82

      82. செயற்கரியவற்றைச் செய்பவர் பெரியவர்; எளியவற்றையும் செய்ய இயலாதவர் சிறியவர் என்று அறவோர் கூறுவர். அரியவை யாவை என்பதற்கு விடை கூறவந்த பரிமேலழகர் மனத்தைத் தம்வயம் நிறுத்திப் பணிகொள்வது அரிய செயல்; அதனைச் செய்வது தான் பெரியோரது பெருமை என்று கூறுகின்றார். ‘மனம்’ என்பது உயிர்க்கும் உடற்கும் இடையே அருவாய் இயங்கும் ஒர் அரிய கருவி. அஃது ஒன்று உண்டென உணரும் இக்கால் நுண்ணறிவுடைய ஞானிகாளாலும் உடலில் அஃது இருக்குமிடம் காணப்படாமல் இருக்கிறது. அதற்கிருப்பிடம் தலையிலுள்ள மூளை என்றும், புருவநடு என்றும் கூறுவர். ஒருமுகமான முடிவு காணப்படாவிடினும் மனமென ஒன்று உண்டு என்பதை மறுப்பார் இந்நாளில் எந்த நாட்டுள்ளும் இல்லை. மெய் வாய் கண் மூக்கு செவி என்று ஐந்து புறக்கருவிகளோடும் கலந்து, சுவை ஒளி ஊறு ஒசை மணம் என்று ஐம்புலன்களோடும் ஒன்றிப், பொருளின் பல்வேறு பண்புகளைக் கண்டறிந்து உயிர்க்கு உணர்த்திய வண்ணம் இருப்பது மனம்; கை கால் முதலிய கருவிகளை இயக்கிச் செயற்படுத்துவதும் அதுவே. செயற்படுத்துமிடத்தும் செயற்கூறு ஒவ்வொன்றையும் கண்டும் கேட்டும் தொட்டும் அறிவதறிவதும் அதன் செயல். உறங்கும்போதும் கனவிடை எழும் காட்சிகளைக் கண்டறிந்து இன்புறுதலும் துன்புறுதலும் அதன் செயல்வகை. கண் காது முதலிய அறிகருவிகளோடும் கைகால் முதலிய செயற்கருவிகளோடும் கூடாது தனித்திருந்து சிந்தித்தலும் தெளிதலும் மனத்துக்குத் தொழிலாகும். இச் செயல்வகை பலவும் உலகியலிற் காணப்படும் பரும்பொருள் நுண்பொருள் வகைகளின் குணஞ்செயல்களைக் கண்டறிந்து உயிர்க்குணர்த்துவதும், உயிரின் அறிவு விழைவு செயல்களுக்கு ஒப்பப் பணிபுரிவதும் மனத்தின் இயல்பு. இம்மாட்டோ! உடற்கு உள்ளே இருக்கும் கருவிகளின் நலந் தீங்குகளை உள்ளுறவுணந்து அவற்றிற்கு ஆவன செய்வதும் அதன் கடமையாகும். இவ்வாற்றல் மனத்துக்கு ஒய்வு ஒழிவே இருத்தற்கு இடமில்லை; சகடக்கால் போல் சுழன்ற வண்ணம் இருப்பது இம் மனம். அதனால், அதனை அடக்கி ஒடுக்கி ஒருமுகப்படுத்துவது அரிதாக உளது. அது பற்றியே, மனத்தை அடக்கி அறிவின்வழி நிறுத்தி ஒன்றுவிப்பவரைப் பெரியவர் என்று அறிவுடையோர் பேசுகின்றனர். மனத்தின் சுழற்சி முற்றும் உயிரறிவன் வளர்ச்சிக்குரியது; உயிர்க்கு உணர்வு தருதற்பொருட்டுத்தானே மனமாகிய கருவி வாய்த்துளது; அதன்வழி ஒழுகுதல் தீது என்றும் சிறுமையென்றும் கூறுவது பொருந்தாதே என்னின், ஒருவழியும் நில்லாது ஓடுவதால் எய்தும் உணர்வு, தெளிவின்றி