84
84.
ஒருபால் இருந்து
ஒன்றை நினைக்கின்றார் வடலூர் அடிகள்; அந்நிலையில் மனம் வேறுநினைவுகளைக் காட்டிக்
குவிக்கின்றது. ஒன்றை விட்டு ஒன்றாக நினைவுகள் எங்கோ தெடங்கி எங்கோ போய் நிற்கின்றன.
மனம் பேயாய் அலைகின்றது. இந்த மனம் இப்படி அலைவானேன் என்று சிந்திக்கின்றவர், அலைவது
இதற்கு இயல்பாயின், இத்தகைய ஒன்றை இறைவன்தானே படைத்தளித்துள்ளார் என்று உணர்கின்றார்.
‘இவ்வியல்புடைய மனத்தை ஏன் படைக்கவேண்டும்’ என்ற கேள்வி எழுகிறது. படைப்பை எண்ணுகின்றார்.
இதனைப் படைத்துக் காக்கும் இறைவன், முத்தொழிலை அயனாய் நின்று படைக்கின்றான்; அரியாய்க்
காக்கின்றான்; அரனாய் அழிக்கின்றான் என்று சான்றோர் உரைப்பது நினைவில் தோன்றுகிறது.
உலகுபற்றிய செயலை முறைப்பட எண்ணி அயனாய் நின்று படைப்பதும், அரியாய்க் காப்பதும், அரனாய்
அழிப்பதும் செய்யும் முதல்வன் இம் மனத்தையும் நன்கு எண்ணியே படைத்திருப்பன்; அவனுடைய திருவருளால்தான்
மணத்தை அடக்கி ஒருநெறிப்படுத்த வேண்டும் என்று துணிகின்றார். ஒருவன் ஒரு பொருளை உதவினனாக,
அதனைப் பெறுபவன் பயன் கொள்ளுமிடத்து உதவியாகா தொழியுமாயின், அதனை உதவியோனிடத்தில் சேர்த்துவிடுவது
தான் முறையாகும். அம்முறையில், இறைவன் செய்தளித்த மனம் துணை புரியாது ஒழியுமாயின், அதனை
அவனிடம் தெரிவிப்பதன்றி வேறே செய்யத்தக்கது இல்லை. அந்நெறிபற்றி மனத்தின் கொடுமையை
இறைவனிடம் தெரிவிக்கின்றார். இறைவன் ஒருவர் அறிவிக்க அறியும் அறிவுக் குறைவுடையவனவல்லன்;
எங்கும் எல்லாவற்றையும் காணும் நிறையறிவினன்; அதனையும் வள்ளலார் எண்ணுகின்றார். மனத்தின்
செயலை முற்றவும் அறிந்தும் ஒன்றும் அருளாதிருப்பது ஏனோ என நினைக்கின்றார். அருளாவிடின் தமக்கு
உய்தியில்லை என்னும் உணர்வு எழுகிறது. உள்ளம் துடிக்கிறது; உடல் வியர்த்து நடுக்கும் எய்துகிறது.
உய்வகையில்லை என்ற உணர்வினால் ஊக்கம் குறைகிறது; அவலமும் கவலையும் கையறவும் மிகுகின்றன.
கருத்தழிந்து கதறிப் புலம்புகிறார்.
2154. வெள்ளமணி சடைக்கனியே மூவ ராகி
விரிந்தருளும் ஒருதனியே விழல னேனைக்
கள்ளமனக் குரங்காட்டும் ஆட்ட மெல்லாம்
கண்டிருந்தும் இரங்கிலையேல் கவலை யாலே
உள்ளமெலிந் துழல்கின்ற சிறியேன் பின்னர்
உய்யும்வகை எவ்வகையீ துன்னுந் தோறும்
பொள்ளெனமெய் வியர்க்கஉளம் பதைக்கச் சோகம்
பொங்கிவழி கின்றதுநான் பொறுக்கி லேனே.
உரை: கங்கை வெள்ளத்தைத் தாங்கியுள்ள சடையையுடைய கனிபோன்றவனே; படைத்தல் முதலிய தொழில் குறித்து அயன் முதலிய மூர்த்திகளாயினவனே; விழல்போலும் பயினில்லாத என் மனமாகிய குரங்கு ஆடுகின்ற ஆட்டமெல்லாவற்றையும் பார்த்திருந்தும் இரங்கியருள் புரிகின்றாயில்லை; அதனால் கவலை மிகுந்து உள்ளம் மெலிந்து உழலும் சிறியான யான் உய்யும் வகையாது? இதனை உன்னுங்கால் மெய்வியர்க்க உள்ளம் பதைக்கச் சோகம் பொங்கி வழிகிறது; என்னால் பொறுக்க முடியவில்லை. எ.று.
