87
87. இயக்க இயங்கும் தமதி நிலையே மேலும் எண்ணுகின்றார். நமது வள்ளற்பெருமான். மணிவாசகப்
பெருமானது அருளுரை நினைவில் எழுகிறது. “கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும்
கரந்தும் விளையாடி” என்று அது தெருட்டுகின்றது. உயிர்களை உலகிற் பிறந்து வாழச் செய்வது அப்
பெருமானுக்கு விளையாட்டாயின், நான் பிறந்து துன்புறக் காண்பதும் அவற்கு விளையாட்டோ என்று தம்முள்
வினவுகின்றார். விளக்கம் பிறக்கவில்லை. இறைவனை முன்னிலைப்படுத்தி, “எம்பெருமானே, நின்
விளையாட்டை என்னென்பேன்?” என்றார். விளையாட்டும் ஒரு பயன் கருதிதயது; இல்லையாயின் அது
வீண் செயலாகும் என்று அறிஞர் கூறுவதும் அடிகளார் நினைவில் எழுகிறது. உண்மை காணமாட்டாமையின்
அறிவு சிறுமையுறக் காண்கின்றார். தமது உயிர் தங்கி வாழும் உடம்பை நோக்கி, அது குருதியாகிய
செந்நீர் குழைத்துப் புலாலாகிய ஊன்சுவர் எழுப்பிய சிறுவீடு போலத் தோன்றுவதை எண்ணுகிறார்.
அதனுள் இருள் சூழ்ந்து கிடக்கிறது. வெளியில் செல்லமாட்டாமல் உயிர் சிறைப்பட்டது போலும் நிலைமை
காணப்படுகிறது. அவ்வப்போது பசித் தீ தோன்றி வெதுப்புகிறது. மன முதலிய உட்கருவிகளும் கண்
காது முதலிய புறக்கருவிகளும் பலவேறு எண்ணங்களும் ஒளி, ஒலி முதலிய புலன்கள் மேற்செல்லும்
ஆசைகளும் பேய்போல் சூழந்து அச்சுறுத்தி அலைக்கின்றன. காமம் வெகுளி முதலிய குற்றங்கள் எழுந்து
அரட்டர்போல் வெருட்டுகின்றன. இவற்றினிடையே கிடந்து வருந்துதற்கோ என்னை வேதனை
விளைவிக்கிறது என்று கூறாமற் கூறுகின்றார். இயக்குகின்ற குறிப்பின்படி இயங்குபவனாதலால் நான்
இதனை உரைக்கின்றேன் எனக் குறிப்பால் உரைக்கின்றார்.
2157. எம்பெருமான் நின்விளையாட் டென்சொல் கேன்நான்
ஏதுமறி யாச்சிறியேன் எனைத்தான் இங்கே
செம்புனலால் குழைத்தபுலால் சுவர்சூழ் பொத்தைச்
சிறுவீட்டில் இருட்டறையில் சிறைசெய் தந்தோ
கம்பமுறப் பசித்தழலுங் கொளுந்த அந்தக்
கரணமுதல் பொறிபுலப்பேய் கவர்ந்து சூழ்ந்து
வம்பியற்றக் காமாதி அரட்டர் எல்லாம்
மடிபிடித்து வருத்தவென்றோ வளர்த்தாய் எந்தாய்.
உரை: எம்பெருமானே, நின் திருவிளையாட்டை என்னென்று சொல்வேன்; நின் திருவுள்ளத்தைச் சிறிதும் அறியமாட்டாத சிறுமையுடையவன் நான். என்னை நன்கு அறிந்தும் குருதியும் புலாலும் கலந்த உடம்பாகிய சிறுவீட்டில் இருள்படிந்த ஒர் அறையில் சிறை செய்து, பசித்தீ எழுந்து ஒருபால் வருத்த, ஒருபால் அந்தக்கரணங்களும் பொறிபுலன்களும் பேய்போற் சூழ்ந்து வம்பு செய்கின்றன; காமம் வெகுளி முதலியன எழுந்து என் அறிவைக் கவர்ந்துகொண்டு ஆறலைக்கும் கள்வர்போல் என்னைப் பற்றித் துன்புறுத்துகின்றன. இங்ஙனம் நான் வருந்தவேண்டுமென்று கருதியோ என்னை இதனுட் கிடந்து வளரச் செய்தாய்; யான் ஒன்றும் அறிகின்றிலேன். எ.று.
