88
88.
வினைக் கயிறு கொண்டு மக்களை உலக வாழ்விற் புகுத்தி ஆட்டுவிக்கின்றான் இறைவன் என்பது, அவன்
ஞானாகாயத்தில் ஆடுகின்றான் என்ற நினைவை எழுப்புகிறது. ஒரு நினைவு மனத்தில் எழுகிறபோது ஒத்தும்
மாறுபட்டும் வேறுபிற தொடர்புற்றும் இருக்கும் வேறுநினைவுகளை எழுப்புவது மனவியல்பறிந்தார் நன்கு
அறிந்தது. அவ்வகையில் ஞானவெளியில் இறைவன் திருக்கூத்தியற்றுவதை நினைவுற்ற வடலூர்வள்ளல்,
அவனது கூத்து உயிர்களை உய்விக்கும் நோக்கமுடைய தென்பதை எண்ணுகின்றார். அந்நிலையில் மக்களுயிர்
ஆடும் ஆட்டத்தை நோக்குகின்றார். அவர்கள் இவ்வுலக வாழ்விற் பெறலாகும் பொய்யின்பம்
கருதியும், அதற்குத் துணையாகும் பொருள் கருதியும் ஆடுவதை நோக்குகின்றார். அந்நோக்கம் இடர்விளைவித்துப்
பலதலையாகச் சென்று துன்பமே தருவதை எண்ணுகின்றார் இறைவனது ஞான நாடகம் இன்பவிளைவு கண்ணியதாக
இருக்க மக்களின் ஊன நாடகம் துன்பவிளைவினதாக இருப்பதற்குக் காரணத்தைச் சிந்திகின்றார்.
ஞானக் கூத்துக்குத் திருவருளும் ஊனக் கூத்துக்குப் பொருளும் இயக்க ஏதுவாதலை எண்ணுகின்றார். இவ்விரண்டினுள்
அருளாற்றல் அறிவுடையது (சிற்சத்தி) ஆகும்; பொருளினது ஆற்றல் அறிவுடையதன்று (சடசத்தி) என அறிகின்றார்;
ஆகவே, பொருளாற்றலைப் பிறிதொன்று கலந்து இயக்க இயங்குவது காண்கின்றார்; அதனொடு கலந்து
இயக்குவது மனமெனத் தேர்ந்து வியந்து, அதன் ஆட்டத்தைப் பார்க்கின்றார்; சிறுவர் கைக்கயிற்றால்
ஈர்த்தெறிய நின்றும் இங்குமங்கும் ஓடியும் சுழலும் பம்பரம் போல்கின்றது மனத்தின் சூழ்ச்சி,
ஆயினும், பம்பரத்தின் சுழற்சி படிப்படியாக வேகம் குறைந்தவுடன் வீழ்வதுபோல, மனத்தின்
சுழற்சி அவ்வாறு குறையாது சுழல்வதுடன் தன்னுடைய உடலையும் உயிரையும் அலைத்துத் துன்பத்துக்
குள்ளாக்குகிறது. அடக்க முயன்றால் அடங்குவதாக இல்லை; அதனால் உயிரறிவு சோர்ந்துவிடுகிறது; அச்சோர்வு,
ஒரு கொம்பைப்பற்றிப் படர்ந்திருந்த இளங்கொடி அக் கொம்பற்றபோது காற்றால் அலைந்து எய்தும்
சோர்வு போலவுளது. கொழுகொம்பற்ற கொடியைக் காண்பவருள் பறம்பிற் கோமான் பாரி போன்றார்
தாம் ஊர்ந்துவரும் தேரை ஈந்து உவப்பதுபோல, எனக்கு நின் அருட்கொம்பைத் தந்து என்னை ஆட்கொள்ள
நினைக்கின்றாயோ இல்லையோ என முறைியிடுகின்றார்.
