80

      80. உடம்புக்கு உலகும் தோன்றுதற்கு முதற்காரணமான மாயையே மனத்துக்கும் முதற்காரணமாதலின், அது உலகுடம்புகளின் பக்கலே நின்று அவற்றின் வழியில் உயிரைச் செலுத்தும் இயல்பு அம்மனத்தின் வழிச்செல்வதால் உயிர் பல்வகைத் துன்பங்கட்கும் இரையாகி வருந்துகிறது. உலகுடம்புகளின் இயற்கையான மருட்சி மனத்தின்கண்ணும் இருப்பதால், அதனோடு கலக்கும் உயிரறிவு இருளுற்று மெய்ந்நெறி காணாது கலக்க மெய்துகிறது. மேலும் அவ்வறிவு மலவிருட் கலப்பால் தன்னியல்பில் ஒளியின்றி யுழகல்கிறது. உயிரின் இந்நிலையைக் கோல் இழந்த குருட்டு ஊமன் நிலையில் வைத்து நோக்குகின்றார். குருடாதலால் தானே நெறியறிவும் திறம் இல்லை; ஊமனாதலால் பிறர்க்குத் தெரிவிக்கும் வாய்ப்பும் இல்லை. கைக்குறியால் காட்டலாமெனில் இருள்பரந்திருத்தலின் பிறர் கண்டறிதற்கும் இடமில்லை. அவனுக்கு வழிகாட்டும் துணையாகிய கைக்கோலையும் இழந்துவிட்டான். இருள் மலத்தால் மறைப்புண்டமையின் உயிர் குருடனுக்கு ஒப்பு; கோல்போல் உதவுவது திருவருள். மனமும் மருட்சிவயப்பட்டமையின் மனத்தின்வழி இயங்கும் உடம்பும் மதிமயக்கத்தால் கருத்தைத் தெரிவிக்கும் தெளிவுடையதாக இல்லை இக்குறைபாடுகளால் ஒரிடத்தில் நிற்றலுமின்றி நெறிபற்றிச் செல்லுதலுமின்றி அலைவது பயனாகிறது. இவ்வாறு வருந்தவிடாது ஏற்றருள வேண்டுமென இறைவன்பால் முறையிடுகின்றார்.

2150.

     அருள்வெளியில் ஆனந்த வடிவி னால்நின்
          றாடுகின்ற பெருவாழ்வே அரசே இந்த
     மருள்வலையில் அகப்பட்ட மனத்தால் அந்தோ
          மதிகலங்கி மெய்ந்நிலைக்கோர் வழிகா ணாதே
     இருள்நெறியில் கோலிழந்த குருட்டூ மன்போல்
          எண்ணாதெல் லாம்எண்ணி ஏங்கி ஏங்கி
     உருள்சகடக் கால்போலுஞ் சுழலா நின்றேன்
          உய்யும்வகை அறியேனிவ் வொதிய னேனே.

உரை:

     அருள் வெளியில் ஆனந்த வடிவுற்று ஆடல்புரிகின்ற பெருமானே, அரசே, மருள்பட்ட மனத்தால் மதிகலங்கி மெய்ந்நிலை பெறுதற்கு வழிகாணாமல், இருளில் கோல்இழந்த குருட்டு ஊமன் போல எண்ணாதன வெண்ணி ஏங்கிச் சகடக்கால் போல் சுழல்கின்றேன்; ஒதிமரம் போல் உய்வகையறியாது உழல்கின்றேன்; என்னை உய்வித்தல் வேண்டும். எ.று.