உயிர்களின் பொருட்டு உலகையும் உடம்புகளையும் படைத்துக் காப்பது இறைவன் செயல்; இச்செயல் அனைத்தும் அவனுக்கு விளையாட்டு எனச் சான்றோர் உரைக்கின்றார்கள். எவ்வுயிர்க்கும் எவ்வுலகுக்கும் பெருமானாதலால் நினக்கு இவை யாவும் விளையாட்டாக இருக்கலாம். இன்பம் குறைந்தபோது அது வேண்டி விளையாட்டு முதலியன விரும்புவர் அறிவுள்ள மக்கள், அவர்கட்குக் குறையும் நிறைவும் இய்லபாய் அமைந்தன. விளையாட்டால் எய்தக்கூடிய இன்பக் குறைபாடு நினக்கு இல்லை; ஆகவே, நீ மேற்கொண்ட இவ்விளையாட்டு ஏதோ ஒரு கருத்தை உட்கொண்டுதான் இருக்குவேண்டும். அதனை யான் சிறிதும் அறியேன்; அறிந்துகொள்ளும் அறிவுப் பெருமையுடையனல்லன் என்று முறையிடுகின்றாராதலால், வள்ளலார், “எம்பெருமானே நின் விளையாட்டு என் சொல்கேன்? நான் ஏதும் அறியாச் சிறியேன்” என்று உரைக்கின்றார். உடலின் மேந்தோலைச் சிறிது ஆழக் கீறினும் செங்குருதி வெளிப்படக் காண்பதால், 'செம்புனலால் குழைத்த புலால்' எனக் குறிக்கின்றார். ஊனும் குருதியும் கலந்து மெத்தியது போறலின் “குழைத்த புலாற் சுவர்” என்று கூறுகின்றார். ஊனைப் 'புலால்' என்பதும் வழக்கு. “உண்ணாமை வேண்டும் புலால்” (குறள் 257), “பொல்லாப் புலாலை நுகரும் புலையர்” (திருமந். 199) என வரும். உயிர் உறைதற்கு உடம்பு வீடுபோல்வதால் “சிறுவீடு” என்றும், வாய் கண் மூக்கு செவி முதலியன துவாரங்களாக இருப்பதால் 'பொத்தைச் சிறுவீடு' என்றும் உருவகப்படுத்துகிறார். உருப்பெருக்கி என்னும் கண்ணாடியில் நோக்கின் மயிர்கால் தோறும் சிறுசிறு துவாரங்கள் காணப்படுவதும் ஈண்டு நினைவு கூர்தல் வேண்டும். எனினும், உள்ளே ஒளி புகாது இருள் மண்டியிருத்தலின் உடலகத்து உயிர் இருக்கும் பகுதியை 'இருட்டறை' என்று குறிக்கின்றார். உயிர்தானும் மலவிருளிற் கிடக்கிறதென ஞான நூல்கள் கூறுதலின், “இருட்டறையில் சிறை செய்து” என்றது பொருத்தமாகவும் உளது. மலவிருளை ஞானசம்பந்தர் “ஞானத்திருள்” என்று கூறுவர். தான் இருட்டறையில் கிடப்பினும் அவ்வப்போது பசித்தீ யெழுந்து வெதுப்புவதை மறவாமல், “பசித்தழல் கொளுத்த” என்று குறிக்கின்றார். பசித்தீ வெதும்புங்கால் உடலில் மெலிவும் அசைவும் தோன்றுதல்பற்றிக் “கம்பம் உற” என்று காட்டுகின்றார். கம்பம்-நடுங்குதல்.
இவற்றின் வேறாய் அருவாய் இயங்கும் அந்தக் கரணங்கள் மிகப் பல எண்ணங்களை எழுப்பிய வண்ணம் உள்ளன; எண்ணங்கட்கு வேண்டிய பொருள்களைக் கண் காது முதலிய கருவிகள் தந்தவண்ணம் உள்ளன; உறங்கும்போதும் கனவிற்காட்டிக் கருத்தை வருத்துகின்றன. இவற்றைப் பேய்களாக்கி “அந்தக் கரணமுதல் பொறிப்புலப் பேய்” என்று சுட்டுகின்றார். அவை மனவெல்லை முழுதும் கவர்ந்து கடலும் அலையும்போலச் சூழ்ந்து அலைத்தலின், “சூழ்ந்து வம்பியற்ற” என்று கூறுகின்றார்; வீணான எண்ணங்களை எழுப்பி அச்சத்தையும் அவலத்தையும் விளைவித்தலின் “வம்பியற்ற” எனல் வேண்டப்படுகிறது. காமம் வெகுளி மயக்கம் என்று குற்றங்கள் இவற்றின் வேறாகத் தோன்றித் தீ நெறி காட்டித் துன்பம் செய்தலைக் “காமாதி அரட்டர் எல்லாம் மடிபிடித்து வருத்த” என்று விளம்புகிறார். அரட்டர்-அருளுக்கு மாறான குணமும் செய்கையும் உடையவர்; இக் குணஞ்செயல்களை உடையவர் வழிப்பறி செய்யும் கள்வர்; அத்தகையோர் தம் கைப்பட்டோர் உடையைப் பற்றிப்பிடித்து இழுத்துத் துன்புறுத்துவர். அதனால் காமாதி குற்றங்கள் செய்யும் துன்பத்தை விளக்குதற்காக, 'அரட்டர் எல்லாம் மடிபிடித்து வருத்த' என்று கூறுகின்றார்.
இங்ஙனம் உடம்பென்னும் சிறு வீட்டு மலம் சூழ்ந்த இருட்டறையில் சிறை செய்து, பசித்தீ வெதுப்பப் பொறி புலப்பேய் வம்பியற்ற, காமாதி அரட்டர் வருத்துதற்காகவா என்னை வளர்ப்பது? இது விளையாட்டாகாதே என இப்பாட்டால் விளங்குவது காணலாம். (87)
|