78
78. நல்லது செய்து இன்புறும் மனம் தவறு செய்து துன்புறும் போது
வருந்துகிறது; துன்பம் கண்டு நன்றே செய்தல் வேண்டுமெனத் துணிவு கொள்ளினும் அது, சிறிது போதில்
மாறிப் பிழை செய்து அல்லற்குள்ளாகிறது. இவற்றை நினைந்தருளுகின்றார் நம் வடலூர் அடிகள்; தெளிவிழந்து
அறிவுமறைப்புண்டற்குக் காரணம் மலம் என்பதை உணர்கின்றார். பாசி படர்ந்த நீர்க் குட்டத்தில்
தொட்டவழி நீங்கி விட்டவழிப் பரந்து மூடும் பாசிபோலத் திருவருள் ஒளிதோன்ற நீங்கிப்
பின் மறைக்கும் மலத்தால் மறைப்புண்டு மயங்குகிறது. உயிரறிவு இவ்வகையில் நீங்காத வன்மை மிகுந்து
அறிவை மறைத்து நேரிய நெறியை விடுத்துக் கோடிய வழியில் செலுத்தும் மலம் நன்கு தெரிகிறது. அந்நிலையில்
இறைவன் திருவடியையே பற்றாகவுடைய அடியவர் கொடுநெறி சென்று துயருறாவண்ணம் அப்பெருமான் அறிவினுள்
அருளால், மன்னியோ, முன்னிலையில் மக்கள் வடிவிலோ, வேறு வகையிலோ தோன்றி நன்னெறி காட்டுகின்றார்.
அந்நெறியின் நலம் காணும் அறிவு, அங்ஙனமே செல்லும்போது மாயாகாரிய நுண்கருவியாகிய மனம் தன்
இனமாகிய உலகியல் இன்பம் நாடி அதற்குரிய முயற்சிகளில் உயிரை ஈர்த்துக்கொள்கிறது. உயிரினம்
அருநெறியே செல்லும் செலவுமாறி உலகப் பொருள்நெறியிற் புகுந்து உழலுகிறது. ஆங்கு எய்தும் இடரும்
தளர்ச்சியும், மனத்துக்கேயன்றி அதன்வழி இயங்கும் உடம்புக்கும் முறையே உள்ளத்துக்கும் உண்டாகின்றன.
கருதிய இன்பம் பெறமாட்டாமையால் ஆசையால் மக்கள் பேய்போல அலைகின்றனர்; வருத்தம மேலிடுகின்றனர்.
2148. வன்கொடுமை மலநீக்கி அடியார் தம்மை
வாழ்விக்குங் குரவேநின் மலர்த்தாள் எண்ண
முன்கொடுசென் றிடுமடியேன் தன்னை இந்த
மூடமனம் இவ்வுலக முயற்சி நாடிப்
பின்கொடுசென் றலைத்திழுக்கு தந்தோ நாயேன்
பேய்பிடித்த பித்தனைப்போல் பிதற்று நின்றேன்
என்கொடுமை என்பாவம் எந்தாய் எந்தாய்
என்னுரைப்பேன் எங்குறுவேன் என்செய் வேனே.
உரை: மலம் நீக்கி வாழ்விக்கும் குருவே, மலர்த்தாள் எண்ணம் கொண்டு முன்செல்லும் என்னை, என் மனம் உலகமுயற்சி நாடிப் பின்கொண்டு இழுக்கிறது. நான் பேய்பிடித்த பித்தனைப்போல் பிதற்றுகின்றேன். காரணம், என் கொடுமை, என் பாவம்! என் சொல்வேன், எங்குறுவேன்? எ.று.
