70

      70. இவ்வாறு இறைவனுக்கும் உயிர்களாகிய தமக்கும் உள்ள தொடர்புகளைக் கண்டு தெளியும் உணர்வு அவன்பால் அன்பு தோற்றுவிக்கிறது. தொடர்பினை நினைக்குந்தோறும் அந்த அன்பு பெருகுகிறது. பெருகிய அன்பால் இறைவனுடைய திருமேனி நலங்களையும் அடுக்கியடுக்கிப் பாடுகின்றனர். ஆடுகின்றனர்; பராவுகின்றனர். அவர்களைக் காணும் வள்ளலார் தாமும் பாடுகின்றார். எருதேறும் இயல்பை எடுத்துரைக்கின்றார். எவ்வுயிர்க்கும் வினைப்பயனை முறை செய்தூட்டும் அரசாம் செயலைச் சிந்திக்கின்றார். உயிர்கட்கு அவ்வப்போது அறிவு நல்கிச் செந்நெறிகண் செலுத்தும் சிறப்பைப் பாடுகின்றார். அறிவு வழி இன்பத்தேன் ஊறுகிறது. கொன்றைமலர் அணியப்பெற்ற செஞ்சடை மனக்கண்ணில் திகழக் காண்கின்றார். தில்லைமன்றில் செழுஞ்சுடராய்க் காட்சி தருகின்றார் சிவபெருமான். அவன்பால் இன்பமே நிறைந்துள்ளது, அதனைக் கண்டு இன்புறும் தம்மை நோக்குகிறார். தமது உடம்பின்கண் உறையும் உயிர்க்குள் ஒருவகை ஞானவொளி தோன்றுகிறது. அவ்வொளி துணையாக ஏனை அன்பர்களைப் பார்க்கின்றார். அப் பெருமானுடைய திருவடியை நினைந்து நினைந்து வாயாரப் புகழ்ந்து பாடிப்பாடி அவனுடைய அருளுலகத்தை அடைவதைத் தெளிகின்றார். தாம் மண்ணுலக வாழ்விலே கிடந்து மயக்குற்றிருப்பதை நினைந்து வருந்துகிறார்.

2140.

     ஆனேறும் பெருமானே அரசே என்றன்
          ஆருயிருக் கொருதுணையே அமுதே கொன்றைத்
     தேனேறு மலர்ச்சடைஎஞ் சிவனே தில்லைச்
          செழுஞ்சுடரே ஆனந்தத் தெய்வ மேஎன்
     ஊனேறும் உயிர்க்குள்நிறை ஒளியே எல்லாம்
          உடையானே நின்னடிச்சீர் உன்னி அன்பர்
     வானேறு கின்றர்நான் ஒருவன் பாவி
          மண்ணேறி மயக்கேறி வருந்தும் றேனே.

உரை:

     பெருமானே, அரசே, உயிர்த்துணையே, அமுதே, சிவனே, செழுஞ்சுடரே, தெய்வமே, உயிர்க்குள் நிறை ஒளியே, உடையோனே, அன்பர் வானேறுகின்றாராக, நான் மண்ணேறி மயங்கி வருந்துகின்றேன் என்பது.

