69
69. தன்னோடு இறைவனுக் குளதாகிய
தொடர்புகளைப் பலவகையில் எண்ணிய வடலூர் வள்ளல், அவனது தனித்தன்மையை நினைக்கின்றார்.
அவன் தானே தனியனாய்த் தன்னின் வேறு ஒன்றும் இல்லாதவனாய் உள்ளான். அவன் தன் நிலையைக்
கண்டுணர்ந்த நாவரசர், அவனை முன்னிலைப்படுத்தி, “நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்” என்றதையும்
நினைவு கூர்கின்றார். தன்னின் வேறாய்ப் பிறிதொன்று உளதாயின், தன்னை யடையும் உயிர் உண்மை
காணாது தடுமாறி வருந்தும் என்ற அருள்மிகுதியால் தானே தானாய் உள்ளான் என்பதன்றி, இயற்கையிலே
அவன் ஒருவன் ஒருவனே, இரண்டல்லன்; ஒருமையே அவனது தன்மை என்று காண்கின்றார். தன்னின் வேறாய
பொருள் உயிர்ப்பொருள் உயிரில்பொருள் எனப் பலவாகும். அவையனைத்தும் அவனது தலைமையின்கீழ்
தழைக்கின்றன. உயிரில் பொருள்கள் வான், காற்று, தீ, நீர், மண் என ஐவகைப்படுகின்றன.
அவையனைத்தும் தமக்கென அமைந்த ஒழுங்கும் நெறியும் சிறிதும் வழுவாது நேர்பட இயலும்பொருட்டு அவை
தாமேயாய் இறைவன் நிற்பதையும், அதனால் உயிர் வாழ்க்கை இனிது நடப்பதையும் ஒர்ந்துணர்கின்றார்.
உணருங்கால், இறைவனது இறைமைத் தன்மை வெளிப்பட்டுச் சிந்திக்கும் சிந்தையின்கண் இனியதொரு
தேன் ஊறுகின்றது; தேனை நினைக்கின்றார்; அதன்கண் அமைந்துள்ள சுவை புலனாகிறது. அச் சுவை உள்ளத்தே
இன்பம் பயக்கின்றது. அந்த இன்பத்தை நாடுவது உயிர்களின் நோக்கமாக இருக்கிறது; தனக்கும் அந்த
இன்பம் நாட்டம் மிக்கிருப்பதைக் காண்கின்றார். தனக்கு அந்நாட்டம் உண்டாதற்கு இன்பமாகிய
அவனே தனக்குள் நிறைந்து இயக்குவது காரணமாதல் கண்டு, அதற்கும் ஏது அவன் தனக்கு அந்நாட்டம் உண்டாதற்கு
இன்பமாகிய அவனே தனக்குள் நிறைந்து இயக்குவது காரணமாதல் கண்டு, அதற்கும் ஏது அவன் தனக்கு
இறைவன் என்ற தொடர்பே எனத் தெளிகின்றார். அத்தௌவின்கண் அவனைப் பரவிப் பாராட்ட நினைக்கின்றார்.
அந்நினைவும் அவன் செயலே எனத் தோன்றவும் எவ்வாறு புகழ்வது என ஏங்குகின்றார். அந்த ஏக்கம்
இப்பாட்டை வெளியிடுகிறது.
2139. தானாகித் தானல்ல தொன்று மில்லாத்
தன்மையனாய் எவ்வெவைக்குந் தலைவ னாகி
வானாகி வளியனலாய் நீரு மாகி
மலர்தலைய உலகாகி மற்றுமாகித்
தேனாகித் தேனினறுஞ் சுவைய தாகித்
தீஞ்சுவையின் பயனாகித் தேடுகின்ற
நானாகி என்னிறையாய் நின்றோய் நின்னை
நாயடியேன் எவ்வாறு நவிற்று மாறே.
உரை: தானாய், தன்னையின்றி ஒன்றுமில்லாத் தன்மையானாய், தலைவனாய், வான்வழி அனல் நீர் உலகு ஆகி, மற்றுமாகி, தேனாய், அதன் சுவையாய், பயனாய் அதனை நாடுகின்ற நானாய், எனக்கு இறையனாய் நின்ற உன்னை நாயடியேன் எங்ஙனம் நவில்வேன் என்பது.
தான் அல்லாத வேறோர் பரம்பொருள் இல்லாமை செயற்கையன்று, இயற்கை என்பது விளங்கத் “தானல்லது ஒன்றும் இல்லாத் தன்மையன்” என்று கூறுகிறார். எவற்றிற்கும் என்ற்பாலது சாரியையின்றிக் குவ்வுருபேற்றது, மனத்துக்கு என்பது “மனக்கு” என வருதல்போல, தலைவன் என்பதனால், எவைக்கும் என்பது உயிர்ப்பொருள் மேல் நிற்கிறது. உயிரில் பொருள் அவற்கு உடைமை, அவன் உடையவன். வானில் வளியும், வளியில் தீயும், தீயில் நீரும், நீரில் நிலமும் தோன்றும் என்பது வைதிக சமயக்கொள்கை. நிலத்தின் குணம் நீரிலும், நீரின் குணம் நெருப்பிலும் இவ்வாறே பிறவும் காணப்படாமை கண்டு சைவநூல்கள் நிலம் நீரிலும், நீர் நெருப்பிலும் இம்முறையில் எல்லாம் வானத்தே ஒடுங்குகின்றன என்று கூறும். “இருநிலனது புனலிடை மடிதரவது எரியதுபுக” என ஞானசம்பந்தர் கூறுவது காண்க. இவையனைத்தும் தனக்குள் ஒடுங்க நிற்கும் வானத்துக்கு அப்பாலும் பல அண்டங்கள் கூறப்படுதலின், “மற்றும் ஆகி” என்று கூறுகின்றார். இவையனைத்தினும் ஒன்றாய்க் கலந்து நெறிப்பட இயக்கும் பெருநிலையை உணரும்போது, உணர்வின்கண் சிவஞானத்தேன் சுரப்பது இயல்பாதலால், உலகும் மற்றும் நினைந்த உள்ளம் தேனை நினைக்கின்றது. தீஞ்சுவையின் இனிமைப் பயனை நாடுவது உயிர்க்கு இயல்பாதல் பற்றித் “தேடுகின்ற நான்” என இயம்புகிறார். தனக்குள் தங்கித் தன்னை நெறியிற் செலுத்திப் பயன் நுகர்விப்பதுபற்றி, ”என் இறையாய் நின்றோய்” என வுரைக்கின்றார்.
இதனால் இறைவன் உயிர் பொருட்டுத் தலைவனாயும் தனக்கு இறைவனாயும் இருக்கும் தொடர்பை வற்புறத்துவது காணலாம். (69)
|