     உலகு உடல் கருவி முதலிய அனைத்தும் ஒடுங்க நிற்கும் பரவெளியை 'அருள்வெளி' என்பர். இருள் கலப்பில்லாத தூய இன்பவெளியாதலால் அதன்கண், இன்பவடிவினனான பரசிவன் உலகுடம்புகள் மீளத் தோன்றி உயிர்கள் கலந்து மலவிருள் நீக்கி அருள்வெளியில் இன்பப் பெருவாழ்வு பெறுதலை விரும்பி ஆடுகின்றான் என்பது உணர்த்தற்கு, “அருள் வெளியில் ஆனந்த வடிவினால் நின்றாடுகின்ற பெருவாழ்வே” என்று கூறுகின்றார். உடல் கருவிகளோடு கூடி உலகில் வாழ்கின்ற உயிர்கள் அப்பெருவாழ்வுக்கு இலக்காகும் நெறிபெறாதவாறு, மனமாகிய கருவி மருள் வலைப்பட்டுத் துணையாகா வகையில் கலங்குகிறது; மெய்நிலையாகிய அருள் வாழ்வுக்கு நெறிகாணும் திறம் இழந்தேன் என்பாராய் “மருள் வலையில் அகப்பட்ட மனத்தால் மதி கலங்கி மெய்ந்நிலைக்கு வழிகாணேன் ஆயினேன்” என் மொழிகின்றர். மனத்துணையில்லாத வாழ்வு இருள்படுகிறது; உள்ளிருந்து துணைபுரியும் திருவருளாகிய ஒளியும் மதி கலங்குவதால் நீங்கி விடுகிறது. இயற்கை இருள் மறைப்பால் குருடனானேன்; மெய்ந்நிலை வேட்கை எடுத்துரைப்போமெனின், வாயும் மெய்யும் மனத்துணையில்லாமையால் ஊமையாய்ப் பயன்படாவாகின்றன. உலகும் இருள்சூழ்ந்து என்னை நின் அருள் காணாவாறு மறைத்துவிடுகிறது. எண்ணங்கள் எத்தனையோ எழுகின்றன; எனினும் செயல்படாமையால் என்பால் ஏக்கமே பெரிதாகிறது.

     ஏக்கமும் எண்ணங்களும் மாறி மாறி இயக்குவதால், உய்வகை அறியாமல் சகடக்கால் போல் சுழல்கின்றேன் என்பராய், “இருள்நெறியில் கோலிழந்து குருட்டூமன் போல் எண்ணாதெல்லாம் எண்ணி ஏங்கி உருள் சகடக்கால் போல் சுழலா நின்றேன்” என்று இயம்புகின்றார். குருட்டூமன் இருள் நெறியிற் செல்லுதலால் அவனைப் பிறர் காண்டற்கு வாய்ப்பில்லை; அவனுக்கு நெறிகாட்டும் கோல் கைந்நழுவி வீழ்ந்தொழியின், இருள் பரந்த நெறியாதலால் அதனைப் பிறர் கண்டு எடுத்துத்தரவும் இயலாது; ஊமனாதலால் அவனால் உரைக்குவும் இயலாது; கண்ணும் வாயும் இழந்தானாயினும், கருத்து அவன் உள்ளிருந்து பற்பல எண்ணங்களை எண்ணும்; குருடனாதலால் பரந்திருக்கும் இருளை அவன் சிந்திக்கப் போவதில்லை. கண்ணுடையார் புறத்தே இருப்பினும் இருளிற் செல்லுதலால் காணமாட்டார்; கைக்கோலிழந்தமையை வாயில்லாமைபால் அவன் உரைக்கமாட்டானாயினும், கைகளாற் காட்டுவன்; இருளிற் காட்டுதலால் பிறர் காண்பதற்கு வழியில்லை. அவ்விடத்தே இருந்து தேடும்போது கைகளை நீட்டித் தரையைத் தடவித் தடவி சுழலுவதே அவன் செயலாகும். அதுபற்றியே “உருள் சகடக் கால்போலச் சுழலாநின்றேன்” என்று உரைக்கின்றார். ஒதி - ஒதியென்னும் மரம். ஒதிபருத்தாலும் பயினில்லை என்பது பழமொழி.

     (80)