74

     74. மண்ணில் வாழ்க்கையை எண்ணிய வள்ளலார், மண்ணைச் சூழ்ந்து நிற்கும் ஏனைப் பூதங்களை நோக்குகின்றார். அவை அனைத்தையும் தன்னுள் அடக்கித் தோன்றும் பிரபஞ்சத்தைப் பார்க்கின்றார். அது விளைவிக்கும் இன்ப துன்பங்களிலும், இன்பத்தில் விருப்பும் துன்பத்தில் வெறுப்பும் உணர்வில் எழுகின்றன. இன்பம் பெறுதற்கெழும் முயற்சியும் துன்பத்தை விலக்குவதற்கான எண்ணங்களும் மனத்தின்கண் நிறைந்திருப்பதைக் காண்கின்றார். இவை யாவும் வாழ்கையில் இடம் பெற்று மனத்தை ஓய்வு ஒழிவின்றி அலைப்பதையும், அதனூடு தமது அறிவு கிடந்து அலமருவதையும தெளிகின்றார். மத்தாற் கடையப்பட்ட தயிர்போல மனம் தடுமாறி வருந்துவது தெரிகிறது. பிரபஞ்ச வாழ்வில் இன்பங்கள் எய்தும் போதும் இன்பப் பேற்றுக்குரிய வாய்ப்புக்கள் தோன்றும் போதும் மனத்தில் வாழ்க்கையால் பெருங்காதல் தோன்றி மகிழ்விக்கின்றது; துன்பநுகர்ச்சி யுண்டென்பதும் அதற்குரிய சூழல்கள் உள்ளன என்பதும் அறவே நெஞ்சின்கண் மறைந்து போகின்றன. அதனால் வாழ்க்கைபால் உளதாகிய ஆசை பெருகி அறிவை மயக்குகின்றது. மயக்கமும் ஆசையும் இடம் பெறுதலால் உள்ளத்தே மதமும் உடலின் மதர்ப்பும் உண்டாகின்றன. இவற்றினிடையே நல்லறிவு ஒளிமழுங்கிக் கூம்பிவிடுதலால், சொல்லும் செயலும் பித்தேறியது போலும் நிலையை எய்துகின்றன. பேய்க் கோட்பட்டது போல மனம் சுழலுகிறது. துன்ப நினைவும் செயலும் சொல்லும் மிக்கு அறிவற்ற பேதைபோல் அலைவிக்கின்றன. அக் கலக்கத்திடையே ஒரொருகால் தெளிவு பிறக்குங்கால் இறைவன்பால் அன்புடைய பெரியோர்களின் வாழ்வு தெரிகிறது. நல்லன விதைத்துப் பெருவிளைவு பெற்று மகிழ்பவரைப்போல் அப் பெருமக்கள் மேனிலையுற்று ஞானவொளி கொண்டு விளங்குகின்றார்கள். அவரது நிலை உனக்கு ஒத்ததாய் இருப்பது கண்டு அவர்களின் உயிர்க்குயிராய் நிறைந்து உண்மையொளி உதவி ஊக்குகின்றாய்; அவ்வுதவி பெறாது யான் வருந்துவது, தகுதியாகுமா? உணரும் திறமின்றி உறங்குகின்றேன் என்று பரிவுற்றுப் பாடுகின்றார்.

2144.

     மத்தேறி அலைதயிர்போல் வஞ்ச வாழ்க்கை
          மயலேறி விருப்பேறி மதத்தி னோடு
     பித்தேறி உழல்கின்ற மனத்தால் அந்தோ
          பேயேறி நலிகின்ற பேதை யானேன்
     வித்தேறி விளைவேறி மகிழ்கின் றோர்போல்
          மேலேறி அன்பரெலாம் விளங்கு கின்றார்
     ஒத்தேறி உயிர்க்குயிராய் நிறைந்த எங்கள்
          உடையானே இதுதகுமோ உணர்கி லேனே.

உரை:

     மத்தாற் கலக்குண்டு தயிர்போலப் பிரபஞ்ச வாழ்க்கையாகிய மத்தால் கலங்கி மயக்கமுற்று விருப்பம் மிகுந்த பித்தேறிய மனத்தில் பேய்க் கோட்பட்டது போலத் தெளிவிழிந்து பேதையாய் விட்டேன்; நல்லன விதைத்தும் செல்வ விளைவு பெற்ற நல்லேராளர் போல் அன்பர் பலரும் இன்ப விளைவுபெற்று மேனிலை எய்துகின்றார்கள் அவர்க்கு ஒத்த வகையில் உயிர்க்குயிராய் அறிவொளியாய் நிறைந்த பெருமானே, எனக்கு இது தகுமா? உணரமாட்டாமல் வருந்துகின்றேனே. எ.று.

