77

      77. அறிவொளி இழந்து மனம் போனவழிச் சென்று துன்புறும் செயலையே பார்க்குமிடங்கும் மக்களிடையே நிகழக்காண்கின்ற வடலூர் வள்ளல், அத் துன்பநிலையை இறைவன்பால் முறையிட்டு உய்தி காண்பதே இனிச் செய்தற்குரியது எனத் துணிகின்றார். மக்கள் பலரும் ஒய்வு ஒழிவின்றி உழைக்கின்றனர். உழைப்பால் வரும் ஊதியத்தைக் கொண்டு உண்கின்றனர்; உடுக்கின்றனர்; முடிவில் பெண்ணின்ப விழைவு பெருகித் திரிகின்றனர். நாடாளும் வேந்தர்முதல் நாய்போல் தெருவில் திரியும் நாடோடிகள் ஈறாக அனைவரும் இத்துறையில் எளியாராய் இருப்பது தெரிகிறது. எத்துணை அறிவுரை கூறி விலக்கினும், கொண்ட மனைவியிருக்கவும் கண்ட கண்ட பரத்தையர் பின் சென்று உழலும் கீழ்மை நிலையே எங்கும் காணப்படுகிறது. உரிய காலமொழிய மக்கள்போல் எக்காலத்தும் பெண்விழைவுற்று அலையும் செயல் விலங்குகளிடத்தும் காணப்படுவதில்லை. இத்தகைய குற்றம் ஒருத்தற் கமைவதே யன்றி பொறுத்தற் கமைவதன்று. பொறுப்பது உலகவர்க்குப் புதுமையேயாகும் என்று வள்ளலார் புலம்புகின்றார்.

2147.

     அல்விலங்கு செழுஞ்சுடராய் அடியார் உள்ளத்
          தமர்ந்தருளும் சிவகுருவே அடியேன் இங்கே
     இல்விலங்கு மடந்தையென்றே எந்தாய் அந்த
          இருப்புவிலங் கினைஒடித்தும் என்னே பின்னும்
     மல்விலங்கு பரத்தையர்தம் ஆசை என்னும்
          வல்விலங்கு பூண்டந்தோ மயங்கி நின்றேன்
     புல்விலங்கும் இதுசெய்யா ஓகோ இந்தப்
          புலைநாயேன் பிழைபொறுக்கில் புதிதே அன்றோ.

உரை:

     அடியார் உள்ளத் தமர்ந்தருளும் சிவகுருவே, எந்தாய், இல்மடந்தை விலங்கு என்று கருதி ஒழித்தும், பின்னும் பரத்தையர் ஆசையென்னும் வல்விலங்கு பூண்டு மயங்கி நின்றேன்; இதனை ஏனைப் புல்லிய விலங்குகளும் செய்யா; செய்து திரியும் நாய்போல் என் பிழை பொறுத்தற் குரியதன்று; பொறுப்பாயேல், உலகம் புதுமையென்று தூற்றும். எ.று

