73
73. இங்ஙனம் எல்லாமாய் எப்பொருட்கும்
தலைவனும் இறைவனுமாய்க் கலந்திருக்கும் முதல்வனைக் “கல்லார் நெஞ்சில் நில்லான்” என்று பெரியோர்
கூறுவது எவ்வாறு எனச் சிலர் கேட்கும் கேள்வி வள்ளலார் திருவுள்ளத்தில் எழுசின்றது. தானாகித்
தான் அல்லது ஒன்றுமில்லாத் தன்மையானாகி இறைவன் இருக்கும் திறத்தைக் கற்குமுறையில் கல்லாதவர்
நெஞ்சில் அவனது இருப்புப் புலப்படாமை பற்றி அவ்வாறு பெரியோர் கூறுவதன் கருத்து எனத்
தெருட்டிய வடலூர் அடிகள் தம்மை நினைக்கின்றார். தாம் படித்தை நோக்குகின்றார். படித்தவை
பலவும் உலகியல் நூல்கள்; உலகியற் பொருள்கள் நிலையில்லாமையால் பொய்படுவன. அங்ஙனமிருக்க
அந் நூல்களைப் படித்தது ஏன் என்று தம்மையே வினவுகிறார். காரணம் தாம் அல்ல; தமக்கு உண்ணின்ற
அறிவுருவாய இறைவன் படிக்கச் செய்தானென உணர்கின்றார்; படித்தவை மெய்யாதல் கண்ட அடிகளாரின்
உள்ளம் படிப்பின்மேல் கொண்ட விருப்பம் ஒழித்தது; அதற்கும் காரணம் அவன் ஒழிப்பித்தமையே
என்று தேறுகின்றார். படிப்பித்ததும படிப்பின் மேற்சென்ற விருப்பதை ஒடிப்பித்ததும் இறையருள்
எனத் தெளிந்த அறிவு அவனது திருவடியல்லது துணை வேறு இல்லை என்று அதனை உறுதியாகப் பற்றுகிறது.
அதுவும் அவன் பற்றச் செய்வதால் என அறிகின்றார். இவ்வறிவு அவர்க்கொரு பெருமிதம் நல்கிறது.
திருவருள் பெற்ற பெரியோர்போலும் தோற்றம் உண்டாகிறது. அதனையும் தம்மின் வேறாக வைத்துக்
காண்கின்றார் அடிகளார். இது அருள் பெற்றோர்போலும் நடிப்பு என்று கூறுகிறார். இந்த நடிப்பு தாமே
மேற்கொண்டதோ இறைவனே நடிக்கச் செய்கிறனோ என ஐயுறுகின்றார். அதனையே நெஞ்சிற் கொண்டு நினைந்து
வருந்துவதை விடற்கு இப்பாட்டில் வைத்து அவனிடம் படைக்கின்றார்.
2143. படித்தேன்பொய் உலகியனூல் எந்தாய் நீயே
படிப்பித்தாய் அன்றியும்அப் படிப்பில் இச்சை
ஒடித்தேன்நான் ஒடித்தேனோ ஒடுப்பித் தாய்பின்
உன்னடியே துணையெனநான் உறுதி யாகப்
பிடித்தேன்மற் றதுவும்நீ பிடிப்பித் தாய்இப்
பேதையேன் நின்னருளைப் பெற்றோர் போல
நடித்தேன்எம் பெருமான்ஈ தொன்றும் நானே
நடித்தேனோ அல்லதுநீ நடிப்பித் தாயோ.
உரை: உலகியல் நூல் படித்தேன்; அச்செயலை எண்ணினால் நீ படிப்பிக்கப் படித்தேன் என்றுதான் நினைக்கவேண்டும்; பின் படிப்பில் இச்சை ஒடித்தேன்; ஒடித்தவன் நானோ எனின் அன்று; நீயே ஒடிப்பித்தாய்; பின்பு உன் திருவடியே துணையென்று உறுதியாகப் பிடித்தேன்; அதனையும் நீ பிடிக்கச் செய்தாய்; என் பேதைமையால் நான் உண்மையுணராமல் நின்னுடைய அருள்பெற்றோர்போல உலகவர் காண நடித்தேன். ஆனால் உண்மையாகவே நான் நடித்தேனோ, நீ நடிப்பித்தாயோ தெரியேன் என்பது.