2158. அம்பரத்தே ஆனந்த வடிவால் என்றும்
ஆடுகின்ற மாமணியே அரசே நாயேன்
இம்பரத்தம் எனும்உலக நடையில் அந்தோ
இடருழந்தேன் பன்னெறியில் எனைஇ ழுத்தே
பம்பரத்தின் ஆடியலைப் படுத்தும் இந்தப்
பாவிமனம் எனக்குவயப் படுவ தில்லை
கொம்பரற்ற இளங்கொடிபோல் தளர்ந்தேன் என்னைக்
குறிக்கொள்ளக் கருதுதியோ குறிந்தி டாயோ.
உரை: ஞானாகாசத்தில் ஆனந்த வடிவோடு ஆடுகின்ற மணியே. அரசே, நாயேன் இவ்வுலக நடையில் இடர் உழந்தேன்; என்னைப் பன்னெறியில் இழுத்துப் பம்பரம்போல் ஆடி அலைக்கும் மனம் வயப்படுவதில்லை; கொம்பற்ற கொடிபோல் தளரும் என்னைக் குறிக்கொள்ளக் கருதுகின்றாயோ, இல்லையோ அறிந்திலேன். எ.று.
அம்பரம் - ஆகாசம்; இறைவன் ஆடுமிடம் பரவொளி என்றும், ஞானவெளியென்றும், சிதாகாசம், ஞானகாசம் என்றும் சான்றோர்களால் குறிக்கப்படுகிறது. தமிழ்ச் சைவச் சான்றோர் 'திருச்சிற்றம்மலம்' என்றே மொழிவர். சிற்றம்பலம் என்ற சொல்தான் பிற்காலத்தே சிதம்பரமாகவும் சிதாகாச மாகவும் திரிந்து மொழிபெயர்க்கப்பட்டது. இறைவன், “பாரொடு விண்ணாய்ப்பரந்து” விளங்குபவன்; அவன் திருக்கூத்தாடற்கு அமையும் அம்பலம், பார் முதலாக உள்ள அண்டகோடிகள் அத்தனையும் தனக்குள் அடக்கி நிற்கும் அளப்பரிய பெருவெளியாகும். மண்ணகத்து உயிர்கள் இன்பவாழ்வு எய்துவது கருதித் தனது பேருருவைச் சுருக்கிக் கூத்தப்பெருமானாகத் தோன்றித்தன் ஆடற்கேற்பச் சிற்றம்பலம் கொண்டு திகழ்வதோடு, “ஆம்பிரானுக்கு இது சிற்றம்பலம்; பேரம்பலம் ஒன்று உண்டு; இதனைக் கண்டு மகிழும் மக்களுயிர், இவ்வுடம்பின் நீங்கி, “நண்ணரிய சிவானந்த ஞானவடிவேயாகி” பேரின்பம் பெறல் வேண்டும்” என்ற உயரிய கருத்தை உணர்த்துவாதாகும். இது செஞ்ஞாயிறு வெண்டிங்கள் என்பனபோன்ற இனச்சுட்டில்லாப் பண்பு கொள் பெயரன்று; செந்தாமரை, கருங்குவளை போலும் இனம் சுட்டிய பண்புகொள் பெயராகும். இச் சிற்றம்பலத்தின் சிறுமை இடத்தின் மேலது; இதன்கண் இறைவன் நிகழ்த்தும் கூத்துச் சிவானந்தப் பெருவெளியில் நிகழ்த்தும் ஞானப்பெருங்கூத்து; அதற்குச் சிறுமை பெருமையில்லை என்பது தோன்றவே, சிற்றம்பலம் என வெளிதே மொழியாது, திருச்சிற்றம்பலம் என மொழிகின்றனர். கூத்தப் பெருமான் திருவுருவில் முடிக்கண் நீரும், திருவடிக்கீழ் நிலமும் கைகளில் ஒன்றில் தீயும் ஒன்றில் மான்வடிவில் காற்றும், வாசிகையில் வானும் நிறுத்தி ஐம்பெரும் பூதங்களையும் தாங்கி நிற்கும் அவனது பெருந்தன்மை விளங்குவது காண்கின்றோம், இது