76
76. ’உலகில் மக்கள் பிறப்பது
துன்பவலையிற்பட்டு வருந்துதற்காகவா, என்றொரு கேள்வி வடலூர் அடிகள் உள்ளத்தில் எழுகிறது, எவ்வுயிர்க்கும்
இன்பமே செய்யும் இயல்பினனாகிய இறைவன் இதனைச் செய்யான்; துன்பம் எங்ஙனம் வருகிறது? துன்பத்துக்கு
உறைவிடம் உலகம்; அதன்கண் பிறப்பதால் மக்கள் துன்பம் உறுகின்றனர் என்பதாயின், உலகைப்
படைப்பவன் இன்ப வடிவினனாகிய இறைவனாதலால், துன்பவடிவாக உலகை ஒருகாலும் படைக்கமாட்டான்.
உலகப் படைப்பும் மக்கட்பிறப்பும் துன்ப நுகர்ச்சிக்காக அல்லாவாயின், துன்ப வலை ஏன்? மக்கள்
அதன்கண் அகப்படுவானேன்? இதனால் இறைவனுக்கு ஏதேனும் பயக்குறைவு இருந்தாலன்றோ அது குறித்து இவற்றை
இறைவன் செய்கின்றான் என்னலாம். குறைவிலா நிறைவாகிய பரம்பொருட்கு இவற்றால் பயன் இல்லை
எனின், பயனில்லாத வகையில் உலகைப் படைப்பதும் மக்களைப் பிறப்பிப்பதும் வீண் செயலன்றோ?
எனின், நிறைந்த அறிவனாதலால் இறைவன் பயனில்லாத செயல் ஒன்றையும் ஒருகாலும் செய்யான்;
“கொன்னே செய்யான் தன் நேரில்லான்” என்றன்றோ தமிழாகமம் கூறுகிறது. அதற்குப்பின் துன்பம்
எங்ஙனம் உண்டாகிறது? இன்பமே எல்லா வுயிராயிலும் நாடப்படுவது. மனத்தால் நினைப்பதும் வாயாற்
பேசுவதும் உடம்பால் செய்வன செய்வதும் இன்பம் வேண்டியே யாகும். செய்வினை செம்மையாக
முடியும்போது இன்பம் உண்டாகிறது; வினைக்குரிய கூறுகளில் ஏதேனும் குறைப்படுமாயின் துன்பம் உண்டாகிறது.
அதனால், ஒண்முறை ஒழுங்காய்ச் செய்வதற்கு வேண்டிய காலம், கருவி, இடம் முதலிய எல்லாக்
கூறுகளையும் நன்கு எண்ணிச் செய்கின்றோம். செய்தவிடத்துத் துன்பம் வந்தபோது, நாம் செய்த செயலை
ஆராய்ந்து மீளத் துன்பத்துக்குக் காரணம் இடையில் உண்டான குற்றம் என்று அறிகின்றோம்;
வருந்துகின்றோம். எல்லாவற்றையும் நன்கு எண்ணிக் கண்ணும் கருத்துமாய்ச் செய்யும்போதும் குற்றம்
உண்டாகிறது; “அரிய கற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு” என்று திருக்குறளும்
கூறுகின்றது என்றெல்லாம் சொல்லிக் குற்றத்தைப் போக்கிக் கொள்கிறோம்.
இந்நிலையில், ‘குற்றம்தான்
ஏன் உண்டாகிறது’ என்ற கேள்வி நமக்குள் எழுகிறது? செய்த செயற்குரிய கூறுகளை ஆராய்கின்றோம்.
அவற்றுள் குற்றம் இருப்பின் ‘இதைக் காணாதது நமது குற்றம்’ என்கிறோம். காணாமைக்கு என்ன காரணம்
என நோக்குவோமாயின், முடிவில் அதற்குக் காரணம் மறப்பு என்றோ மறைப்பு என்றோ ஒன்றை உரைக்கின்றோம்;
‘இந்த மறப்பும் மறைப்பும் ஏன் உண்டாகின்றன?’ என மேலும் ஆராய்கின்றோம். யாதோ ஒன்று நம்மை
மறக்கவும் நம் அறிவை மறைக்கவும் செய்கிறது என்று தெளிகின்றோம். ஒளியை மறைக்கும்
இருள்போல அது நம் அறிவை மறைக்கிறது எனத் தெளிகின்றோம்.
