86
86. உலகில் உடம்பெடுத்த மக்கள்
நினைத்தல் பேசுதல் செய்தல் என்ற மூவினைகளையும் செய்தவண்ணம் இருக்கின்றனர். அவ்வினைகள்
தம்முடைய பயன்களாகிய போகத்தைத் தருகின்றன; அப் போகங்களையும் நுகர்தல் என்ற வினைவாயிலாகத்தான்
மக்கள் துய்க்கின்றனர். மேலும், வினைவாயிலாக வரும் இன்பமும் துன்பமும் அறிவை மயக்குவது அயர்விப்பதும்
செய்கின்றன. இவ்வாற்றல் “வினைதீரினன்றி விளையாவாம்” என்று சிவஞான போதம் தெரிவிப்பதை
வடலூர் வள்ளல் சிந்திக்கின்றார். வாழ்வே வினைவடிவாக இருக்கிறது. இவ்வாழ்வு இறைவன் தர வந்தது
எனின், வாழ்வை இயக்கும் வினையும் இறைவன் திருவுள்ளமாகும். இவ்வினை நல்வினை தீவினை என
இருவகையாதலால், இவற்றைச் செய்து மக்கள் வாழ்வு நடாத்த வேண்டுமென்பது இறைவன் குறிப்பாதலை
எண்ணுகின்றார். யான் எனது என்னும் இருவகை உணர்வுகளை முதலாக நிறுத்தி வினைசெய்யுமாறு இறைவன்
இயக்குவது, “யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டுவானாகி நின்றாய்” என மணிவாசகர் உரைப்பதன்
உண்மையால் அடிகட்குப் புலப்படுகிறது; “கருதறிய கருத்ததனுட் கருத்தாய் மேவிக் காலமும் தேசமும்
வகுத்துக் கருவியாதிவிரி வினையும் கூட்டி உயிர்த்திரளை ஆட்டும் விழுப்பொருளே” (அருள்பழுத்த)
என்று தாயுமானார் கூறுவதையும் ஒருங்கே நினைக்கின்றார்.
நல்வினை தீவினை
என இயலும் இவ்வினைகள் உயிர்வகைகளை வாழ்விற் புகுத்தி இறைவன் ஆட்டுவிக்கும் செயலால் உண்டாவன
என்று தெளிகின்றார். உலகில் மக்களிடையே நிகழும் வினைகள் யாவும் இன்பம் கருதிச் செய்யப்படுவதை
அறிகின்றார். அவ்வின்பம் கருதிய வினைகள் மண்மேலும் பொன்மேலும் பெண்மேலும் நிற்கின்றன.
இம்மூன்றிலும் மண்ணும் பொன்னும் பெண்ணை மகிழ்விக்கும் முறையில் அமைந்து, பெண்ணின்பத்துக்கே
ஏற்றம் தருகின்றன. அதனால், ஞானப்பேறோ ஞானவின்பப்பேறே எய்துவதில்லை. ஆராமை விளைவித்து
ஆசையால் அலைப்புண்டு வருந்துதற்கே அஃது ஏதுவாகின்றது. இதனால் எத்தனையோ இடர்படினும் மக்கள்
அதனையே நயந்து திரிவது காண்கின்றார். அக் குற்றத்தைத் தம்மேல் ஏறட்டுக்கொண்டு இறைவன்பால்
முறையிடுகின்றார்.
2156. தீவினைநல் வினையெனும்வன் கயிற்றால் இந்தச்
சீவர்களை ஆட்டுகின்ற தேவே நாயேன்
ஏவினைநேர் கண்மடவார் மையற் பேயால்
இடருழந்தும் சலிப்பின்றி என்னே இன்னும்
நாவினைஎன் பால்வருந்திக் கரண்டு கின்ற
நாய்க்கும்நகை தோன்றநின்று நயக்கின் றேனான்
ஆவினைவிட் டெருதுகறந் திடுவான் செல்லும்
அறிவிலிக்கும் அறிவிலியேன் ஆன ஆறே.
உரை: நல்வினை தீவினை என்னும் கயிற்றால் உயிர்களை ஆட்டுகின்ற தேவனே, நாயேன் மகளிர் மைய லென்னும் பேயால் இடருழந்தும் சலிப்பின்றி நாவால் என்பைக் கரண்டும் நாயும் நகைக்குமாறு மகளிர் கூட்டுறவை நயக்கின்றேன். ஆவினை விட்டு எருது கறக்கும் அறிவிலிக்கும் அறிவிலியாயினேன்; என்னே என் இயல்பு இருந்தவாறு! எ.று.