அரைகுறையாகப் பாகம் பண்ணப்பட்ட உணவுபோல் அறிவுக்கு ஆக்கமாவதில்லை. ஒன்றிலேனும் ஒன்றினாலன்றி உண்மையுணர்வு எய்துவதில்லை. அதுபற்றியே மனத்தை ஒன்றி நிற்குமாறு செய்தல் வேண்டுவதாயிற்று. மனத்தின் துணையால் அறிவு வளம் பெற்ற உயிர், அதனை ஒடுக்கித் தான் பெற்ற அறிவு உரம்பெறச் செய்தல் வேண்டும். அறிவு நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் கண்டு, நன்மையை மேற்கொண்டு இன்பமும் ஏற்றமும் பெறும். மனத்தின் வழியே, அறிவும் அணையுமாயின் துன்பங்களே விளைபயனாகும். அதுபற்றியே திருமூலர் “அடக்க அறிவென்னும் கோட்டையை வைத்தேன்” (2694) என்று கூறுகின்றார். வன்மையின்றி அறிவு மனத்தின்வழிச் செல்லுமாயின் எதனையும் கடைபோகச் செய்ய முடியாது. எப்பொருள் பற்றியும் தொடர்ந்து பேச முடியாது; எப்பொருளையும் ஆழ்ந்து சிந்திக்க முடியாது. மனமென்னும் இக்கருவி, ஒன்றைக் காணும்போது பிறிதொன்றை நாடுவதும், ஒன்றைக் கேட்கும் போது வேறொன்றைக் கேட்பதும், ஒன்றைச் செய்யும்போது பிறிதொன்றில் கருத்தைச் செலுத்தவதும், ஒன்றை நினைக்கும்போது பிற நினைவுகள் எழுப்புவதும் செய்து உயிரை அலைக்கும். இதனை, மனம் போனபடியோடும் சிறுவர்களின் நினைவு சொல் செயல்களைக் கூர்ந்து நோக்கின் நன்கு தெளியலாம். இதனைத் தெரிந்துணரந்த நம் திருநாவுக்கரசர், “மனத்தினர் திகைத்து நாளும் மாண்பலா நெறிகள் மேலே கனைப்பாரால் என் செய்கேன் நான்” என்று கூறுகின்றார். பழுத்த பழம் நிறைந்த மரக்கிளையில் இருப்பினும், எதிர்ப்படும் பழங்களையும் பழுக்காத காய்கறிகளையும் சிறிதுசிறிது கடித்துத் தின்றோடும் குரங்கு போல, மனம் திரிவதுபற்றி அதனைக் குரங்கெனக் கூறுவது மரபாயிற்று. ஆகவே, மனக்குரங்கின் வயப்பட்டு ஒதுங்குவது தான் தமது துன்பத்துக்கெல்லாம் காரணம் என்று கண்ட வடலூரடிகள், அதன் கொடுமையை எடுத்துரைக்கின்றார். அதனை அடக்கி நிறுத்துதற்கேற்ற ஆற்றலும் வன்மையும் திருவருள் துணை செய்தாலன்றிப் பெறற்காகாது என்று சொல்லக் கருதுகின்றார். தன் அடிமையாளுக்குப் பிறர் துன்பம் செய்வாராயின் தலைவரானவர் கண்டுகொண் டிருக்கமாட்டார்; அவரை விலக்கற்கு விரைகுவர். அதுபோலத் தம்மைத் துன்புறுத்தும் மனதை நெறிப்படுத்தற்கு அருள் செய்யவேண்டும்; அதுதான் உன் கருணைக்கு அழகாகும்; நின் திருவுளம் யாது கருதுகிறதோ அறியேன்; அதனை நீ செய்யாமையால் துன்பந்தரும் பாதக நினைவும் செயலுமுடையனாயினேன்; ஆதலால் யான் என்ன செய்ய முடியும்? திகைக்கின்றேன் விண்ணப்பம் செய்கின்றார்.