அற்றாயின் மறைக்கிற
அவ்வொன்று எங்கே இருக்கிறது? உலகிலா? உலகப் பொருள் உண்டு வளரும் உடம்பிலா? உடம்புக்குள்
இருக்கும் உயிரிலா? குற்றம் எங்கே என்று ஆராய்ந்தபோது, முடிவில் அவ்வாராய்ச்சி ‘நம் உடம்பிலோ,
உலகப்பொருளிலோ இல்லை; நம் அறிவே இடம்’ எனக் காட்டிற்றன்றோ? அதனால், நம் அறிவை மறப்பித்தும்
மறைத்தும் குற்றப்படுத்தும் அவ்வொன்று நம் உயிர் அறிவிலே இருக்கிறது என்று காணலாம். நமது அறிவோ
இயற்கையில் தெளிவும் விளக்கமும் உடையது. மறப்போ மறைப்போ இல்லாதபோது தெளிவும் விளக்கமும்
கொண்டு செய்வதைச் செவ்வையாகச் செய்து இன்புறுகின்றோமன்றோ? அங்ஙனமிருக்க, அதன்கண், மறப்பும்
மறைப்பும் பயக்கும் அந்த ஒன்று எவ்வாறிருக்க முடியும்? எனின், ஒளியை மறைக்கும் இருள் எங்கே
இருக்கிறது? அஃது ஒளிக்குள்ளேயே இருப்பது போல, மறப்பு மறைப்புக்களால் அறியாமையாகிய குற்றத்தை
உண்டுபண்ணும் அந்த ஒன்றும் நம் உயிரறிவிலேயே இருக்கிறது என்று உணர்தல் வேண்டும். மாறுபட்ட
இரண்டு ஓரிடத்தில் இராவே எனின், மாறபட்ட இரண்டு தனித்தனியாயின் ஓரிடத்தில் இருக்கமுடியாது;
ஒன்றினுள் ஒன்று ஒடுங்குமாயின், ஒரிடத்தில் இருத்தற்குத் தடையில்லை. அதுபற்றியன்றோ
“ஒளிக்கும் இருட்கும் ஒன்றேயிடம் ஒன்று மேலிடில் ஒன்று ஒளிக்கும்” என்று உமாபதி சிவனார் கூறுகின்றார்.
உலகியல் ஒளியை மறைப்பதை ‘பூத இருள்’ என்று கூறுகின்றோம். உயிரறிவை மறைக்கும் இருளை
‘மலவிருள்’ என்று அறிவு நூல் கூறுகிறது. இதனைத் திருக்குறள் “இருள்” என்றே இயம்புகிறது.
இந்த மலவிருள்
உயிரறிவனுள் இருக்கிறது எனின், உலகிலோ நம் உடம்பிலோ அஃது இல்லை என்பது தெளிவாகிறது.
மேலும், இவ்வுடம்பும் உலகப்பொருள்களும், நம் உயிரறிவில் ஒடுங்கியுறையும் மலவிருளை நாம்
உணருமாறு காட்டித் திருத்த உதவும் உயர் கருவிகளாவதும் விளங்குகிறது. இதனால், மக்கட்பிறப்பும்
உலகப்படைப்பும் மலவிருள் நீங்கிக் குற்றத்தைப் போக்கித் துன்பத்தைத் துடைத்து இன்பம் பெறுவித்தற்
கமைந்தவை என்ற உண்மை விளங்குவது காணலாம்.
இந்நிலையில் மலவிருளிற்
கிடக்கும் உயிர்த் திறத்தை எண்ணுகின்றார் வடலூர் வள்ளல். அறிவுக்கண் மலவிருளாற் புதையுண்டு
பன்னெடுங்காலம் இருந்து அலமரும் உயிரை ஒரு கிழக் குருடனாகக் காண்கின்றார். அவன் கையிலுள்ள
கோல்போல் உயிர்க்கு இவ்வுடம்பு அமைந்துள்ளது; அக்கோல் நன்னெறிப்படாது வேண்டா இடங்களில்
நின்று நீங்குவது போலத் தமது உயிரும் தடுமாறித் துன்புற்று வீழ்வது பார்க்கின்றார்.
2146. என்னரசே என்னுயிரே என்னை ஈன்ற
என்தாயே என்குருவே எளியேன் இங்கே
தன்னரசே செலுத்திஎங்கும் உழலா நின்ற
சஞ்சலநெஞ் சகத்தாலே தயங்கி அந்தோ
மின்னரசே பெண்ணமுதே என்று மாதர்
வெய்யசிறு நீர்க்குழிக்கண் விழவே எண்ணி
கொன்னரைசேர் கிழக்குருடன் கோல்போல் வீணே
குப்புறுகின் றேன்மயலில் கொடிய னேனே.
