75

     75. சிவன்பால் அன்புடைய மேலோர் கூட்டத்தைக் காணும் வடலூர் வள்ளல் தமது நிலையை எண்ணுகின்றார். தம்முடைய மனமும் மொழியும் மெய்யும் உலகியல் வாழ்வுக்குரிய நினைவும் சொல்லும் செயலுமாகிய வினைகளை இடயறாது செய்தவண்ணம் இருப்பதைச் சிந்திக்கின்றார். இவ்வாற்றல் வினைச்சுமை மிகுவது நன்கு புலனாகிறது. வினையில் விளைவுகளாகிய கருமங்கள் அறிவைக் கலக்குகின்றன. தெளிவுக்காலங்களில் உலகியலின் நிலையாமையும் பொய்ம்மையும் தெரிகின்றன. எனினும், விலக்கமாட்டாமல், பொதிமாடு போலப் பொய்ந்நினைவுகளைச் சுமந்து வருந்தும் தமது நிலையை நினைக்கின்றார். தம்மை இவ்விடரினின்றும் நீக்கிக் கோடற் கேற்ற நல்லறிவு நல்கும் ஞானாசிரியன் சிவனே என்று அறிகின்றார். முடியில் பிறைமதி யணிந்து நினைவின்கண் நினைக்குந்தோறும் இன்பம் தரும் கனியே என்றும் ஒளிநல்கும் மணியே என்றும், வினைத்தொடர்பறுக்க வல்ல குருபரம்பரனே என்றும், அன்பர் கூட்டம் வழிபட்டுச் சிவ போகவாழ்வு பெறுவது காண்கின்றார்.  அதனையேன் தாமும் பெறலாகாது என எண்ணுகிறார். அவன் அருளாலன்றி அதனைப் பெறுவதரிது எனத் தெளிந்து, அவ்வருளைத் தனக்கும் அளித்தல் வேண்டுமெனப் பரவுகின்றார். தனக்கும் அருள் பெறும் வாய்ப்பில்லை என்பதாயின் யாரொடு நோவது; யார்க்கெடுத்துரைப்பது என வருந்தி என்சொல்வேன் என் ஏங்குகின்றார். ஏங்கிய நிலையில் இவ்வினிய பாட்டைப் பாடுகின்றார்.

2145.

     மதியணிந்த முடிக்கனியே மணியே எல்லாம்
          வல்லஅருட் குருவேநின் மலர்த்தாள் வாழ்த்திக்
     கதியணிந்தார் அன்பரெலாம் அடியேன் ஒன்றும்
          கண்டறியேன் கருமத்தால் கலங்கி அந்தோ
     பொதியணிந்து திரிந்துழலும் ஏறு போலப்
          பொய்யுலகில் பொய்சுமந்து புலம்பா நின்றேன்
     துதியணிந்தி நின்னருளென் றனக்கு முண்டோ
          இன்றெனிலிப் பாவியேன் சொல்வ தென்னே.

உரை:

     திருமுடியில் பிறைமதி யணிந்து அருட்சாறு நிறைந்த கனியே, ஒளியால் இருளகற்றும் மணியே, எல்லாம் செய்யவல்ல குருபரனே, நின் மலர்போலும் திருவடியைப் பரவி அன்பரெலாம் சிவபோகப் பெருங்கதி பெற்றனர்; உலகியற்கு அடிமையாகிய யான் ஒன்றும் கண்டறியேன்; கருமங்கள் மிகச் செய்து, பொதி சுமந்து திரியும் ஏறுபோலப் பொய்யுலகப் பொய்ப்போகங்களை நினைவிற் கொண்டு நின் அருள் துணையின்றித் தனிமையுற்று வருந்துகின்றேன். எனக்கு நின் திருவருள் கிடைக்குமோ? இல்லையெனில் யான் யாது சொல்வேன் என்பது.

     அன்புடையார்க்குத் தம்மால் அன்பு செய்யப்பட்டார் உரு முற்றும் இன்பப் பொருளாய் மகிழ்விப்பது இயல்பாகலின், சிவனது திருமுடியை, “மதியணிந்த முடிக்கனியே” என்றும், அவனது திருமேனியை மணியே என்றும் பாராட்டுகின்றார்கள். அப்பெருமான் திருவடி மலர்போலும் மென்மையும் பொலிவும் உடையதாதலால் “மலர்ந்தாள்” என்று குறிக்கின்றார். ஞானமொன்றோ யருளும் ஏனை ஆசிரியர் போலின்றித் தம்பால் ஞானம் பெறுவார்க்கு வேண்டுவன யாவும் வேண்டியாங்கு அருளவல்ல குருபரன் என்றற்கு, “எல்லாம் வல்ல அருட்குருவே” என்று போற்றுகின்றார்கள். இங்ஙனம் அவர்கள் இறைவன் மலர்த்தாளை வாழ்த்துவதால், பெறும் பயன் இது என்றற்குக் “கதியணிந்தார்” என்று கட்டுரைக்கின்றார். 'அணிந்தார்' என்பது பெற்றார் என்னும் பொருளது, கதியணிந்தார் என்றதற்குச் சிவப்பேற்றால் பொற்புறுகின்றார் என்று உரைப்பினும் அமையும்; அடியேன்-அடிமைத் தன்மையுடையேன். உலகியலில் அடியராயினோர், உலகியற் போகங்கட்கு அடிமையானோராவர். அதனால் திருமுடியோ திருமேனி மணிநிறமோ திருவடிமலரோ ஒன்றும் காண்டல் இல்லையாதலால், “ஒன்றும் கண்டறியேன்” என்று கூறுகின்றார். 'நானும் அவ்வாறு அன்பு செய்வதின்றி, மனமொழி மெய்களால் வினைகளைப் பெருக்கிப் பொதிமாடுபோல உலகியற் பொய்யுணர்வுகளை உள்ளத்திற் சுமந்து திரிகின்றேன்; அதனால், நின்பாற் பெறலாகும் அருள்துணையும் பெறாது தனியனாய் வருந்துகின்றேன்' என்பார், “பொதியணிந்து திரிந்துழலும் ஏறுபோலப் பொய்யுலகிற் பொய் சுமந்து புலம்பா நின்றேன்” என்று கூறுகின்றார். புலம்புதல் - தனிமையுற்று வருந்துதல். அன்பர் துதிப்பது திருவருளையே யாதலால், “துதியணிந்து நின்னருள்” என்று சிறப்பிக்கின்றார். அன்பால் அருள்நினைந்து துதியாமையின், தனக்கு அவ்வருள் எய்துதற்கு ஏது காணாமைபற்றி, “நின் அருள் என்றனக்கும் உண்டோ” என்கிறார். உண்டோ என்பதிலுள்ள ஒகாரம் இல்லை என எதிர்மறைப்பொருள் தருதலுன, “இன்றெனில்” என்றும், தன்பாற் பாவமே நிறைந்திருப்பது உணர்ந்திருத்தலின், “இப் பாவியேன் சொல்வது என்னே” என்றும் உரைக்கின்றார்.

     இதனால், அன்பர் பெறும்பேறு தாம் பெறுமைக்குரிய காரணம் காட்டி வருந்துவது கருந்து

     (75)