2152.

     அடிமைசெயப் புகுந்திடும்எம் போல்வார் குற்றம்
          ஆயிரமும் பொறுத்தருளும் அரசே நாயேன்
     கொடுமைசெயு மனத்தாலே வருந்தி அந்தோ
          குரங்கின்கை மாலை யெனக் குலையா நின்றேன்
     கடுமைசெயப் பிறர்துணிந்தால் அடிமை தன்னைக்
          கண்டிருத்தல் அழகன்றே கருணைக் கெந்தாய்
     செடிமையுளப் பாதகனேன் என்செய் வேன்நின்
          திருவுளத்தை அறிந்திலேன் திகைக்கின் றேனே

உரை:

     அடிமைப் பணி புரிய விரும்பும் எம்போல்வார் குற்றம் ஆயிரம் செய்யினும் பொறத்தருளும் அரசே! கொடுமை செய்யும் மனத்தால் வருந்திக் குரங்கின் கைப்பட்ட மாலைபோலக் குலைந்து அழிகின்றேன்; பிறர் கடுமை செய்யத் துணிந்தால் அதனைக் கண்டிருப்பது தலைவனாகிய நின் கருணைக் கழகன்று; நின் திருவுளத்தை அறியேன்; பாதகனாகிய யான் என் செய்வேன்; திகைக்கின்றேன். எ.று.