உரை: அரசே, உயிரே, ஈன்ற தாயே, குருவே, கொடியனாகிய யான், தன்னரசு செலுத்தும் நெஞ்சால் தயங்கி, மாதர் சிறுநீர்க்குழிக்கண் விழவே எண்ணிக் கிழக்குருடன் கோல்போல் வீணே மயலில் குப்புறுகின்றேன். எ.று.
மக்கள் செயல்வகை நோக்கி முறை செய்வதும் காப்பாற்றுவதும் செய்யும் உலகியற் அரசுபோல, உயிர்களின் வினைவகைபற்றி முறையும் அருளும் புரிவது பற்றி, இறைவனை 'என் அரசே' என்று கூறுகின்றார். அறிவு, விருப்பு, செயல், என்று மூவகையில் உடல் கருவி உலகுகளின் பயன் நுகர்ந்து இன்பமும் தெளிவும் பெறுவது உயிர் இயல்பு. அவ்வுயிரை அந்நெறிக்கண் இயக்குவதுபற்றிப் பரம்பொருளை “என் உயிரே” என்று பரவுகின்றார். ஈன்று புறத்தாரும் தாய்போல், உலகில் வாழ்வு தந்து உய்விக்கும் முறைமை தோன்ற, “ஈன்ற தாயே” என்று கூறுகின்றார். அவ்வப்போது அறிவொளி நல்குமாறு விளங்க, “என் குருவே” என்று போற்றுகின்றார். இவ்வகையில் இறைவன் உதவியின்றி வாழும் திறம் இன்மையால் தன்னை “எளியேன்” என்று குறிக்கின்றார். நெஞ்சு என்பது உடம்புக்கு மூலமாய மாயை என்னும் பொருளால் இயன்று, உயிர்க்கும் உடம்புக்கும் இடையே இரண்டிற்கும் கருவியாகவும் இயக்கு முதலாகவும் இருக்கும் நுண்ணிய அகக் கருவி. இளமைக்கண் உடம்பின்பக்கல் நின்று அதன் வளர்ச்சிக்குரிய வகையில் உயிரைத் தன்னடிப்படுத்தி இயக்குவதும், முதுமைக்கண் உயிர்வழி நின்று உடம்பைத் தன்னடிப்படுத்தி இயக்குவதும் நெஞ்சின் செயல் வகையாகும். உயிர் அறிவு உரமும் பெருமையும் பெறுமாயின் அதன் வழியில் நிற்பதும், அறிவு மென்மையும் சிறுமையும் உடையாதாயின், தான் நிமிந்துத் அறிவைத் தன்வழிச் செலுத்தியும் துன்புறுவன். யான் எளியனாதலால் நெஞ்சு தன்னரசு புரிகிறது என்று கூறுகின்றார். அமைச்சர் அறிஞர் முதலியோர் உரைகளைக் கொள்ளாது, தன் மனம் போன போக்கில் ஆட்சி புரியும் அரசனது அரசு “தன்னரசு” எனப்படும். அதனால் நாட்டில் இயக்கமும் மயக்கமும் கலக்கமும் தலைவிரித்தாடும். அதுபோல, நெஞ்சினுடைய கலங்கிய தனிப்போக்கால் மக்கள் மகளிர் கூட்டத்தில் வீழ்ந்து துன்புறுவதை இழித்துரைக்கின்றார். அறிவு மலவிருளால் மறைப்புண்டு பன்னெடுங்காலம் கழிதலின் “கிழக் குருடன் கோல்போல்” என்றும், கிழவனாதலால் அவன் கைக்கோலை நிலைபெறப் பிடிக்காமல் அசைந்தவண்ணம் இருக்கும்; குருடனாதலால் கோலை ஊன்றுமிடம் அறியாது ஊன்றிக் குப்புற வீழ்கின்றான். உயிர் அறிவிழந்து குருடுபட்டு ஊன்றுகோலாகிய உடம்பையும் அசைவித்து உய்வகை அறியாமல் தீமைக்கண் சென்று வீழ்கிறது என்று கூறுகிறார். மயல்விளைக்கும் மலவிருளால் மறப்பும் மறைப்பும் மிகுந்திருக்கும் சூழ்நிலை, தெளிவும் ஒளியும் இல்லாமையால் நெஞ்சின் வயப்பட்டு அறிவிழந்து நற்கதி பெறும் வாய்ப்பின்றித் துன்புறும் சூழ்நிலை ஆகியவற்றை விளக்குவது இத் திருப்பாட்டினை பயன் என அறிக. (76)
|