71
71. அன்பர் நெஞ்சில்
கொண்டு ஆனந்த வடிவு காட்டி இன்பம் பெறுவிக்கும் அருட்செயலை எண்ணுகின்றார் நம் வடலூர் அருள்
வள்ளல். தமது நெஞ்சிலும் இறைவன் இடங்கொண்டு அருளவேண்டும் என்ற ஆர்வம் தோன்றிப்
பெருகுகிறது. அவனது அருளுருவம் நெஞ்சின்கண் தோன்றுகிறது. திருமுடியிற் கிடந்து ஒளிசெய்யும் சிவந்த
சடையைக் காண்கின்றார். சடைமுடி அவனது பெருமையைப் புலப்படுத்துகிறது; அதனை யெண்ணித் தம்மை
யொத்த அன்பர் பலரும் பரவுவதை நினைக்கின்றார். அவனது திருக்கையில் அழகிய சிறியமான்
இருக்கிறது. அதனை ஏந்துகின்ற கை செழுவிய தாமரை மலர் போலும் காட்சி தந்து இன்புறுத்துகிறது.
அந்த மானும் தனக்கு ஆதரவு நல்கும் கைம்மலர்க்குள் அடங்கி மகிழ்கிறது. அதன் தோற்றத்திலும்
கண்களிலும் இளமை கனிந்து பொலிகிறது. இந்நிலையில் அவனது திருமேனி ஞானவொளி பரப்பிச் சிவமாந்தன்மையைச்
சிறப்பித்துக் காட்டுகிறது. சிவபரம்பொருள் இந்த அழகிய கோலத்துடன் தில்லையம் பலத்தில் செம்மணிபோலும்
ஒளி திகழக் கூத்தப்பிரனாய் ஆடல் புரிவதும், திருவொற்றியூரில் இளமை முதல் தான் கண்டு பயின்ற
எழுத்தறி முதல்வனாய் விளங்குவதும் நினைவில் புலப்படுகின்றன. அத் திருவுருவம் தமது மனநோயைப்
போக்கி இப்போது அவன் திருவடியைப் பாடிப்புகழும் வாழ்வளித்தமையும் நினைவில் எழுகிறது. இங்ஙனம்
வாழவைத்தமையின் என் நெஞ்சில் இடம் பெறுதற்கு ஏற்புடைய தொடர்புண்டு என வேண்டற்குரிய விருப்பம்
எழுகிறது. திருக்கோயில்களில் இந்நிலையில் உள்ளத்தில் எழுகிறது. மெய்ந்நெறி நிற்போர் யாவராயினும்
அவர் நெஞ்சின்கண் தங்குதல் இறைவனாகிய சிவபெருமானுக்கு இயல்பு என்று விசையும் தோன்றுகிறது.
நீதிபலவும் உருவாய் அமைந்த நீதனானதல்லாமலும் அமைந்த நீதிக்கு இடம் காலங்களும் சிறுமை
பெருமைகளும் உயர்வு தாழ்வுகளும் தடையாகாவாதலாலும் நெஞ்சிடம் கொள்ளற்கு விலக்கில்லை எனத் தெளிகின்றார்.
இனித் தனது நெஞ்சிற்கு அப்பெருமான் எழுந்தருளுதற்கேற்ற தகுதியுண்டோ எனத் தன் நெஞ்சினை நோக்குகின்றார்.
மெய்ந்நெறிக்கண் ஒழுகும் மேலோரது நெஞ்சின் தகுதியும் தூய்மையும் அவன் இடம் கொள்ளுதற்கு இனிய
வாய்ப்பளிக்கின்றமை அவரது ஆய்வுக்கு மேற்கோளாகிறது. அது கொண்டு ஆயுமிடத்து, ஐம்புல வேட்கைகளும்,
மகளிர் இன்பமயக்க வுணர்களும், வஞ்சனை முதலிய தீ நினைவுகளும், அவற்றால் உளவாகும்
துன்பவுணர்வுகளும் அடைந்து, இறைவனை நினையும் நெறியை மேற்கொள்ளாவாறு விலக்கி வேறு பொய்ந்நெறியிற்
செலுத்தச் சொல்லுகின்றமை தெரிகிறது. ‘பொல்லாதார் சென்றடையும் இடத்தை நல்லோர்
விரும்பாராதலால்’ இறைவன் தன் நெஞ்சின்கண் இடம்பெற நினையான்; நினைவானாயின் மெய்ந் நெறியுடையார்
நெஞ்சமே விழையும் நீதன் என்பது என்னாகும் என்று கவல்கின்றார்.
2141. செஞ்சடைஎம் பெருமானே சிறுமான் ஏற்ற
செழுங்கமலக் கரத்தவனே சிவனே சூழ்ந்து
மஞ்சடையும் மதிற்றில்லை மணியே ஒற்றி
வளர்மருந்தே என்னுடைய வாழ்வே வேட்கை
அஞ்சடைய வஞ்சியர்மால் அடைய வஞ்சம்
அடையநெடுந் துயரடைய அகன்ற பாவி
நெஞ்சடைய நினைதியோ நினைதி யேல்மெயந்
நெறியுடையார் நெஞ்சமர்ந்த நீத னன்றே.