பொருளுலக அமைப்பு; இனி, சொல்லுலகுக்கு முதலாகிய ஒலியும் அவன் கண்ணாது என்றற்கு ஒரு கையில் உடுக்கை யுளது. அருள் மொழியும் கண்ணிரண்டும் ஞாயிறுதிங்கள்கள்; அணியாய்க்கிடந்து மேனியெங்கும் சூழ்ந்திருக்கும் ஐவாயரவுகள்; ஐம்பொறியை வாயாய்க் கொண்ட ஆருயிர் வகைகள்; இந்த அரிய பொருளமைந்த இனிய ஆடற்கோலம் கண்களாற் காண்பார்க்கும், மனத்தின்கண் நினைவார்க்கும் தூய பேரின்பம் வழங்குவதுபற்றி, “அம்பரத்தே ஆனந்த வடிவால் என்றும் ஆடுகின்ற மாமணியே” என்று கூறுகின்றார். வடிவால் என்பதில், ஆல் உருபு ஒடுவில் பொருளில் வந்தது. உலகியல் வாழ்வுக்கு இடையறவு இல்லாமையாலும், அதன் இயக்கத்தின்பொருட்டே அப் பெருமானது திருக்கூத்து நிகழ்வதாலும், “என்றும் ஆடுகின்ற மணியே” என்று வள்ளலார் இயம்புகின்றார். “மன்னுமணி” என்றும், “மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே” என்றும், “மாணிக்கக் கூத்தன்” என்றும் சான்றோர் கூறுப வாதலின், “மாமணியே” என்று புகழ்கின்றார். இம்பர் - இவ்வுலகம். அத்தம் - பொருள். “பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பது உலக நடை. பொருள் தேடித் துன்புறும் வாழ்க்கை யியல்பு காட்டற்கு, “அந்தோ இடர் உழந்தேன்” என்கின்றார். பொருள் எளிதிற் கிடைப்பதன்று; “சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது” (கலி. 18) என்பர். எனவே, பல்வேறு நெறியில் அரும்பாடு பட்டுப் பெறற்பாலது என்பது பற்றி மனம் பன்னெறியில் இழுக்கின்றமை விளங்கப் “பன்னெறியில் எனை இழுத்தே அலைப்படுத்தும் இந்தப் பாவி மனம்” என நொந்துகொள்ளுகின்றார். அலைப்படுத்தும் அலைக்கும். மனத்தின் இயக்கத்துக்குப் பம்பரம் உவமை; மனம் பம்பரத்தின் ஆடி அலைப்படுத்தும் என்பது, மனம் பம்பரம் போல், சுழன்று கடல் அலைபோல் மிகப்பல எண்ணங்களை எழுப்பி, அவற்றிற்கிடையே கிடந்து வருத்தச் செய்யும் என்றொரு நயம் தோன்ற நிற்கிறது. தன் அருள் நிலையை உணர்ந்து, அதன்வழி நிற்பாரைக் குறிக்கொண்டு ஆள்பவனாதலால், மனத்தின் வயப்பட்டு அலவுற்றுச் சோர்வுபடும் தம்மை இறைவன் ஆள்வனோ என ஐயம் எழுவதால், வள்ளலார், “குறிக்கொள்ளக் கருதியோ குறித்திடாயோ” என முறையிடுகின்றார்.
இதனால், மனத்தின் வயப்பட்டு உலகநடையில் இடர் உழந்து வருந்தினேனாயினும், கொம்பற்ற இளங்கொடி போல் தளரும் என்னைக் குறிக்கொண்டு அருள்புரிய வேண்டும் என முறையிடுவது கருத்து என அறிதல் வேண்டும். (88)
|