85
85. மனத்தின் அலைப்புக்கு ஆற்றாது முறையிடும் வடலூர் அடிகள் அதனை அடக்குவதற்குத் துணையாகச் சிவபரம்பொருளை
அருள்புரிய வேண்டுகிறார் அன்றோ? சிவபரம்பொருள் தொடர்பில்லாதவர் போல விரைந்து அருள் செய்யாமையை
நினைக்கினார். அவர்பால் குறையிரந்து
நிற்கும் தனக்கும் சிவத்துக்கும் தொடர்பையுடைய தலைவனையும் உணர்ந்து தொடர்பு தெளியும் காலம்
இளமைச்செவ்வி கழியும்போதும், உலகியலறிவு ஒரளவு மிகுந்திருக்கும்போதும் ஆகும். ஆனால், தமக்கு
இளமையிலேயே தன்னையுடைய தலைவன் உண்டு; அவன் சிவபெருமான் என்ற உணர்வு பிறந்திருந்தமை நினைவில்
தோன்றக் காண்கின்றார். அதனை அந்நாளில் தமக்கு உணர்த்தினவர் யாவர் என எண்ணிப்
பார்க்கின்றார். ‘உன் இயல்பு இது; உன்னையுடைய இறைவன் இயல்பு இது; உனக்கும் அவற்கும் உள்ள தொடர்பு
இது’ என அறிவுறுத்தியவர் ஒருவரும் நினைவிற் புலப்படவில்லை. தானும் நினையாமல், தன்னைச்
சூழவுள்ளாரும் உணர்த்தாமல் இளமையிலேயே சிவபெருமானே தனக்குத் தலைவன்; அவனே தனக்கு வாழ்முதல்
என்று உணர்வு தோன்றி, அவன் பால் அன்புகொண்டிருக்கும் தன்மை எங்ஙனம் வந்திருக்கும் என ஆழ நினைந்து,
அப்பெருமானே தனக்கு அறிவறியும் பருவம் எய்துதற்கு முன்னமே தன்னுட் புகுந்து தன்பால் பிணித்துப்
கொண்டானாதல் வேண்டும் எனத் தெளிகின்றார். தன் நிலைமை குழவிப் பருவத்தே மணம் செய்யப்பட்ட
பெண்ணின் நிலையோ டொப்பது காண்கின்றார். உடனிருப்பதும் அப் பெண்பிள்ளை அவன் தனக்குக்
கணவன், தலைவன் என அறியாது பிழை செய்வது போலத் தானும் இறைவனைத் தனக்குத் தலைவன்; அவன்
வழிநிற்றல் கடன் என உணராது பிழைபல செய்தமை நினைக்கின்றார் நம் வடலூரடிகள். செய்பிழையை
மனத்துட்கொண்டு அப் பெண்ணைக் கணவன் புறக்கணிப்பானாயின், அவனது வாழ்வு என்னாகும்? அறிவறியாப்
பிள்ளைமைப் பருவத்தே அவளை மணந்தது குற்றம்; அறியாமையால் அவள் செய்ததை பிழையெனக் கருதியது
பெருங்குற்றம்; பின்பு அது காரணமாக அவளை ஏதிலாள்போலப் புறக்கணித் தொதுங்குவது அதனினும்
பெருங்குற்றம். அவன் குணமும் குற்றமும் விரவிய மக்களினத்து மகனாதலால், அவற்கு அது தகும்; நின்
தொடர்பு பெறற்கரிய பெருமையுடையதென மதித்தொழுகும் நல்லறிவு இல்லாமையால் யான் பிழைபல செய்தேன்;
நீ எனக்கென வாய்த்த இன்பத் தலைவன் என்பதையும் நான் அறிந்திலேன்; பிழை செய்வதும் என்
இயல்பு என்று நீ நன்கறிவாய்; ஆகவே என்னைக் கண்டறியாத ஏதிலான் போலப் புறம் திரிந்து
இருப்பது அருட்கடலாகிய உனக்கு ஆகாது; மேலும் எனது நிலை தாயறியாப் பிள்ளையின் நிலையாகும்; பெற்ற
தாய் இருந்தும் பிறளொருத்திபால் வளர்ந்த காரணத்தால், ஒரு சிறுவன் தாயுணர்வு வந்தும் அவளை
அறியாது மயங்கி வருந்துவது போல, யான் நின்னைக் காணும் உணர்வு பெற்றுக் காணமல் கதறிப்
புலம்புகின்றேன்; அருட்பார்வை செலுத்தி என் அழுகை தீர்த்து மகிழ்விக்க வேண்டுகிறேன் என முறையிடுகின்றார்.
2155. எனையறியாப் பருவத்தே ஆண்டு கொண்ட
என்னரசே என்குருவே இறையே இன்று
மனையறியாப் பிழைகருது மகிழ்நன் போல
மதியறியேன் செய்பிழையை மனத்துட் கொண்டே
தனையறியா முகத்தவர்போல் இருந்தாய் எந்தாய்
தடங்கருணைப் பெருங்கடற்குத் தகுமோ கண்டாய்
அனையறியாச் சிறுகுழவி யாகி இங்கே
அடிநாயேன் அரற்றுகின்றேன் அந்தோ அந்தோ.
