுகர்ச்சியும்
எய்துவித்து தனது அருட்சத்தியால் இனிது வாழச் செய்தல் பற்றி “என்னுடைய வாழ்வு நீ” என்று
சொல்லி, வாழவைப்பவனுக்கும் வாழ்பவனுக்கும் உள்ள தொடர்பு எனக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு
என்று குறிக்கின்றார். இங்ஙனம் இறைவனுக்கும் தமக்கும் உள்ள தொடர்புகளைப் பல்வேறு வகைகளால்
விளக்கக் கண்ட வடலூர் வள்ளல், உலகிற்கும் உயிர்கட்கும் இவ்வாற்றால் தலைவனாதல் இறைவற்கும்
அவன் தலைமையில் வாழ்தல் தமக்கும் அமைந்தமையறிந்து மகிழ்கின்றார். அம் மகிழ்ச்சி ஒரு பாட்டாய்
வருகிறது.
2138. என்னுயிர்நீ என்னுயிர்க்கோர் உயிரும் நீஎன்
இன்னுயிர்க்குத் துணைவனீ என்னை ஈன்ற
அன்னைநீ என்னுடைய அப்ப னீஎன்
அரும்பொருள்நீ என்னிதயத் தன்பு நீஎன்
நன்னெறிநீ எனக்குரிய உறவு நீஎன்
நற்குருநீ எனைக்கலந்த நட்பு நீஎன்
தன்னுடைய வாழ்வுநீ என்னைக் காக்குந்
தலைவன்நீ கண்மூன்று தழைத்த தேவே.
உரை: கண் மூன்றுடைய பெருமானாகிய இறைவன், எனக்கு உயிர், உயிர்க்குயிர், உயிர்க்குத் துணைவன்; அன்னையும் அப்பனும் அவன், அவரால் ஈட்டித் தரப் பெற்றதும் யான் நேர்பட முயன்று பெறுவதுமாகிய அரும்பொருள் அவன்; அதன்பாலும் பிறவுயிர்பாலும் யான் செலுத்தும் அன்பு, அதுகொண்டு செல்லும் நன்னெறி, அதனால் உளதாகும் மெய்யுறவும் அவன்; சோர்வுபடுமிடத்து அறிவருளும் நற்குருவும் வாய்க்கும்போது இடித்துரைத்து நெறிப்படுத்தும் நண்பனும் அவன்; யான் பெற்று மகிழும் வாழ்வும், அதனை இனிது வாழவைக்கும் தலைவனும் அப்பெருமானே. எ.று.
உடம்பை இனிதின் இயக்கி அறிவன அறிதற்கும், வேண்டுவன விரும்புதற்கும், செய்வன செய்தற்கும், உலகிடை விளைவன் விளைவித்து நுகர்தற்கும் வினைமுதலாவது உயிர்; உயிரின் அறிவொளியில் தனது அருளொளியைக் கலப்பித்து, அறிவு விழைவு செயல் என்ற ஆற்றல்களை மலர்வித்தலின், இறைவன் உயிர்க்குயிராவன். உயிரோடு உடனிருந்து துணை செய்தலால் உயிர்க்குத் துணைவன். இன்பப் பேற்றையே நாடுவது உயிரியல் பாதலால் அவ்வுயிரை இன்னுயிர் என்கிறார். “எல்லாவுயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்துவரூஉம் மேவற்றாகும்” என்பர் தொல்காப்பியர். உடம்பை அளித்து உலகையும் படைத்து அது தரும் பொருளை உண்பித்து வளரச் செய்தலின், இறைவன் தாயாவன்; அறிவை விளக்கிச் சான்றோனாக்குதலால் தந்தையாவன். “ஈன்று புறந்தருதல் என்றலைக்கடனே, சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடன்” என்பர் பொன்முடியார். இறைவனைப் பிரமமென்றும், அதனிடத்திற் றோன்றி அதுவாய் நிற்பது சீவப்பிரமம் என்றும் பிரமவாதிகள் கூறுவர். “பிறனுடம்பட்டது தானுடம்படுதல்” என்ற உத்திபற்றி அக்கருத்தையும் வள்ளலார் தழுவிக் கொள்கின்றார். ஞானநெறியின்கண் முயன்று பெறுவதாய்ப் பெற்றார்க்கு வற்ற இன்பம் தருவதாய் உள்ளதுபற்றி 'அரும்பொருள்' என்று இறைவனைக் குறிக்கின்றார். உயிர்ப்பொருளிடத்தும் உலகினிடத்தும் இறைவனிடத்தும் சென்று தொடர்புபடுத்தும் அன்பு உடலின்கண் நுண்ணியதாம், உயிர்க்கு உறைவிடமாகும் உள்ளத்தின் கண் சுரப்பதுபற்றி “என் இதயத்துக்கு நீ” என்று கூறுகின்றார்.
உள்ளத்துக்கு இதயம் என்பது வடமொழி வழங்கும் பெயர்; நீரை வாட்டர் (water) என்று ஆங்கிலம் வழங்குவது போல. சிறிதும் துன்பம் பயவாத நெறி நன்னெறி எனப்படும். “நல்லோரை நன்மை அறிவாய் நீயே, ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே” என நாவுக்கரசர் உரைப்பது காண்க. “பற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுதல்” சுற்றத்தார்க்கு இயல்பு; அவ்வியல்பே பற்றிப் பற்றற்ற உயிர்க்கு நீங்கா உறவாதல்பற்றி உறவு என்று உரைக்கின்றார். “உறவனாய் நின்று உள்ளம் குளிர்விப்பவன், இறைவனாகி நின்று எண்ணிறைந்தவன்” என்று நாவரசர் மொழிந்துகாட்டுதல் காண்க. “குரு” என்ற சொல் இருளை நீக்குபவன் என்று பொருள்படுவது. “இருளாய உள்ளத்தின் இருளை நீக்கி இடர்ப்பாவம் கெடுத்து ஏழையேனை உய்யத் தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போல் சிவலோக நெறியறியச் சிந்தை தந்த அருளான்”, “தன்னையும் தன் திறத்தறியாப் பொறியிலேனைத் தன்திறமும் அறிவத்து நெறியும் காட்டி” என மணிவாசகரும், “வாழும் பான்மைய ராகிய வான்செல்வம், தாமும் பன்னையாராகித் தம் வாயினால், தாழம்பூ மணம் நாறிய தாழ்பொழில், கோழம்பா எனக் கூடிய செல்வமே” என நாவுக்கரசரும் கூறுவர். “வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி” என்றும், “எங்கள் வாழ்வே வா என்றருள்வாயே (திருவா. 382)” என்றும் மணிவாசகர் பாராட்டுவர். இதனால் வடலூர் அடிகள் பல்வேறு உண்மைகளைக் காட்டி இறைவனுக்கும் தமக்கும் உள்ள தொடர்புகளைக் காட்டி அவன்பால் ஈடுபடுத்துவது காணலாம். (68)
|