72

     72. இங்ஙனம் நமது நெஞ்சினும் இறைவன் இடம் கொள்ள வேண்டும் என விழைந்த வடலூர் வள்ளல் தாம் விரும்புவது சிவபெருமானாயினும் தமது எண்ணம் நிறைவுறும் என நினைக்கின்றார். அப்பெருமான் விரும்புதற்குரிய தகுதிதன்பால் உளதோ எனத் தம்மைத்தாமே ஆராய்கின்றார். பொன்னையும் பொருளையும் உறுதிப்பொருளாகக் கருதி அவற்றை ஈட்டுவதிலும் காப்பதிலும் கண்ணும் கருத்துமாயிருக்கும் மக்களை நாடுவதும், அவரது உறவு பெற முயல்வதும், பெற்ற வழி அவர் தரும் பொருள் பெற்று உண்பதுமாகிய இந் நினைவுகளே பிற மக்கள் உள்ளமுழுதும் நிறைந்திருப்பதை நோக்குகின்றார். நேரே தமது நெஞ்சின்கண் அந்நினைவுகளைக் கொள்ள மாட்டாராயினும் அந் நினைவுடையார் இடையில் தாம் இருப்பதால், அந்நினைவுகள் தம்மை அறியாமலே படிந்திருக்கலாம் என்ற நினைவு அவரை அலைக்கின்றது. அன்றியும் மன்னுயிரனைத்தையும் தன்னுயிராகப் பேணும் சமரச சன்மார்க்கச் சான்றோராதலின், தம் நெஞ்சிற் புகுந்து இன்புறுத்தும் இறைவன் ஏனையுயிரிடத்தும் புகுந்து நிறைந்து இன்புறுத்தல் வேண்டுமென முறையிடும் இயல்பினர். பொன்னும் பொருளும் உடையாரை நாடும் பிறர் இயல்பு அறிந்திருத்தலால் அதுபற்றி இந்நினைவு வள்ளலார் உள்ளத்தில் எழுவதாயிற்று. இத்தகைய மக்கள் மனத்தில் இறைவனைப்பற்றி நினைவு எழாமையின் இறைவன் அவர்களை நினையான், ஆகவே என்னையும் தன் திருவுள்ளத்தில் நினையா தொழிதலு முண்டு என எண்ணுகின்றார்; “பரவுவாரையும் பழித்து இகழ்வாரையும் உடையான்” என்று ஞானசம்பந்தர் முதலியோர் அறிவுறுத்தலால் நினைபவர் நினையாதவர் என வேறுபாடின்றி அருளே உருவாய தன் திருவுள்ளத்தில் நினைத்தலும் செய்வர் என்றோர் எண்ணம் எழுகிறது. “நினைப்பினும் நினைப்பர் நினையா தொழியினும் ஒழிவர்” என்ற எண்ணங்கட்கிடையே தடுமாறுகின்ற வள்ளலார், அருள் நிலையை நினைக்கின்றார். தாயினும் சிறந்த தயாவுடையானாய் ஒளிதந்து நல்கும் இன்பத்தை எண்ணுகின்றார்; மன முதலிய கருவிகள் தெளிவிழக்குங்கால் தெளிவருளி யுதவும் உறவாக விளங்குவதை உன்னுகின்றார். முறை செய்யும் அரசு போலச் செய்வினை நோக்கிப் பயன் நுகர்விப்பதை நினைக்கின்றார். தெளிவுக்காலத்தில் சிந்தைக்கண் வெளிப்பட்டு இன்புறுத்திய அப்பெருமான் மயக்குற்றபோது மறைந்தமை யுணர்கின்றார். அதன் பயனாகத் தாம் துன்புற்றதையும் நினைத்துப் பார்க்கின்றார். இதுவும் அவன் செயலென்று அறிகின்றார். அப்பெருமான் தமது நெஞ்சையிடமாகக் கொள்வனாயின் இத்துன்பங்கட்கு இடம் இராது; அவனை நெஞ்சின்கண் அடைவது யாங்ஙனம்? செய்வதொன்றும் தோன்றாமையின் வருந்துகிறார்.

2142.

     அன்னையினும் பெரிதினிய கருணை ஊட்டும்
          ஆரமுதே என்னுறவே அரசே இந்த
     மன்னுலகில் அடியேனை என்னே துன்ப
          வலையிலகப் படஇயற்றி மறைந்தாய் அந்தோ
     பொன்னைமதித் திடுகின்றோர் மருங்கே சூழ்ந்து
          போனகமும் பொய்யுறவும் பொருந்தல் ஆற்றேன்
     என்னைஉளங் கொள்ளுதியோ கொள்கி லாயோ
          என்செய்வேன் என்செய்வேன் என்செய் வேனே.

