79
79. அன்பரையும் தம்மையும் நோக்கிய வடலூர் அடிகளார், அன்பர்கள் மெய்யுணர்வுபெற்று அருள்நெறியைத்
தலைப்பட்டவிடத்து, பொய்யுலகின் பொய்மைகள் போந்து தாக்கிய வழியும் அவற்றிற்கு இரையாகாதவாறு
அரது உணர்வைத் தெருட்டி, மெய்ந்நெறிபற்றி உய்யும்வகையில் அருள்புரிவதையும், அவர்கள் அந்நெறிக்கண்
நிலை பெறுவதையும் காண்கின்றார். அப்பொழுது தமது நிலையை நோக்குகின்றார். உலகியலில் பற்று
மிகுவிக்கும் மகளிர் விளைவிக்கும் மயக்கத்தில் வீழ்ந்து வருந்தும் அவலநிலை தெரிகிறது. நெஞ்சில்
மயக்கத்துக்குரிய நினைவுகள் எழுகின்றனவே யொழிய இறைவன் திருவடித் தாமரையை நினைக்கும் திறம்
இல்லை பரமன் திருவடி நினைப்பார் கைதலைமேற் குவிதலும் கண்களில் அன்பு நீர் பெருகிச்
சொரிவதும் செய்கின்றனர். அதுபோல் தாமும் இறைவன் திருவடியை நெஞ்சில் நினைத்து கைதலைவைத்துக்
கண்ணீர் பெருக்கி உள்ளத்தால் கலந்து ஒன்றாமையை உணர்கின்றார். உலக மயக்கிடைக் கிடந்து
தமது தெளியமாட்டாமைக் கிரங்கி நீயேனும் என்னுட் கலந்து நின் திருவடியை நினைக்கவும் வாயால்
வாழ்த்தவும் மெய்யால் வணங்கவும் செய்தல் வேண்டும், அதனையேனும் அருள்கூர்ந்து நீ செய்வாயோ?
அன்றிச் செய்யாதொழிவாயோ? நின் திருவுள்ளக்குறிப்பை யான் அறிகிலேன்; என்னால் ஒன்றும் செய்ய
இயலாது எனச் சிவன்பால் முறையிடுகின்றார்.
2149. உய்குவித்து மெய்யடியார் தம்மை எல்லாம்
உண்மைநிலை பெறஅருளும் உடையாய் இங்கே
மைகுவித்த நெடுங்கண்ணார் மயக்கில் ஆழ்ந்து
வருந்துகின்றேன் அல்லால்உன் மலர்த்தாள் எண்ணிக்
கைகுவித்துக் கண்களில்நீர் பொழிந்து நானோர்
கணமேனும் கருதிநினைக் கலந்த துண்டோ
செய்குவித்துக் கொள்ளுதியோ கொள்கி லாயோ
திருவுனத்தை அறியேன்என் செய்கு வேனே.
உரை: உடையவனே, மெய்யடியார்களை உலகியல் வாசனை தாக்குமிடத்து அதற்கு இரையாகி வழுவாவாறு அருள்வலி அளித்து உண்மை நெறியில் நிலைபெறச் செய்து உய்விக்கும் பெருமானாக நீ விளங்குகின்றாய்; யானோ பொய்யடியனாய் நெடுங்கண்ணாராகிய மகளிர் செய்யும் மயக்கில் வீழ்ந்து வருந்துகின்றேன்; அல்லாமலும், உன் மலர் போலும் திருவடிகளை மனத்தால் எண்ணி அதனோடு கலந்து ஒன்றி நினைந்ததில்லை; மெய்ந்நெறி நிற்கும் மேலோர் அறிவிற்கலந்து ஒளி நெறிகாட்டி உய்விப்பதுபோல என் அறிவிற் கலந்து யானும் உய்தி பெற அருளுவாயோ? அருளா தொழிகுவையோ? நின் திருவுள்ளம் அறியேன்; அதனால் யாதும் செய்ய வல்லேனல்லேன். எ.று.
மெய்நெறி தலைப்பட்டார்க்குத் தெளிவும் ஆற்றலும் தந்து உய்விப்பதில் தான் திருவருளின் துணை சிறப்புறுகின்றது; அதனால்தான் “மெய்யடியார் தம்மையெல்லாம் உய்விக்கின்றார்” என்று எடுத்துரைக்கின்றார். உய்விக்கப்பெற்ற மெய்யடியார் உண்மைநெறியில் நிலைபேறு கொள்வது உடனிகழ்ச்சியாதலின், “உண்மை நிலைபெற அருளும் உடையாய்” என்று சிவன்பால் உரைக்கின்றார். விழித்து மயக்கும் மகளிர் கண்கட்கு ஊட்டப்படும் மை ஆற்றல் மிகுவித்தலால் “மை குவித்த கண்ணார்” என்றும், நெடுங் கண்களாயின் காணப்பட்டாரைத் தம் மயக்கத்தில் எளிதில் ஈர்த்து வீழ்த்தல் தோன்ற “நெடுங்கண்ணார்” என்றும் விளக்குகின்றார். ஒளவையாரும் “மை விழியார் மனையகல்” என்பது காண்க. வேட்கைத் தீயால் வெதுப்புற்றி நோய்எய்தி வருந்துவதுப்பற்றி, “மயக்கம் ஆழ்ந்து வருந்துகின்றோம்”, என உரைக்கின்றார். மயக்கத்தில் ஆழ்ந்துவிடுவது வருத்தத்துக்கு ஏதுவென உணர்க. தையலார் மையலில் ஆழப்புதையுண்டபோதும் ஞானவான்கள் இடையறாப் பேரன்பால் சிவபரம் பொருளின் செம்மலர் நோன்தாளை நினைந்து கைதலை குவியக் கண்ணீர் சொரிய அதன்பால் ஒன்றி யின்புருவதுண்டு; அதுபோல் தாம் இறைவன் திருவருளை எண்ணி அதனோடு கலந்து ஒன்றியதில்லை என்பார், “நான் ஒரு கணமேனும் கருதிநினைக் கலந்ததுண்டோ” என்று கேட்கின்றார். “அவனருளாலே அவன்தாள் வணங்கி” என்றும், “காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே” என்றும், “அவனருளே கண்ணாகக் காணினல்லால்” என்றும் சான்றோர் கூறுதற்கேற்ப, என்னையும் நின்தாள் நினைப்பித்து, நின் புகழ்பாடுவித்து, நின்பணியே செய்வித்துக் கொள்ளல்வேண்டும் என்று கேட்பாராய், “செய்குவித்துக் கொள்வாயோ” என்று வேண்டுகின்றார். கொள்ளாயாயின் அது நின்திருவுள்ளக் கருத்தாமேயன்றி யான் ஒன்றும் செய்தற்கில்லேன் என்பார், “கொள்கிலாயோ திருவுளத்தை அறியேன் என் செய்குவேன்” என்று மொழிகின்றார். இதனால். தன்னையும் மெய்யடியார் போல் கொண்டு உய்குவத்தில் வேண்டும் என்பது பயன். (79)
|