உரை: எம்பெருமானே! மானேற்ற கரத்தையுடையவனே, சிவனே! தில்லை மன்றுள் ஆடும் மணியே, ஒற்றியூர் மருந்தே, என் வாழ்முதலே. வேட்கை ஐந்து, வஞ்சியர் மால், வஞ்சம் துயர் முதலியன அடைந்துள்ளமையால் மெய்ந்நெறியினின்றும் அகன்ற பாவியாகிய என் நெஞ்சினை அடைய நினைவாயோ? நினைவாயாயின் நின்னை மெய்ந்நெறியுடையவர் நெஞ்சின்கண் விரும்பியுறையும் நீதன் எனப்படும் நின் புகழ் மாசுபடுமே எ.று.
தேய்ந்து மெலிவுற்ற திங்கட்பிறைக்குப் புகலளித்துச் செருக்குற்றுவந்த கங்கைப் பெருக்கை அடக்கிய செம்மைபற்றிச் செஞ்சடை என்று சிறப்பிக்கின்றார். முனிவர் கறுவி விடுத்த கடுமானின் கடுமை போக்கிச் சிறுமைப் படுத்திக் கையிலேற்றமையின் “சிறுமான் ஏற்ற கரத்தவன்” என்று கூறுகின்றார். சிறுமான்-சிறுமையுற்ற மான்; சிறுமை எய்தினமை பற்றி வருந்தா வண்ணம் செங்கமலத்தின் மென்மை கொண்டது சிவபெருமான் திருக்கை என்றற்குச் செழுங்கமலக் கரத்தவன் எனச் செப்புகின்றார். தில்லையிற் சிவஞான முதல்வனாகவும், திருவொற்றியூரில் சிறப்புடைய கல்விதரும் இறைவனாகவும் விளங்குவது தோன்ற, தில்லை மணியே என்றும், ஒற்றி வளர்மருந்தே என்றும் கூறுகின்றார். கல்வியை மனத்திற் படியும் மம்மர் அறுக்கும் மருந்து என்பதுபற்றி மருந்தே என்கின்றார். ஒற்றியூர்ப் பெருமானை எழுத்தறியும் பெருமான் என்பது வழக்கு. ஒற்றியூர்க் கோயில் மண்டபம் ஒன்றுக்கு வியாகரணதான மண்டபம் என்பது பெயர். மெய்வாய் முதலிய பொறிவாயிலாக எழும் ஆசை யைந்தையும் 'வேட்கை அஞ்சு' என்று குறிக்கின்றார். வஞ்சியர்; மகளிர். மகளிரால் உண்டாகும் காமமயக்கம் மால் எனப்பட்டது. ஐம்பொறிகளாலும் நுகரப்படும் பான்மைபற்றிக் காமவேட்கை அஞ்சினை எடுத்துக் கூறுகின்றார். கள்ளுண்பார் போல மறைவில் நுகர்ந்து நுகரப்படும் வஞ்சத்தை தன்கண் இயல்பாகக் கொண்டமையில் வஞ்சியர் மாலுக்கு அடுத்து மொழிகின்றார். இவற்றால் விளையும் பயன் நெடுந்துயர் என்று இசைக்கின்றார். துயர் காரணமாகப் பிறக்கும் நினைவுகளே நெடுந்துயர் எனவுரைக்கின்றார். வேட்கை யஞ்சும் பிறவும் பற்றியி நினைவுகள் பெருகி நெஞ்சகத்தை வேறு பாவநெறியிற் போக்கினமை உரைப்பவர், அகன்ற பாவி என்று தெரிவிக்கின்றார். அருளே உருவாக உடையனாதலால், மெய்ந்நெறியோர் நெஞ்சில் இடம் கொள்வதுபோலப் பாவியாகிய என் நெஞ்சினையும் இடங்கொள்ள நினைப்பது செய்குவை என்பார். “பாவிச் நெஞ்சுடைய நினைதியோ” என்று வினவுகின்றார். நினைப்பது மெய்ந்நெறியுடையார் நெஞ்சின்கண் விரும்பியுறைதலை நீதமாகவுடையவன் என்று சான்றோர் போற்றிப் புகலும் நின் புகழை மாசுபடுத்தும்; மெய்ந்நெறியோர் நெஞ்சமர்ந்து மகிழும் நீதன் என்பது அன்றாம்; அதாவது நீதன் அல்லனாம் எனத் தூற்றப்படும் என்று கூறகின்றார். இதனால் என் விருப்புணர்ந்த என் நெஞ்சிடம் கொள்ள நீ நினையாய்; நினைவாயாயின் அது நின் புகழை மாசுபடுத்தும் என்று மறுத்த வாயப்பட்டால் விருப்புவது பயனாம். (71)
|