     உழவுக்கும் அறத்துக்கும் நிற்பது எருது; அவ்விரண்டின் கண் தோய்ந்து முடிவிற் காணநிற்பது பரம்பொருள் என்பது விளங்க, எருதேறிக்காட்சி தருவது சிவம் என்ற கருத்தையுரைக்கும் திருவுருவம், எருத்தின்மேல் சிவந்து காட்டும் உருவமாதலால், எடுத்த எடுப்பில், “ஆனேறும் பெருமானே” என்று வள்ளலார் கூறுகின்றார். ஆனேறி அறங்காட்டுவோனாயினும், உயிர்கள் மனமொழி மெய்களால் செய்யும் வினைகளின் பயனை முறைசெய்து நுகர்விக்கும் செயலால், அரசனாதலால், “அரசே” என்று உரைக்கின்றார். இக்கருத்துப் புலப்படவே, இறைவனைப் “பால்வரை தெய்வம்” என்று தொல்காப்பியர் குறிக்கின்றார். இதனை எண்ணாமல் பின்வந்த உரைகாரர், “வேந்தன் மேய தீம்புனல் உலகம்” என்றவிடத்து வேந்தன் என்றது இந்திரனை என்றனர். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுகத்துத் தீம்புனற் பகுதிகளான மருதநிலத்தில் சிவன்கோயில்கள் பல்கியிருப்பதே போதிய சான்றாகும். அச்சிவன் கோயில்கள் முறைசெய்வதும் காப்பாற்றுவதுமாகிய அரசியற் செயல்கள் இரண்டையும் புரிந்த திறத்தைக் கோயில் கல்வெட்டுக்கள் இன்றும் காட்டிக்கொண்டுள்ளன. உடம்பின் நீங்கிய வழி மீண்டும் பெறலாகாத அருமைபற்றி உயிரை “ஆருயிர்” என்றல் மரபு; அவ்வுயிர் அறிவு வடிவினதாயினும், அதன் சிறுமை நோக்கி அவ்வப்போது சிவன் அறிவுத்துணை புரிவதுபற்றி, ஆருயிர்க்கு ஒரு துணையே என்று இயம்புகின்றார். ஒருமை, ஒப்பின்மை குறிப்பது. அறிவாராய்ச்சியின் விளைவு இன்பமாதலின், அதற்குத் துணைபுரிந்து இன்பம் பெறுவிப்பது தோன்ற, “அமுதே” என்கிறார். சிவனுக்குக் கொன்றை அடையாள மாலை. புதுமலர் என்றற்குத் “தேனேறும்மலர்” என்று சிறப்பிக்கின்றார். தேயும் பிறைக்கும், அழிக்கவரும் கங்கைக்கும் புகலிடமும் அரணுமாய் விளங்குவதுபற்றிச் சடையை எடுத்துரைக்கின்றார். தில்லையை ஞானவொளி என்பவாகலின், ஞானவொளியாய்க் காட்சி தரும் கூத்தப் பெருமானைச் “செழுஞ்சுடர்” என்று சிறப்பிக்கின்றார். உயிர்கட்கு இன்பவாழ்வு எய்த வேண்டி, ஆனந்தத் தாண்டவம் புரியவது தோன்ற, “ஆனந்தத் தெய்வமே” என்று அறிவிக்கின்றார். இன்பமல்லது ஏனைத் தெய்வங்கள்போல இன்பமும் துன்பமும் உடையதன்று என்றற்கு, இவ்வாறு கூறினார் என்று உரைப்பினும் அமையும். ஏனைத் திருமாலும் பிரமனும் இந்திரனுமாகிய தெய்வங்கள் பலவும் துன்புற்ற செய்தியை புராணங்கள் விரியக் கூறுகின்றன. இதனைப் பிறிதொரு பாட்டில், “ஞானத் திருமணி மன்றகத்து இன்பவுருவாய் என்றும் திகழ்கருணை நடம்புரியும் சிவமே” என்று வள்ளலார் உரைப்பது காண்க. உடலின் கண் ஊன் கலந்து உலவும் உயிர்க்கும், அறிவொளி நிறைந்து “நல்லனவும் தீயனவும்” அறிவிப்பது கொண்டு “ஊனேறும் உயிர்க்குள் நிறை ஒளியே” என வுரைக்கின்றார். உலகியற் பொருள்களைப் படைத்தளிப்பதால் அவற்றை உடமையாகவும், உயிர்கட்கு உதவி வாழச் செய்வதால் அவற்றை அடிமையாகவும் உடையனாதல் பற்றி, “எல்லாம் உடையோனே” என்று கூறுகின்றர். அது குறித்த அவன் திருவடியை நினைத்து அன்பு செய்கின்றவர், அவனது அருணிழல் இன்பவாழ்வைப் பெறுவது கண்டு, “நின் அடிச்சீர் உன் அன்பர் வானேறுகின்றார்” என்றும், தான் அது பெறாது மண்ணுலகில் இருந்து துன்புறுவதைத் தெரிவிப்பாராய், “நான் ஒருவன் மண்ணேறி மயக்கேறி வருந்துற்றேன்” என்றும் உரைக்கின்றார். மண்ணியல் வாழ்வு தன்னையே விரும்பியுறையுமாறு மயக்குவது பற்றி, “மண்ணேறி மயக்கேறி வருந்துற்றேன்” என்று காரண காரிய முறையில் காட்டுகின்றார். வருந்து: முதனிலைத் தொழிற்பெயர், இஃது அம்மீறு பெற்று வருத்தம் என வரும்.

     இதனால் இறைவன்பால் அன்புடையார் பெறும் இன்பவாழ்வு தாமும் எய்துதல் வேண்டுமெனத் தமது விழைவு தெரிவிப்பது பயனாதல் காணலாம்.

     (70)