81
81. உலகியல்
வாழ்வில் நாளும் பெருகும் துன்ப நினைவுகள் வடலூர் அடிகளின் திருவுள்ளத்தில் எழுந்து அலைக்கின்றன.
இறைவன் திருவருளாலன்றி இத் துன்பநிலை நீங்குதற்கு வழியில்லை என்று உணர்கின்றார். தனக்கு
உவமையே யில்லாத இறைவன் திருவடிஞானம் ஒன்றுதான் மனக்கவலை மாற்றவல்லது என்னும் தமிழ்மறை
அவர் உள்ளத்தில் தோன்றி ஒளி செய்கிறது.
திருவடியென்னும் திருவருள் எங்கும் எவ்வுயிர்க்கும் பரவி வாழ்விப்பது. கல்லினுள் இருக்கும் சிறுதவளைக்கும்
அத்திருவருள் வேண்டுவன நல்கி வாழச்செய்வதை நினைக்கின்றார். அதனை இதுகாறும் தான் நினையாது
மறந்தமை புலனாகிறது. காலம் வாய்த்தவிடத்துச் சிற்றெறும்புகள் எங்கும் ஒடியலைந்து தமக்கேற்ற
உணவுப்பொருளை நாடுவது காண்கின்றார். ஆக்கைக்கே இரைதேடி யலையும் அவற்றின் செயலையும் மக்கள்
செயலையும் நோக்குகின்றார். உயிர்வகை அனைத்தும் உண்பொருள் நாடித் திரிவதைப்
பார்க்கின்றார்; இவ்வாறே தாமும் உயிர்வாழ்க்கைக்கு வேண்டியன எண்ணி அலைவதை உணர்கின்றார்.
திருவருளொன்று தவிரப் பிற எவையும் பயன்படாமையை எண்ணித் துணிந்து அது நோக்கி நெஞ்சு பஞ்சுபோல்
அலமருவதால், உடல் இளைத்து வலி குன்றுவதையும் தெரிந்துணர்கின்றார். பெற்ற தாயைக் காணாது பேதுறும்
சிறுபிள்ளைபோல, தாம் திருவருள் பெறாது வருந்துவதும் அறிகின்றார். இறைவன் தன்னைக் கைவிட்டுவிட்டானோ
என்று அறிவுகலங்கி நினைக்கின்றார். அந்நினைவு பேரச்சத்தைத் தருகிறது. தன்னை இறைவன் அருள்
புரியாது கைவிடற்குக் காரணம் யாதாகலாம் எனக் கவல்கின்றார், தாம்செய்த பிழைகளை முறையே எண்ணுகின்றார்.
ஒன்றும் விளங்கவில்லை. திருவருள் கைவிட்டொழியுமாயின் தமது நிலை யாதாம்? என்று எழும் நினைவு
இடிவிழுந்தது போன்று ஏக்கத்தை விளைவிக்கிறது. தனக்குரிய இல்லறத் தொடர்பு அற்ற ஒருத்தியின்
குற்றம் கண்டு கணவன் முதலிய சுற்றத்தார் கைவிடுவராயின், அவள் நிலை எத்தனைத் துன்பத்துக்கு
இடமாகுமோ அத்தனைத் துன்ப நினைவுகள் தோன்றி அலைக்கின்றன; அதனால் அடிகள் அழுது
புலம்புகின்றார்.
2151. கற்றவளை தனக்கும்உண வளிக்கும் உன்றன்
கருணைநிலை தனைஅறியேன் கடையேன் இங்கே
எற்றவளை எறும்பேபோல் திரிந்து நாளும்
இளைத்துநின தருள்காணா தெந்தாய் அந்தோ
பெற்றவளைக் காணாத பிள்ளை போலப்
பேதுறுகின் றேன்செய்யும் பிழையை நோக்கி
இற்றவளைக் கேள்விடல்போல் விடுதி யேல்யான்
என்செய்வேன் எங்குறுவேன் என்சொல்வேனே.
உரை: கல்லினுள் உறையும் தவளைக்கும் உணவளித்துக் காக்கும் உன் கருணையின் இயல்பை நான் நினையாது மறந்தேன்; எறும்புபோல் திரிந்து இளைத்து, உன் அருள் காணாமல், பெற்ற தாயைக் காணாது ஏங்கும் இளம்பிள்ளை போல அறிவு பேதுறுகின்றேன்; செய்பிழையை நோக்கி மனையறத் தொடர்பு இற்றொழிந்த ஒருத்தியைக் கேள்வனாகிய கணவன் முதலியோர் கைவிடுவதுபோல, என்னைக் கைவிடுவையாயின் என்ன செய்வேன்; யாது சொல்வேன்; எங்கே சென்று உய்தி பெறுவேன்; உரைப்பாயாக. எ.று.
