83

     83. பொய்யும் மெய்யும் கலந்தது உலகியல்; பொய்ந்நெறி துன்பமும் மெய்ந்நெறி இன்பமும் விளைவிக்கின்றன. எனினும் இன்பமும் துன்பமும் கண்ணும் கருத்தும் நேர்படப் புலனாவதில்லை. இன்பம் எனத் தோன்றுவன துன்பமும், துன்பம் தருவன போல்வன இன்பமும் நல்குகின்றன. இன்ப துன்பங்களை உள்ளவாறு காணும் திறமும் உயர்கட்கில்லை. மலவிருளின் கலப்பே இதற்குக் காரணம் என்று அறிவு நூல்கள் உரைக்கின்றன. இதனால் மக்களுயிர் உண்மை நெறிகாணாது துன்புறுவது இயல்பாக இருக்கிறது. எனினும், மெய்ந்நெறி அறிந்து அதுவேபற்றி மெய்ம்மைகண்டு இன்புறும் நன்மக்கள் இல்லாமல் இல்லை. பொய்ந்நெறிக்கண் செல்லுங்கால் இடர்ப்பட்டு அறிவு சுருங்கிவிடும். மெய்ந்நெறிபற்றி ஒழுகுங்கால் அறிவு மேன்மேலும் விளக்கமுற்று மலர்ந்து விரிகின்றது; ஒரொருகால் பொய்ம்மை தோன்றினும் ஒளிமுன் இருள்போல நீங்கிவிடும்; அறிவின் விளக்கம் மெய்ம்மையே காட்டி இன்புறுத்தும்; அறிவு மறைபடும் காலத்தில் அறிவினுள் அறிவாய் மன்னியிருக்கும் உள்ளொளி எழுந்து அம் மறைப்பை நீக்கி அறிவு கூம்பாவாறு துணை செய்கிறது. அதனால் மெய்ந்நெறி நிற்கும் மேதக்கோர் கூம்பாத அறிவினராய்க் குறைதல் இல்லாத இன்பம் பெறுகின்றனர். அவர்களை மனக்கண்ணால் காண்கின்றார் நம் வடலூர் அடிகள். அவர்கட்கு, உலகியல் இடைநின்று அறிவு கூம்புமாறு மயக்குங்கால், உண்ணின்றருளும் சிவபரம்பொருள் ஞானாசிரியனாய் உள்ளொளியுருவில் ஞானமருளி ஊக்குவதை உணர்கின்றார். அந்நிலை தமக்கு எய்தாமைக்குக் காரணம் யாது என நோக்குகின்றார். தம்மைப் பல வேறு ஆசைகள் தோன்றிப் பிணிப்பதையும், அவற்றுள் பெண்ணாசை மீதூர்ந்து மயக்குவதையும் தெரிந்துணர்கின்றார். அந்த ஆசைப் போக்கில் செல்லும் மனம் அதனுள் ஆழ்ந்த வழியும் அமைதிபெறாது வருந்துகின்றது. ஆரா இயற்கைத்தாகிய அவாவால் எய்தும் துன்பத்தை இறைவனிடம் முறையிடுகின்றார். அங்கே அவா அறுத்து அப் பெருமான் திருவருள் வாழ்வுபெற்ற பெரியார்களை நினைக்கின்றார். அவர்கள் தேனும் பாலும் சர்க்கரையும் கலந்தாற்போலும் சிவபோகம் துய்ப்பது காணுகின்றார். அவர்களைப்போலத் தாமும் இன்புறமாட்டமை தெரிகிறது. அவர்களை அதுபெறச் செய்தது போலத் தம்மையும் ஏன் இறைவன் பெறுவிக்கவில்லை என்று எண்ணுகிறார். தேவர்கட்குகெல்லாம் தலைமைத் தெய்வமாகிய உனக்கு இது தகவோ என்று கேட்கின்றார்.

2153.

     கூம்பாத மெய்ந்நெறியோர் உளத்தே என்றும்
          குறையாத இன்பளிக்கும் குருவே ஆசைத்
     தாம்பாலே யாப்புண்டு வருந்தி நாயேன்
          தையலார் மையலெனும் சலதி ஆழ்ந்து
     ஓம்பாமல் உவர்நீருண் டுயங்கு கின்றேன்
          உன்னடியர் அக்கரைமேல் உவந்து நின்றே
     தீ ம்பாலுஞ் சருக்கரையுந் தேனும் நெய்யும்
          தேக்குகின்றார் இதுதகுமோ தேவ தேவே.

உரை:

     மெய்ந்நெறியோர் உள்ளத்தில் குறையாத இன்பமளிக்கும் குருவே! ஆசைத் தாம்பால் பிணிப்புண்டு வருந்தி, மகளிர் ஆசையாம் கடலில் வீழ்ந்து உவர் நீருண்டு உயங்குகின்றேன்; நின் அடியரோ எனின், அக்கரையில் நின்று பாலும் சருக்கரையும் தேனும் நெய்யும் உண்டு தேக்களிக்கின்றார்கள். இது தகுமோ? எ.று.