உரை: அறிவறியாப் பருவத்திலேயே என்னை ஆட்கொண்ட அரசே, குருவே, இறையே, மனைவியின் அறியாப் பிழைகருதிப் புறக்கணிக்கும் கணவன் போல யான் செய்பிழையே மனத்துட்கொண்டு அறியா முகத்தவர் போல இருக்கின்றாய்; நின் கருணைக்கு இது தகுமா? அன்னையை அறியாது அழும் குழவிக்குத் தன்னைக் காட்டி மகிழ்விக்கும் அன்னைபோல, உன்னை எனக்குக் காட்டி மகிழ்வித்தல் வேண்டும். எ.று.
உயிராகிய தான் வேறு, இவ்வுடலோடு கூட்டி வாழ்விக்கும் முதல்வன் வேறு என்றும், வேறுபட்டவை கூடி யிருத்தற்குத் தொடர்பு யாதென்றும் அறிந்துகொள்ளும் பருவத்துக்கு முன்னையது அறியாப்பருவம், உடலே தான், தானே உடல் என்று ஒன்றி வளர்வது இளமை. உடற்கூறு உலகக்கூறுகள் எல்லாவற்றினும் கலந்து முறை செய்து காப்பாற்றும் இயல்பு பற்றி, “ஆண்டு கொண்ட அரசே” என்று வடலூர் வள்ளல் உரைக்கின்றார். உயிரின் வேறுபட்ட தன்மையையும், இறைவன் திருவருளின் இயல்பையும், அதன் இயக்கத்தால் தான் உண்மை யுணர்ந்து ஞானம் பெறும் நெறியையும் பிறவற்றையும் உண்ணின்று உணர்த்தினமை தோன்ற, “என் குருவே” என்று இயம்புகின்றார். நன்மையறிந்து பேணவும், தீமையறிந்து விலக்கவும் துணைபுரிதல்பற்றி, “இறைவன்” என்று கூறுகின்றார். “நான் ஏதும் அறியாமே என்னுள் வந்து நல்லுணர்வும் தீயுணர்வும் காட்டா நின்றாய்” என்று திருநாவுக்கரசரும், “அறிவிலா எனைப் புகுந்து ஆண்டுகொண்டு அறிவதை அருளி, மேல் நெறியெலாம் புலமாக்கிய எந்தை” என்று மணிவாசகரும் பிறரும் கூறுவது காண்க. மனை - மனைவி; ஈண்டு அறியாப்பருவத்து மனையாள்மேல் நின்றது. அறியாப் பிழை - அறியாமையாற் செய்த பிழை. மகிழ்நன் - மருத நிலைத்தலைவற்குரிய திணைநிலைப்பெயர். மருதத்திணை ஊடலாகிய உரிப்பொருள் மேற்று; இங்கே கணவன் அறியா மனைவியின் பிழையுட்கொண்டு துனிமிக்கு முனிகின்றமை விளங்க மகிழ்நன் என்று குறிக்கின்றார். மதி - மதித்தொழுகுதல். அறியாமுகத்தவர் - ஏதிலார். தடங்கருணைப் பெருங்கடல் என்பதைக் கருணைப் பெருந்தடங்கடல் என மாறுக; கருணையாகிய பெருமை மிக விரிந்த கடல் என்பது பொருள். தடகடல் என்பது தடங்கடல் என வந்தது; உரிச் சொற்புணர்ச்சி. தகுமோ - தகாது; 'ஒகாரம்' எதிர்மறை. அனையறியாச்சிறு குழவி - வளர்ப்பு வேறுபாட்டால் அன்னையைக் கண்டறியாத சிறுகுழவி என்று பொருள்படும். மாயா காரியமான உடம்பு உலகுகளிடையே கிடந்து வளர்ந்து, தாயாகிய திருவருளை அறியாத சிறுமை விளங்கத் தன்னை, “அனை அறியாச் சிறுகுழவி” என உவமம் செய்கின்றார் பெற்ற தாயை அறியாமை பேதைமை; அறியும் பருவம் எய்தியும் அறிந்தடையாமை பெரும் பேதைமை யாதலால் “அடிநாயேன்” என இழித்துரைக்கின்றார். அறிந்து அடையும் நெறியறியாமையின், அழுதலையன்றி வேறு செயலின்மை பற்றி, “அரற்றுகின்றேன் அந்தோ அந்தோ” எனப் புலம்புகின்றார். தான் வேண்டியதொன்றை அறிந்தடைய மாட்டாமையால் குழவிகள் அழுதலைச் செய்வதே உலகில் நாளும் காண்பதும் “இரங்குங்கொல்லோ என்று அழுவதுவேயன்றி மற்றென் செய்கேன் பொன்னம்பலத்தரசே” என மணிவாசகர் கூறுவது ஈண்டு நினைவு கூரத் தகுவது.
இதனால் அறிவறியாப் பருவத்தே ஆண்டு கொண்டதனால் மனையற மறியாத இளமை மனைவிபோலப் பிழைசெய்ய அதுகொண்டு ஏதிலார் போலப் புறக்கணிக்கின்றாய்; அன்னையை அறியாக் குழவி போல நின் அருள் காணாது புலம்புகின்றேன்; அதனைக் காட்டி ஆதரித்தணைத்தல் வேண்டும் என்பது கருத்து என உணர்க. (85)
|