உரை:

     கருணையூட்டும் ஆரமுதே உறவே அரசே என்னைத் துன்பவலையில் அகப்படுத்தி மறைந்தாய், இஃது என்னே? பொன்னையே பொருளாக மதிப்பவரை யடைந்து அவர்தரும் உணவையும் பொய்யுறவையும் பெறுதற்கு விரும்பி வாழும் வாழ்வை விரும்பமாட்டேன்; அங்ஙனம் இருக்கும் என் இயல்பை எண்ணி நின் திருவுளத்தில் ஏற்பாயோ ஏற்கமாட்டாயோ? ஏலாயாயின் யான் என் செய்யவல்லேன். எ.று.

     தன்னின் வேறாய உயிர்க்குத் தன் இனிய உயிரையும் அளிக்கும் தாய்மையினும் உயர்ந்த பண்பு இல்லை. அருளமுதம் பொழிவதில் இறைவன்தாயினும் சாலப் பரிவுடையன் எனச் சான்றோர் கூறுதலால் “அன்னையினும் பெரிது இனிது கருணையூட்டும் ஆரமுதே” என்று சிவனைப் பரவுகின்றார். பெரிது-மிகுதி. தன்னை யுண்டாரை வாழவைத்து, உண்டாருள்ளத்தில் தாமுயர்ந்து தம்மைப் பிறர் தொழல் வேண்டும் என்னும் உயர்வைப் பயக்கும் வானவரமுதம் போலாது, தம்மைப் போல் எவ்வுயிரும் அருள்பெற்று இன்புறவேண்டும் அரியவுணர்வைப் பெறுவிக்கும் அருமை புலப்படக் “கருணையூட்டும் ஆரமுதே” என்று சிறப்பிக்கின்றார். “எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் அங்கே வந்து அருள் புரிவது பற்றி” “என் உறவே” என்று உரைக்கின்றார். தன்னை நினைந்து தன்அருளாணை வழி நிற்பார்க்கு அறிவின்பம் தருவதும் அல்லார்க்குத் துன்பம் நல்கித் திருத்துவதுமாகிய செயல்புரிவதுபற்றிச் சிவனை 'அரசே' என்று பரவுகின்றார். மன்னுலகு-பெரியவுலகம்; பெருமையுடையதாயினும் நிலையாமையும் துன்பமும் விரவிய தாகலின் இதனைத் தாம் விரும்பாமை தோன்ற மன்னுலகு என்று மொழிகின்றார். திருவடியே நினைபவர் பொன்னுலகின் மேலாய இன்பவுலகு எய்துவராக, அவரைப்போல் நின் திருவடியே பற்றாகவுடைய என்னை இம்மண்ணுலகில் துன்பவலையில் அகப்பட்டு வருந்தச் செய்தது யாதுகாரணம் பற்றியோ என்பாராய், “என்னே துன்பவலையில் அகப்பட இயற்றினாய்” என்று வினவுகின்றார். துன்பவலையிற் கிடத்தியதோடன்றி யான் கண்ணிற்கண்டு அருள் பெற்றுய்தி பெறாவண்ணம் மறைந்தனையோ யான் என் செய்வேன் என்று கையறவு படுதலால்; “மறைந்தாய் அந்தோ” என்று புலம்புகின்றார். பொன்னைப் பொருளாக மதிப்பவர் பக்கல் சென்று அவரைச் சுற்றித் திரிந்து அவர்தரும் உண்பொருளையும் காட்டும் பொய்யுறவையும் நான் மதிப்பதில்லை. அவரை அடையவும் மாட்டாத இயல்பினேனாதலால் என்னை நின் திருவுள்ளத்தில் நினைந்தருளல் வேண்டும் என்பார், 'என்னை உளம் கொள்ளாதியோ' என்று முறையிடுகின்றார். கொள்ளாதொழியின் தமக்கு உய்தி வேறில்லை என்பதை வற்புறுத்தற்கு என்செய்வேன் என்செய்வேன் என்செய்வேன் என்று பன்முறையும் வேண்டுகின்றார். இதனால், தன்னை இறைவன் திருவுள்ளம் விழைதற்கேற்ற தகுதியுடைமைகாட்டி அருள் புரிய நினைந்தருள வேண்டுவது பயன் என்க.

     (72)