கல்லுள் உறையும் தேரையைக் கற்றவளை என்கிறார். கற்குள் அகப்பட்டமையின் இரைதேடும் வாய்ப்பின்மை கண்டு இறைவன் அதற்கும் உணவு தந்து உயிர் வாழ வைக்கும் அருட்டிறத்தைக் “கற்றவளை தனக்கும் உணவளிக்கும் கருணைநிலை” என்று உரைக்கின்றார். அதனை அறிகின்ற மக்களுயிர் திருவருளை ஒருபோதும் மறத்தல் கூடாது. அதனைத்தான் மறந்தமை புலப்பட “அறியேன்” என்று கூறுகிறார். அறிதல் “நன்றியறிதல்” என்பதுபோல, நினைத்தல் என்னும் பொருளது. மறந்தமைக்குக் காரணம் தன்பால் படிந்திருக்கும் கீழ்மைத்தன்மை என்பார். “கடையேன்” என்று குறிக்கின்றார். கடைமை-கீழ்மை. மறைப்பும் ஒருவகை மறைப்பாகலின் அஃது இறைவன் திருவருளைக் காணாமைக்குக் காரணமாயிற்று. காணாமையால் தான் செய்தது இது என்பார், எறும்புபோல் நாளும் உண்பொருள் நாடி ஒய்வின்றித் “திரிந்தேன்” என்றும், அதனால் உள்ளம் சுருங்கி உடல் வலி இன்றியாயினமை விளங்க, “இளைத்தேன்” என்றும் கூறுகின்றார். இளைத்தவழிச் செயல் ஒழிதல் இயல்பு. எல் - விளக்கம். சிற்றெறும்பு இனிது உறைதற்கேற்ற வளை எற்றவளை எனப்பட்டது. 'எல்' என்னும் உரிச்சொல் றகரவொற்றை எழுத்துப் பேறாகக் கொண்டு 'எற்ற' என வந்தது. ஒளியையுடையாவனை என்பது பொருள். “முன்னிலை முன்னர் ஈயும் ஏயும், அந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே” என்பது விதி. முன்னிலை வினைக்கு அமைந்ததாயினும் சிறுபான்மை படர்க்கைப் பெயர்க்கண்ணும் இதுபோல் வரும் எனக்கொள்க. “நற்றவம் செய்த வீரர் உளவழி நயந்து நாடும் பொற்ற தாமரையினாள்” (சீவக. 2238) என்றவிடத்துப் பொன்னென்னும் பெயர் எழுத்துப் பேறுற்றுப் பொற்ற என வருதல் காண்க. ஏற்றவளை என்பது குறுகி எற்றவளை என வந்தது எனினும் பொருந்தும். பெற்றவள் - ஈன்ற தாய்; இற்றவளைப் பிழை நோக்கிக் கேள்விடல் போல் என இயையும்; இல்லிருந்து செய்யும் நல்லறத் தொடர்பு இல்லா தொழிந்தவள் என்றற்கு 'இற்றவள்' என்கிறார். இல்லறத்தை விட்டது பிழை என்று அறிக. அவளோடு வாழ்தற்கு இடமின்மையின் கணவன் கைவிடுவானாயினன், கேள் - கணவன். “கற்பும் காமமும் நற்பாலொழுக்கமும், மெல்லியற் பொறையும் நிறைவும் வல்லிதின், விருந்து புறந்தருதலும் சுற்றம் ஒம்பலும் பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்” (தொல். பொ. 152). இல்லாட்கும் இம் மாண்புகட்கும் உள்ள கிழமை இற்றவிடத்து அவளைக் கை விட்டுத் துறப்பதன்றிக் கேள்வனுக்கு வேறு செயலின்மை பற்றி “இற்றவளைப் பிழைநோக்கிக் கேள்விடல் போல்” என்று அடிகள் உரைக்கின்றார். அருட்பேற்றுக்குரிய கிழமை இற்றொழிந்தவன் எனக் கருதி என்னைக் கை விடுகுவையாயின் என் நிலை வருந்தத்தக்கதாம் என்றற்கு, “என் செய்வேன், எங்குறுவேன் என் சொல்வேன்” என்று கையறவு படுகின்றார். எறும்புவமை திரிந்து இளைத்தற்கும், பிள்ளையுவமை பேதுறவுக்கும், இற்றவள் உவமை கதியின்மைக்கும் உவமங்களாயின.
இதனால், இறைவன் திருவருளை மறந்தமையால் இளைத்துப் பேதுறுகின்றேன்; என்னைக் கைவிடின் வேறு பற்றுக்கோடில்லை என்று கூறித் திருவருள் புரிதல் வேண்டுமென்பது பயன் என அறிக. (81)
|