உலகியற் பொருள்கள் தோற்றம் நிலை இறுதியென மூன்று செயல்களை யுடையன வாதல்பற்றி, அவற்றைப் பொய் என்பது மரபு. அப்பொருள்களின் நலந்தீங்குகளை உரைப்பதுபற்றியே உலகியல் நூலைப் “பொய் உலகியல் நூல்” என்று கூறுகின்றார். உலகியல் வாயிலாக அறிவு வளர வேண்டியிருத்தலால் அவற்றைப் படிப்பது இன்றியமையாததாயிற்று; ஆதலால் அவற்றைப் “படித்தேன்” என்று எடுத்து மொழிகின்றார். அவற்றின் பொய்ம்மை யுணர்ந்தபின், படித்தல் என்ற செயற்குரிய எண்வகைக் கூறுகளையும் எண்ணியபோது அது இறைவனது திருவருளின் செயலாதல் தேர்ந்தேன் என்பாராய், “எந்தாய் நீயே படிப்பித்தாய்” என்று உரைக்கின்றார். அப்படிப்பு உலகியற் பொய்ம்மை யுணர்வுகளையே உள்ளத்தில் நிறைத்து அவற்றின் நுட்பங்களைக் காட்டி இன்புறுத்தி அவற்றையே விழையுமாறு மயக்கினமையின், “படிப்பில் இச்சை ஒடித்தேன்” என்று கூறுகிறார். படிப்பில் உளதாய இச்சை நான் எனது என்னும் செருக்கினைக் கிளைப்பித்தமை; அக்கிளைகளை ஒடித்த வழி அறிவு நேரிதாகச் செல்லும்; அதற்காக அப்படிப்பில் இச்சை கெடுத்தேன் என்னாமல் ஒடித்தேன் என்று இயம்புகின்றார். ஒடித்தல்-ஒழித்தல். “ஒடியாது விருந்தெதிர் பெறுகதில் யானே” (புறம். 306) என வருதல் காண்க. முளைத்தெழும் செடியின் பல திசையில் கிளைக்கும் கிளைகளை ஒடித்து நேரிதாக ஒழுங்குற வளரச் செய்வது உலகியலிற் காண்பது. நேர்மை கருதி நானே ஒடித்தேனோ என்று எண்ணுகின்றவர் நேர்மைக் கருத்திது திருவருளால் பின்னர்த் தோன்றியது கண்டு, அது தன் செயலன்று என்பது விளங்கவே, “நான் ஒடித்தேனோ இல்லை; நீ ஒடிப்பித்தாயோ” என்று உரைக்கின்றார். நேர்மைக் கண் நின்ற அறிவு உலகியலின் பொய்ம்மையையும் படிப்பின்கண் சென்ற இச்சையின் இயல்பையும் கண்டதும், தன்னை உடனின்று இயக்கும் திருவருளல்லது வேறு துணையில்லை என்று தெளிந்து அதனை உறுதியாகப் பற்றுகிறது. அதுபற்றியே, “பின் உன்னடியே துணையென நான் உறுதியாகப் பிடித்தேன்” என்று முறையிடுகின்றார். தொடக்கத்தில் உலகியல் நூலையும் பின் அதன்பால் இச்சையையும், பின்பு திருவருளையும் மாறிக் கண்டு மயங்கிய என் அறிவுக்குத் திருவருளைப் பற்றுதற்குரிய உறுதி இப்போது எய்துதற்குக் காரணம், அருள் செய்யும் பரம்பொருளாதல் தெரிந்தமையால், “மற்று அதுவும் நீ பிடிப்பித்தாய்” என்று பேசுகின்றார். அருளும் அவனும் துணை செய்யாத நிலையில் தம்பால் உள்ளது பேதைமையே என்று தெளிகின்றார். அதனைப் 'பேதையேன்' என்று குறிக்கின்றார்; பேதைமையுடையேன் என்பது பொருள். அப்பேதைமை முற்றவும் நீங்காமையால் நின் அருளை பெற்றோர் போலச் செருக்கி நடித்தேன் என்று சொல்லுகின்றார். நடிப்பின்போது இஃது ஏன் என்ற வினா ஒன்று வள்ளலார் திருவுள்ளத்தில் எழுகின்றது. நடித்தற்கு உரியவன் சிவபெருமானாதலால், நடித்தலும் நடிப்பித்தலும் என் செயல் அல்ல என்பாராய். “ஈ தொன்றும் நானே நடித்தேனோ நீ நடிப்பித்தாயோ” எனக் கேட்கின்றார். “நான் எனது என்ற அவரவரைக் கூத்தாட்டுவான் அப்பெருமானே” என்று மணிவாசகப் பெருமான் கூறுவதும், “ஆட்டு வித்தால் ஆரொருவர் ஆடாதாரே” என நாவரசர் கூறுவதும் வடலூர் வள்ளலார் மனவுணர்வில் தோன்றித் தேற்றுகின்றன. இதனால் இறைவன் இயக்குவோனாகவும் தாம் இயங்குவோனாகவும் தொடர்புற்றிருப்பதைத் தெரிவிப்பது காணலாம். (73)
|