'மலம்' என்பது மலவிருள் ஒளிக்கும் இருள்போல உயிரறிவனுள் இருந்து அறியாமை விளைவிப்பது பற்றி மலம் எனப்படுகிறது, செந்நெறிக்கண் செல்லும் இயல்பிற்றாகிய அறிவை மறைத்துத் தவறாய நெறிக்கண் செல்லுமாறு கோடுதலால் கொடுமை மலம் என்று குறிக்கின்றார். கொடுமை நேர்மைக்கு மாறான தன்மை. கோடுதல் - வளைதல். மலத்தின் கொடுமை நீங்காத வன்மையுடைத்தாதலால், 'வன்கொடுமை' என்று சிறப்பிக்கின்றார். திருவடியே நினையும் செம்மையுடையவர் அடியார். அவரது அறிவை மலம் மறைத்துக் கொடுமை புரியுங்கால் அவர் சிந்தையுள் உறையும் சிவபரம்பொருள் மறைப்பைக் கெடுத்து ஒளி நல்கி இன்பவாழ்வு பெறச் செய்வதுபற்றி, “வன்கொடுமை மலம் நீக்கி அடியார் தம்மை வாழ்விக்கும் குருவே” என்று குறிக்கின்றார். தன்னை அடியேன் என்பதனால், “மலர்த்தாள் எண்ணம் முன்கொண்டு சென்றிடும் அடியேன்” என அதற்குக் காரணத்தைப் புலப்படுத்துகின்றார். திருவடியே சிந்திப்பது “திருப்பெருகு சிவஞானம்” என்பர் சேக்கிழார் பெருமான். எனவே, அப் பெருமக்கள் உள்ளம் சிவஞான வொளிகொண்டு திகழ்தலால் இவ்வாறு மொழிகின்றார். செல்லுவதாவது, உலகில் வாழ்வது. வாழுங்கால், மனமானது மலவிருளால் மருண்டு உயிரை உலக வாழ்வில் ஈர்ப்பதனால், “அடியேன் தன்னை இந்த மூடமனம் இவ்வுலக முயற்சி நாடிப் பின்கொடு சென்று அலைத்து இழுக்குது” என்று கூறுகின்றார். பசித்துண்டு நீங்கினவன் பின்னும் பசிவேட்கையுற்று உழல்வதுபோல, ஒருகால் மறைப்புண்டு தெளிவற்ற உயிரறிவு பின்னும் மறைப்புண்டு வருந்தும் என அறிக. இதனால் அறிவு அயர்வுற்றுப் பேய்கொண்ட பித்தன் போல, ஒருகால் பிதற்றுகிறேன் என்று பேசுகின்றார். இவ்வாறு துன்பறுதற்குக் காரணம் யாதாகலாம் என நினைக்கும் அடிகளார், செந்நெறிக்கண்ணே நிலைபெற நில்லாது மனத்தின்பின் சென்றமையே காரணம் எனத் தெளிந்தமை விளங்க, “என் கொடுமை” என்றும், அதனு விளைவு பாவமாதலால், “என் பாவம்” என்றும் உரைக்கின்றார். உரைத்தற்கும் செய்தற்கும் வேறு ஒன்றும் இல்லாமையால், ”என்னுரைப்பேன் எங்குறுவேன் என் செய்வேன்” என்று கையறவு படுகின்றார். போகிறது போகுது என்றும், வருகிறது வருகுது என்றும் வழக்கில் சுருங்கி இயலுவதுபோல, இழுக்கிறது என்பது இழுக்குது என வந்தது. வழக்கும் இலக்கணம் காண்டற்கு இலக்கியமாகலின், ஈண்டுக் கொள்ளப்பட்டது. இதனால் மலமறைப்பை நீக்கி ஞானம் அருளும் அருளாளனாவது பற்றி, ஞானமேயன்றி உலக முயற்சிக்கண் ஈர்த்துச் செல்லும் மனத்தை நிறுத்திச் செந்நெறிக்கண்ணே செலுத்துதற்கு வேண்டும் ஆற்றலையும் உதவ வேண்டுமென வடலூர் வள்ளல் இறைவனைப் பரவுவது இப்பாட்டின் பயன் என உணர்க. (78)
|