     கடையும் மத்தினால் உறைந்திருக்கும் தயிர் உடைந்த அதன்மேல் பாய்ந்து எழுதலால், மத்தேறி அலைதயிர் என உள்ளவாறு உறைக்கின்றார். துன்பத்தால் கலக்கமுறும் நிலைக்கு, “மத்துறுதயிரை” உவமம் செய்வது இளங்கோவடிகள் முதலிய சான்றோர் மரபு. வஞ்ச வாழ்க்கை - பிரபஞ்சவாழ்க்கை. பிரபஞ்சம் என்ற சொல் வஞ்சம் எனச் சுருங்கி வழங்கும். “மாயையின் உள்ள வஞ்சம்” என அருணந்தி சிவனார் கூறுவது காண்க. அலைக்கும் இயல்புபற்றிப் பிரபஞ்ச வாழ்க்கைக்கு மத்தை உவமிக்கின்றார். வாழ்க்கையாகிய மத்தினால் உடைந்து நீராய் மாற்றப்படுவது மனம் என்க. உடைந்து மோராய் உருமாறும் தயிர் போல, மனம் உரமும் பெருமையும் உடைந்து மயலாய் விரும்பும் மெலிவு பெறுகிறது. பயன் நுகர்ச்சிக்கும் விருப்பு முயற்சிக்கும் மெலிவு செயற்பாட்டுக்கும் வேண்டுவன. இவை அளவோடு நின்றவழி நன்மையும் மிக்கவழிக் குற்றமும் பயப்பன். நான் எனது என்னும் உணர்வு வடிவில் இயக்குவது மதம் எனப்படும் குற்றம். இவை அளவோடு நின்றவழிப் பிறக்கும் இன்பத்தால் ஆர்வம் தோன்றி மிகைபடச் செய்வதால், அறிவு மயங்க, மனம் பித்தேறித் தடுமாறி அலைகிற தென்பாராய், “பித்தேறி உழல்கின்ற மனத்தால்” என்று கூறுகின்றார். இந்நிலையில் பெறுவனவற்றால் நிரம்பா ஆசையே மிகுவதால் “பேயேறி நலிகின்ற பேதையானேன்” என்று உரைக்கின்றார். நிரம்பா ஆசையால் நலிவது பேய் என்பர். இவ்வாற்றல் ஊதியமின்றி ஏதமே எய்துகிறேன் என்பது விளங்கப், “பேதை யானேன்” என்கிறார். “பேதைமை என்பது யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போகவிடல்” என்பது திருக்குறள். வித்தி விளைவிக்கும் ஏராளர், விளைவு கண்டு பெருமகிழ்வு பெறுவது உலகியலில் யாவரும் காணநிற்பது. அதுபோல, உள்ளமாகிய புலத்தில் அன்பு வித்தி அதன் விளைவாகி சிவபோகத்தை நுகர்கின்ற அடியார்களை, “வித்தேறி விளைவேறி மகிழ்கின்றோர் போல், மேலேறி அன்பரெலாம் விளங்குகின்றார்” என்று இயம்புகின்றார். உலகு உடம்புகளோடு ஒன்றாய்க் கலந்து வாழ்க்கைக்கு ஒத்து நிற்பதும், உயிரறிவில் அருளால் மன்னி உண்மையுணர்வு பெறுவிப்பதும் இறைவனுக்கு ஒத்த செயலாதல் விளங்க, “ஒத்தேறி” என்றும், “உயிர்க்குயிராய் நிறைந்த எங்கள் உடையானே” என்றும் உரைக்கின்றார். அன்பரெல்லாம் மேலேறி விளக்கமுற ஒத்தேறி அவர்தம் உயிர்க்குயிராய் நிற்கின்ற நீ, யான் பித்தேறிப் பேயேறி நலிகின்ற பேதையாக விடுவது தகுதிதானா என எண்ணுகின்றேன்; எனக்கு இதற்குரிய காரணத்தை உணரும் திறம் தோன்ற வில்லை; நீயே அருளல் வேண்டும் என்று வேண்டுவராய், “இது தகுமோ உணர்கிலேன்” என்று உரைக்கின்றார்.

     இதனால் பித்தேறிய மனத்தால் பேயேறி நலிந்து பேதையாகிய நானும் மேலேறி விளங்கும் அன்பருள் ஒருவனாதற்கு அருளல் வேண்டுமென்பது கருத்து.

     (74)