     வெயில் உள்வழி மலர்தலும் இல்வழிக் கூம்புதலும் தாமரை மலர்க்கு இயல்பு; அதுபோல மனத்துக்கும் இன்பத்தில் மலர்தலும் துன்பத்தில் குவிதலும் இயல்பு; “கூம்பலும் மலர்தலும் இல்லது அறிவு” என்பர் திருவள்ளுவர். அத்தகைய அறிவுடையோர் மெய்ந்நெறி மேற்கொண்ட மேலோராவர். அவர்கள் மனத்தில் மெயம்மையொளி விளங்கியவண்ணம் இருத்தலின், அதன்பால் கூம்புதலே இல்லை. அதனால் “மெய்ந்நெறியோர் கூம்பாத உளத்தே” என்று வடலூர் வள்ளல் உரைக்கின்றார். அவரது மலர்ந்த உள்ளத்தில் அறிவுத்தேன் ஊறி இன்பம் அளித்துக் கொண்டே இருக்கமாயினும், மனமும் உலகியல்போல மாயாகாரியப் பொருளாதலின், உலகியலுணர்வுகளால் மறைப்புண்டு கூம்புவதுண்டு, அந்நிலையில் இறைவன் அருட்குருவாய் அறிவொளியை மிகுவித்து மறைப்பைப் போக்கி மனத்தை மலர்வித்து இன்பம் நுகர்விக்கின்றான் என்ற உண்மை நெறிபற்றி, “உளத்தே என்றும் குறையாத இன்பளிக்கும் குருவே” என்று தெளியவுரைக்கின்றார். மெய்ந்நெறியோரை விஞ்ஞான கலர் என்றும், அவர்கட்கு இறைவன் உண்ணின்று ஞானவொளி நல்குவனென்றும் சைவநூல்கள் கூறுகின்றன. சகலநிலையில் தாம் உலகியல் புணர்த்தும் மண்ணாசை பொன்னாசை பெண்ணாசைகளாகிய கயிற்றால் பிணிப்புண்டு வருந்தும் திறத்தை “ஆசைத் தாம்பாலே யாப்புண்டு வருந்தி” என்று குறிக்கின்றார். மண்ணும் பொன்னும் இல்லாதவரிடத்தும் பெண்ணாசை விடுவதில்லை யாதலின், அதனை விதந்து, “நாயேன் தையலார் மையலெனும் சலதி ஆழ்ந்து” என்று குறித்துரைக்கின்றார். பெண்ணாசையைச் சலதி (கடல்) என்று கூறுகின்றார். முடிவு காணாத வகையில் மக்களைத் தன்பால் ஆழ்த்திக் கரையேறவிடாமல் பெருகி நிற்பது பற்றி, உடல் தளரினும் பெண்ணாசை உள்ளத்தினின்றும் ஒழிவதில்லை; நீர்வேட்கை மிக்கவன் உவர்நீரை எத்துணை மிகுதியாக வுண்ணினும் வேட்கை தணியாததுபோலப் பெண்ணாசையும் எத்தனை நுகரினும் தணிவதின்மையின் “ஓம்பாமல் உவர்நீர் உண்டு உயங்குகின்றேன்” எனவுரைக்கின்றார். உவர்நீர் - உவர்க்கின்ற நீர். ஒருமுறை உண்பவர் உவர்ப்பாவது அறிந்தபின் வேண்டா வென ஒம்புவர்; பெண்ணுறவு உவர்க்கினும் விடப்படுவதில்லை என்றற்கு “ஒம்பாமல் உவர்நீர் உண்டு உயங்குகின்றேன்” என்பாராயினர். “காமக்கடும்புனல் நீந்திக் கரைகாணேன்”; “இன்பம் கடல் மற்றுக் காமம்” என்று திருக்குறள் உரைப்பது காண்க. மண் பெண் பொன் என்ற ஆசைக்கடலைத் திருவருள் புணையாகப்பற்றிக் கடந்து இறைவன் திருவடியாகிய அக்கரையை அடைந்தவர் அடியார். அவர்கள் ஆங்கே பெறும் சிவபோகத்தைப் பாலும் சருக்கரையும் தேனும் நெய்யும் உண்டு தேக்கேறியவர் நிலையில் வைத்துக் காட்டுகின்றார். இதனால் மெய்ந்நெறிபற்றி இறைவன் திருவடிக்கன்பராயினார் நலம் கூறி அவரையொப்பத் தாமும் அடியவராகும் உள்ளக் கருத்தைத் தெரிவித்துக் கொள்வது பயன் என்பதாம்.

     (83)