இடையறவுபடாது நிகழ்ந்த வண்ணம் இருத்தலால் “தீவினை நல்வினையெனும் வன்கயிறு” என்று கூறுகின்றார். சீவர். உடலோடு கூடி வாழும் மக்கள். யான் எனது என்னும் பற்றுக்களை எழுப்பி வினையைச் செய்வித்தலால், “இந்தச் சீவர்களை ஆட்டுகின்ற தேவே” என்று உரைக்கின்றார். பற்று எழாவிடின் வினைசெயல் இல்லையாம்; அஃது இல்லையாயின் வாழ்வில்லை; வாழ்ந்தாலன்றி மலவிருள் போக்கும் அறிவுப்பேறும் இல்லையாகு. மலவிருள் குறையத் திருவருள் விளக்கம் சிவப்பேறு எய்துவித்துப் பிறவித்தளை நீக்கும். மலமாசகன்று சிவஞானத்தால் சீவர்கள் சிவபோகப் பெருவாழ்வு பெறல்வேண்டும் என்பது சிவபரம்பொருளின் திருக்குறிப்பு. அதுபற்றியே “சீவர்களை ஆட்டுகின்ற தேவே” என்று செப்புகின்றார். ஏ - அம்பு. மகளிர் கட்பார்வை காமமயக்கத்தை விளைவித்தலால், “ஏவினை நேர் கண்மடவார் மையல்” என்றனர்; அம் மையலுற்றவர் அவர் கூட்டத்தையே விரும்பி அவர் பின்னே திரிதலால், அவ்வாறு திரிவிக்கும் மையலைப் 'பேய்' என்றனர். மகளிர் பின்னே பேய் போலத் திரிவார்க்கு நோயும் பழியும் துன்பமும் விளைவதால், “இடருழந்து” என்றும், இடருழந்தும் ஆசை அடங்காமை, பற்றி, “சலிப்பின்றி” என்றும் உரைத்து, அதன்பாற் பிறக்கும் இகழ்ச்சி காரணமாக “என்னே” என்றும் உரைக்கின்றார். அவ்வாறு மகளிரை நயக்கும் நிலையை நினைக்கின்றார். எலும்பின்பால் சுவையின்றாயினும் கரண்டிமகிழும் நாயின் நிலையினும் மகளிர் கூட்டத்தை விரும்பும் நயப்பு எள்ளி நகைக்கத்தக்க தாதல்பற்றி, “நாவினை என்பால் வருந்திக் கரண்டும் நாய்க்கும் நகைதோன்ற நின்று நயக்கின்றேன்” என்று விரித்துரைக்கின்றார். நிலைத்த ஞானப் பேரின்பம் பெறற்பொருட்டு வாழ்வு மேற்கொண்ட சீவன், அதனைப் பெறற்குரிய திருவருளை நாடாது பெண்களைக் கூடிப்பெறக் கருதி யுழல்வது அறிவுடைமையாகாது எனத் தெளிகின்றார். பசுவினிடத்தே கறந்து பெறக்கூடிய பாலை அதனைவிட்டு எருதைப்பற்றிக் கறக்க முயல்வோனைப் போல அறிவிலி இல்லை. ஞானவின்பம் பெறக்கருதுபவன் பெண்ணைக் கூடிப்பெறக் கருதுவது அறிவின்மையினும் கீழ்ப்பட்ட அறிவின்மை என்பது புலப்பட “ஆவின் மடியினைவிட்டு எருது கறந்திடுவான் செல்லும் அறிவிலிக்கும் அறிவிலியேன் ஆனவாறு” என அவலித்துரைக்கின்றார்.
இதனால், வினைக்கயிறு கொண்டு சீலர்களை ஆட்டுவிக்கும் பெருமானாதலால், வினைவழி நின்று மடவார் மையற்பட்டுப் பேய்த்தன்மை கொண்டு ஆடிக் கீழ்மையுறும் எங்களை ஈர்த்து நன்னெறிக்கண் செலுத்தி உய்விக்கவேண்டும் என்பது கருத்து என அறிதல் வேண்டும். (86)
|