வெள்ளம் - உலகம் ஆழ்ந்து கெடுமாறு பகீரதன் பொருட்டுப் பெருகி வந்த கங்கை வெள்ளம். உலகிற்கு அருள் புரியவேண்டி தன் சடையில் தாங்கிய பெருமையைக் குறிக்க “வெள்ளமணி சடைக்கனியே” என்று விளம்புகிறார். கருணையாய் உள்ளம் கனிந்து நிற்பதும் தோன்றக் “கனியே” என்று கூறுகிறார். தான் தனி முதல்வனாயினும், படைத்தல் அழித்தல் என்ற செயல்வகை வேறுபடுதலின் அதன்கேற்ப அயனும் அரியும் அரனுமாய் விரிந்தமைபற்றி, “மூவராகி விரிந்தருளும் ஒரு தனியே” என்றார் “படைத்தளித் தழிப்ப மும்மூர்த்தி யாயினை” என்பர் ஞானசம்பந்தர். “செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கு மற்றை மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி” என மணிவாசகரும் உரைக்கின்றார். மனமாகிய கருவியில்லையாயின், அறிவு விழைவு செயல் என்ற ஆற்றல் மூன்றும் செயற்படாத நிலையில் ஒரு பயனுமில்லா தொழிதலால் தன்னை “விழலனேன்” என்று கூறுகின்றார். அருளால் படைத்த வுலகை ஒரு காரணம் பற்றி அழிப்பதுபோல, துணையாம் பொருட்டுப் படைத்துதவிய மனத்தை அடியேன் உய்யும்பொருட்டு அடக்கி என் வழி நிற்பிக்க என வேண்டும் கருத்தினராதலின், “மூவராகி விரிந்தருளும் ஒருதனியே” என்று குறிப்பாக வுரைக்கின்றார். மனத்தை அடக்க வேண்டுவதற்குரிய காரணத்தை விளக்குதற்குக் “கள்ளமனக் குரங்காட்டும் ஆட்டம்” என்று கூறுகின்றார். மனத்தை ஒர் அடங்காச் சிறுவனாக்கி, “மனமான ஒரு சிறுவன் மதியான குருவையும் மதித்திடான் நின் அடிச்சீர், மகிழ் கல்வி கற்றிடான் சும்மா இரான் காம மடுவினிடை வீழ்ந்து சுழல்வான், சினமான வெஞ்சுரத் துழலுவன், உலோபமாம் சிறு குகையினூடு புகுவான், செறுமோக இருளிடைச் செல் குவான், மதமெனும் செய்குன்றிலேறி விழுவான், இனமான மாற்சரிய வெங்குழியி னுள்ளே இறங்குவான், சிறிதும் அந்தோ என் சொல்கேளான் எனது கைப்படான் மற்றிதற்கு ஏழையேன் என் செய்குவேன்” (தெய்வமணி) என்றும், “பொய் கொண்டுரைத்தல் அரிது என் செய்கேன் என் செய்கேன் வள்ளல் உன் சேவடிக்கண் மன்னாது பெண்ணாசை வாய்ந்துழலும் எனது மனம் பேய் கொண்டு கள்ளுண்டு கோலினால் மொத்துண்டு பித்துண்டவன் குரங்கோ, பேசுறு குலாலனால் சுழல்கின்ற திகிரியோ, பேதைவிளை யாடுபந்தோ, காய்கொண்டு பாய்கின்ற வெவ்விலங்கோ, பெருங்காற்றினால் சுழல் கறங்கோ காலவடிவோ, இந்தரசால வடிவோ, எனது தர்மவடிவோ அறிகிலேன்” (தெய்வமணி) என்று விரித்துரைக்கின்றார். இம்மனத்தை எனக்களித்த முதல்வானாகிய நீ இதனைக் கண்டிருப்பதும், அடக்கி நிறுத்தும் திறத்தை எனக்கும் அருளாதிருப்பதும் மனக்குரங்குக்கு ஊக்கம் மிகுவிக்கின்றன; அதனால் என்னைக் கவலை மிகுகின்றது; அதனால் உள்ளம் உரமழிந்து மெலிகிறது; யானும் சிறுமையுறுகின்றேன் என்ற கருத்துப் புலப்பட, “கண்டிருந்தும் இரங்கிலையென் கவலையாலே உள்ளம் மெலிந்து உழலுகின்ற சிறியேன்” என்று உரைக்கின்றார். இங்ஙனம் நிலைமை நீடிக்குமாயின் யான் உய்வகையின்றிக் கெடுவேன்; அதனை நினைக்கும்போது உள்ளம் கொதிப்படைகிறது; பதைப்புறுகிறது, வெம்மை மிகுதலால் உடல் வியர்க்கின்றது என்பராய் “உய்யும் வகை எவ்வகை; ஈது உன்னுந்தோறும் பொள்ளென மெய்வியர்க்க உளம் பதைக்கச் சோகம் பொங்கி வழிகின்றது” என்று சொல்லி, முடிவில் தமது ஆற்றாமையை “நான் பொறுக்கிலேனே” என்று கூறுகின்றார். மனம் உடல் சார்ந்து இயலுவது; உள்ளம் உயிர் சார்ந்து இயலுவது. “நன்றாநன் மனம் வைத்திடும் ஞானமாம் ஒன்றனைக் கண்டு கொண்டதென் உள்ளமே” என்று (உள்ளக்குறுந்) திருநாவுக்கரசர் நவில்வது காண்க.
இதனால் மனத்தின் கொடுமை கூறி அதனை அடக்கி மேன்மையுறும் திறம் அருளவேண்டுவது கருத்து என்க. (84)
|