     அடியார், இறைவன் திருவடியல்லது பிறிது யாதும் நினையாத மனமுடைய நன்மக்கள். அதனால் அவர் பெறும் பயன் பெரிது. அவர்களின் திருவுள்ளத்தில் சிவபெருமான் எழுந்தருளி, மலவிருள் பரந்து அறிவை மறப்பு மறைப்புக்களால் மயக்கும்போது, அருள்ஒளி வழங்கி அவ்விருளைப் போக்கி நன்னெறி காட்டி உய்தி பெறுவிக்கின்றான். “இருளாய உள்ளத்தின் இருளைப் போக்கி, இடர்பாவம் கெடுத்து ஏழையேனை உய்யத், தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போல்” சிவபோக வாழ்வு பெறச் செய்கின்றான் எனத் திருநாவுக்கரசர் உரைக்கின்றார். அதனால் “அல் விலங்கு செழுஞ்சுடராய் அடியார் உள்ளத் தமர்ந்தருளும் சிவகுருவே” என்று வள்ளலார் உரைக்கின்றார். அல்விலங்கு சுடர்-இருளைப் போக்கும் சுடர் ஒளி. உலகியல் ஒலிகள் இருள் கலந்தவையாகலின், அவற்றின் வேறுபடுத்தச் சிவவொளியைச் “செழுஞ்சுடர்” என்று உரைக்கின்றார். “அகலிரு விசும்பில் பாயிருள் பருகிப் பகல் கான்று எழுதரும் பல்கதிர்ப் பருதி” என்று சான்றோர் கூறுவது காண்க. 'குரு' என்னும் சொல் இருளை நீக்குவது என்று பொருள் படுவது. உயிரறிவுக்குள் இருந்து மறைக்கும் மலவிருளைப் போக்குவதுபற்றிச் “சிவகுரு” என்று புகழ்கின்றார். திருவடியையே நினைபவன் என்றற்குத் தன்னை அடியேன் என்றும், அந்நினைவால் மண்ந்துகொண்ட மனைவியை விலங்கென்று நீக்கிய செய்தியை, 'இவ்விலங்கு மடந்தை என்றே எந்தாய்இருப்பு விலங்கினை ஒடித்தேன்' என்று கூறுகின்றார். இல் மடந்தையாகிய விலங்கு இரும்புபோலும் வன்மையுடையதென விளக்குதற்கு 'அந்த இரும்பு விலங்கு' என்று இயம்புகின்றார். இது வரலாற்றுக் குறிப்பு. ஒழித்தற்குத் துணைபுரிந்த உணர்வு, பரத்தையர் ஆசையென்னும் வல்விலங்கு பூண்டதற்கு வன்மையிழந்து மெலிந்தது என்பாராய் “மல்விலங்கு பரத்தையர் தம் ஆசையென்னும் வல்விலங்கு பூண்டு” என மொழிகின்றார். தொடர்பு கொண்டாருடன் மானமின்றிப் பலர் அறியத் தெருவில் நின்று போர்தொடுக்கும் இயல்பினராதலின், “மல்விலங்கு பரத்தையர்” என்று கூறுகின்றார். “ஆவதாக இனி நான் உண்டோ, வருகதில் அம்ம எம் சேரி சேர, அரிவேய் உண்கண் அவன் பெண்டிர் காணத், தாரும் தானையும் பற்றி, ஆரியர் பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு போலத் தோள்கந்தாக்க் கூந்தலிற் பிணித்து அவன் மார்பு கடிகொள்ளேனாயின், ஆர்வுற்றிரந்தோர்க்கு ஈயாது ஈட்டியான் பொருள்போல, பரந்து வெளிப்படாதாகி வருந்துக தில்ல யாய் ஒம்பிய நலனே” (அகம்.276) எனப் பரத்தை பூசலிடுமாறு காண்க. இவ்வாறு பரத்தையர் தொடர்பு துன்பம் பயத்தலின், “வல்விலங்கு” என்று பழிக்கின்றார். இத் தொடர்புண்டாதற்கு முன்னும் பின்னும் காமவேட்கையால் அறிவு மயங்கி அறைபோவதால் “மயங்கி நின்றேன்” என்று கூறுகிறார். மயக்கத்தால் நீக்கமாட்டாது அதன் வழியே நிற்குமாறு விளங்க 'மயங்கினேன்' என்னாமல் “மயங்கி நின்றேன்” என்று உரைக்கின்றார்.விலங்கு பூண்ட கால் நடக்க மாட்டாதன்றோ? இனம் பெருக்கும் உணர்ச்சி யெழும் காலமொழியப் பிற காலங்களில் மிகத்தாழ்ந்த விலங்கும் காமமயக்க முறுவதில்லை யாதலால் “புல் விலங்கும் இது செய்யா” என்று எடுத்து மொழிகின்றார். புல்விலங்கு - மிகவும் புல்லிய விலங்கினம். தான் மயங்கி நிற்பதுபற்றி வெறுப்பு மீதூர்ந்து 'புலைநாயேன்' என்று பழிக்கின்றார். இக்குற்றம் பொறுத்தற்காகாதது; பொறுத்தல் குற்றமாம் என்று உலகம் தூற்றும் என்பார், “பிழைபொறுக்கில் புதிதே யன்றோ” என்று புகல்கின்றார். இறைவன்மேல் குற்றமேற்றல் கூடாதாதலால், பொறுத்தல் புதுமையாம் என்றற்குப் புதிதே யன்றோ என்று உரைக்கின்றார்.

     இதனால் சிவகுருவின் திருவடி ஞானத்தால் இல்மடந்தையின் தொடர்பு இருப்புவிலங்காம் எனக் கருதி நீங்கிய மக்கள், பரத்தையர் ஆசையென்னும் வல்விலங்கு பூண்டு மயங்கி நிற்பது பிழை; அதுபற்றி அவர்களைப் பொறுப்பது நன்றன்றெனக் கூறித் தெளிவுற்ற மக்கள், திருவடித் தொடர்பே பெற விரும்புவது பயன் என்று உணர்தல் வேண்டும்.

     (77)