     அடிமை செய்தலாவது, இறைவன் திருவடி எப்போதும் நினைப்பதும் பேசுவதும் செய்வதுமாதல். 'அடிமை' என்னும் சொல். இறைவன் திருவடிக்கு நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தலைமை தந்தொழுகும் தன்மை என்று பொருள்படும்; இத் தன்மையை யுடையவர்களே அடியார். அடிமை என்பது தலைவரது தலைமைக்கு நெஞ்சில் முதன்மை தந்து ஒழுகுவது. இத்தகைய அடியவர் குற்றம் ஆயிரம் புரியினும், அடிமைப் பண்பின் வழி நிகழ்வனவாதலால், முறை செய்து காக்கும் இறைவன் அதுபற்றிப் பொறுப்பது சிறந்த கொள்கை. இதனை நம்பி ஆரூரர், “நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன் நாவினுக்கரையன் நாளைப் போவானும் கற்ற சூதன் நற்சாக்கியன் சிலந்தி கண்ணப்பன் கணம்புல்லன் என்றிவர்கள், குற்றமே செய்யினும் குணமெனக் கருதும் கொள்கை கண்டு நின் குரைகழல் அடைந்தேன்!” (புன்கூர் 4) என்றும், “கள்ளமே பேசிக் குற்றமே செயினும் குணமெனக் கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன்” (வடதிருமுல்லை 6) என்றும் கூறுவர். நாவுக்கரசர், “குற்றம் கூடிக் குணம்பல கூடாதீர் மற்றும் தீவினை செய்தன மாய்க்கலாம்; புற்றராவினன் பூவனூர் ஈசன்பேர், கற்று வாழ்த்தும் கழிவதன் முன்னமே” (பூவ. குறுந் 3) என்பர். குற்றம் கூடிக் குணம்பல கூடாதீர்-குற்றமாவன மிகைபடச் செய்து குணமான செயல்களை மிகச் செய்யமாட்டாதவர்களே, குணமும் குற்றமும் கலந்தவரே மக்கள். குணமே நிறைந்தவரும், குற்றமே நிறைந்தவரும் மக்களாகார். அதனால்தான் நாவரசர் இங்ஙனம் கூறுகின்றார். ஞானசம்பந்தர், “குற்றமில்லார் குறைபாடு செய்வார் பழி தீர்ப்பவர்” (பிரம்பு. 4) எனச் சுருங்கக் காரண காரிய முறையில் உரைப்பர். இறைவன் குற்றமில்லாதவர்; ஆதலால் குறைபாடு செய்வார்க் கெய்தும் பழியைத் தீர்க்கின்றார் என்பது கருத்து. “தன்னடியார் குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச் சுற்றிய சுற்றத் தொடர் வறுப்பான்” (திருவம். 20) என மணிவாசகர் கூறுவர். இங்ஙனம் சமயக்குரவர் நால்வரும் கூறுவதனால், அடிமை செய்யப் புகுந்திடும் “எம்போல்வார் குற்றம் ஆயிரமும் பொறுத்தருளும் அரசே” என்று வடலூர் அடிகளார் கூறுகின்றார். அடிமைப் பண்பு மிகுமிடத்துச் சிவச்சார்புக்குரிய “தாழ்வு என்னும் தன்மை” மீதூர்தலால், “நாயேன்” என்று தன்னைக் குறிக்கின்றார். கொடுமை -வளைவு. நேரிய நெறியிற் செல்லவிடாமை பற்றி மனத்தைக் “கொடுமை செயும் மனம்” என்று கூறுகின்றார். மாலை - பூமாலை, வினைவேறு சொல்வேறு நினைவு வேறுபட்டுச் சீரழிவதைக் “குலையாநின்றேன்” என்று விளம்புகின்றார். தம்முடைய அடிமையாளைப் பிறர் பற்றித் தீங்குசெய்வது கண்டால் தலைவராயினார் பார்த்திருக்கமாட்டார்; அவர்களை விலக்கிக் காப்ப அளிப்பர்; “தன்னை அடைந்தார் வினை தீர்ப்ப தன்றோ தலையாயவர் தம் கடனாவதுதான்” என நாவுக்கரசர் உரைப்பர். கருணையுருவாகிய இறைவன், மனத்தின் கொடுமையைப் பார்த்திருப்பது நன்றன்று; அதனை அடக்குவதற்கு வேண்டும் அருளைப் புரிவதே நலம் என்றற்கு “கருணைக்கு அழகன்றே” என உரைக்கின்றார். திருவருட்குத்தான் அந்த ஆற்றலுண்டு என்பதை வடலூர் வள்ளல் நன்கு உணர்ந்தவர் பிறிதோர் இடத்தில் “மனமெனும் ஒர் பேய்க் குரங்கு மடப்பயலே நீதான்....... என் சொல்வழி ஏற்றலையானாலோ தினையளவுன் அதிகாரம் செல்ல வொட்டேன், உலகம் சிரிக்கவுனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே” (தி 6; தான் பெற்ற. 2) என்று அவரே குறிப்பது காணலாம். செடிமை - குற்றமுடைய தன்மை. பாதகன் - பெருங்குற்றமுடையவன். கருணையே திருவுருவாகிய இறைவன் இங்ஙனம் மனத்தின் கொடுமையால் துன்புறவிடான்; “அடியோங்கள் மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே” என்றும், “இந்தப் பூமி சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு” என்றும் மணிவாசகப் பெருமான் கூறுகின்றார். இதனால் நாம் உய்யும் பொருட்டு மண்ணகவாழ்வை அளித்த பெருமான், நம் உயிர்க்குச் சிறந்த கருவியாகத் தந்த மனம் கொடுமை புரியாது நேரிய துணை புரியுமாயின் அஃது இறைவன் திருவுள்ளமாக இருக்கலாம் என்றோர் எண்ணம் வடலூர் வள்ளலின் நினைவில் தோன்றுகிறது. “குற்றம் ஒன்று அடியார் இலரானால் கூடுமாறதனைக் கொடுப்பானைக் கற்ற கல்வியிலும் இனியானை (சுத்த நீடூர் 5) என்று நம்பி ஆரூரர் உரைப்பதையும் நினைக்கின்றார்; “நின் திருவுளத்தை அறிந்திடுவேன்” என்று மொழிந்து, அறியாமை திகைப்பை விளைவிக்கின்றது. “அறிந்திலேன் திகைக்கின்றேனே” என்று அவலிக்கின்றார்.

     இதனால் குற்றம் பொறுத்து மனத்தால் கொடுமையுற்றுப் பாதகனாய் வருந்துகிறேன்; மனத்தை என்வழி நிறத்தும் ஆற்றலை வழங்கும் திருவருளைத் தருக என வேண்டுவது பயன் என வுணர்க.

     (82)