89
89. உலகியலில், அறிவு பொருள் ஆண்மை முதலியவற்றை வெளிப்படுத்திப்
புகழ்விரும்பும் மக்களை நம் வடலூரடிகள் நோக்குகின்றார். அறிவுக்காகக் கல்வி கற்கும் கூட்டமும்,
பெருநூல்களைப் பேரறிஞரை அடைந்து பயிலும் கூட்டமும் ஒருபால் காணப்படுகின்றன. பொருளுக்காக அரசியல்
அலுவலங்களில் பணிசெய்வார் குழுவும், வாணிகம் புரிவோர் திரளும், உழவுத்தொழில் புரிவோரது
பெருந்தொகையும், வேறு நெசவு முதலிய தொழில் மேற்கொண்டார் கூட்டமும் எங்கும் காணப்படுகின்றன.
ஆண்மை புலப்படுத்தும் நெறியில் போர்மறவராய் உழைப்பவரும், காடுமலைகளை அடைந்து வேட்டம்
புரியவரும், மலை மேலுள சரிவுகளில் காடுகெடுத்துக் கற்களை வெட்டி நிலம் அமைத்துத் தோட்டங்கள்
அமைத்து தகுவன விதைத்துப் பயன் கொள்வோரும், நிலத்தில் சுரங்கங்களை அகழ்ந்து பொன்னும் செம்பும்
இரும்புமாகிய பொருள்களை ஈட்டுவோரும், கடலகம் புகுந்து பெருமீன்களைக் கொணர்வோரும், கடற்குள்
மூழ்கி முத்தும் பவமுளம் கொண்டு வருபவருமாகப் பலரும் உழைப்பது காண்கின்றார். இனிப் புகழை நினையாது
வாழ்தல் வேண்டிச் சிலர் கனவு, ஆறலைத்தல், பிறரை வஞ்சித்தல் முதலிய இழிசெயல்களை மேற்கொண்டு
வாழ்வது தெரிகிறது. இங்ஙனம் பலவேறுவகைத் தொழில்களில் ஈடுபடினும் பொதுவாக எல்லோருடைய உள்ளமும்
பெண்ணின்பத்தில் பேராசையுற்றுப் பேதுறுவதை எங்கும் பார்க்கின்றார். அதனால், மக்களிடையே
போரும் பூசலும் உயிர்க்கொலையும் பெருக நிற்கின்றனர். பெண்ணாசையால் பலரும் அறிவு மயங்கி
அலமருவது அடிகளார் உள்ளத்தில் அவலத்தை விளைக்கின்றது. பெண்ணின்ப நுகர்ச்சியை நினைக்கின்றார்.
அந்நுகர்ச்சிக்கண் மக்களைச் செலுத்தும் மனத்தை எண்ணுகின்றார். அதன் புலைத்தன்மையைக் கண்டும்
வேட்கை செய்தெழுந்து அறிவைக் கீழ்படுத்தி, அதற்கு மாறான பேதைமையை உயர்த்துகிறது. பொறுக்கலாகாத
அருவருப்பும் வெறுப்பும் தோன்றுகின்றன. இந்நிலையில் நீங்கி, இன்பமும் தெளிவும் நிறைந்த
வாழ்வு வேண்டுமே என விழைக்கின்றார். அதற்கு இறைவன் திருவடியுணர்வும் அதன்பால் அன்பும்
கொள்வதும் தவிர வேறு மாற்றில்லை என எண்ணுகின்றார். அந்த உணர்வும், அன்பு செய்யும் ஒழுக்கமும்
இன்றிக் கிளை பரப்பி வருவார்க்கு நிழல் பயக்கும் நீர்மையின்றி நெடுமரமாய் மக்கள் இருப்பது
அடிகளாரின் நெஞ்சை அலைக்கின்றது. இறைவன் பால் முறையிடுகின்றார்.
2159. கண்ணுடைய நுதற்கரும்பே மன்றில் ஆடும்
காரணகா ரியங்கடந்த கடவு ளேநின்
தன்னுடைய மலரடிக்கோர் சிறிதும் அன்பு
சார்ந்தேனோ செம்மரம்போல் தணிந்த நெஞ்சேன்
பெண்ணுடைய மயலாலே சுழல்கின் றேன்என்
பேதைமையை என்புகழ்வேன் பேய னேனைப்
புண்ணுடைய புழுவிரும்பும் புள்ளென் கேனோ
புலைவிழைந்து நிலைவெறுத்தேன் புலைய னேனே.
உரை: கண்பொருந்திய நுதலையுடைய கரும்பே, காரண காரியம் கடந்த கடவுளே, நின் தண்ணிய மலர் போன்ற திருவடிக்கண் சிறிதும் அன்பு கொண்டேனில்லை; செம்மரம்போல் தணிந்த நெஞ்சுடையனாய்; பெண்மயலால் சுழல்கின்றேன்; எனது பேதைமையை என்னென்று மொழிவேன்; புலை விழைந்து நிலை வெறுத்த புலையனாயினமையின், என்னைப் புண்ணிடை நெளியும் புழுவைத் தின்னும் புள்ளென்பேனோ? என்னென்பது. எ.று.
கரும்பெல்லாம் இயல்பிலேயே கண்ணுடையவை. நாம் கணு என்பதைப் பண்டைச் சான்றோர் கண்ணென வழங்கினார். “மரக்கண்ணோ மன்னாள்வார் கண்” என முத்தொள்ளாயிரம் கூறுவது காண்க. கண்ணுடைக் கரும்பை வேறுபடுத்தற்குக் கண்ணை நுதலிலேயுடைய கரும்பே என இறைவனைக் கூறுகின்றார். கடவுளாகிய பரம்பொருள் காரணகாரிய ஆராய்ச்சிக்கு அகப்படாமல், அருள் ஞானத்தால் உணரற் பாலதாதலால், “காரண காரியம் கடந்த கடவுளே” என்று உரைக்கின்றார். காரண காரிய ஆராய்ச்சிக்கு அகப்படுவன இறைவனால் படைக்கப்பட்ட உடல் கருவி உலகமேயன்றி, இறைவன் அன்மையால் இவ்வாறு கூறினார் எனினும் அமையும். காரண காரியப் பிரமாணங்களின் அளவைக் கடந்தவன் என்ற உண்மை விளங்கத் திருவடிப் புகழ்ச்சியில்,
“பரமபோதம் போத ரகிதசகிதம் சம்பவா தீதம் அப்பிரமேயம்”
என்று வள்ளலார் அருளிச் செய்திருப்பது நினைவு கூரத்தக்கது. இதனையே வீராகமம் முதலிய சிவாகமங்கள் கூறுகின்றன. மன்றில் ஆடும் கடவுளே காரணகாரியம் கடந்த கடவுள் என்றற்கு இரண்டையும் தொகுத்து, “மன்றில் ஆடும் காரண காரியம் கடந்த கடவுள்” என்று குறித்துரைக்கின்றார். மன்றில் ஆடும் கூத்து ஐந்தொழில் நிகழ்ச்சி:
“தோற்றம் துடியதனில் தோயும் திதிஅமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் ஊற்றமாம் ஊன்றும் மலர்ப்பதத்தே உற்றதிரோ தம்முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு”
“மாயை தனையுதறி வல்வினையைச் சுட்டுமலம் சாய அமுக்கிஅருள் தான்எடுத்து நேயத்தால் ஆனந்த வாரிதிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல் தான்எந்தை யார்பரதம் தான்”
என்று உண்மை விளக்கம் உரைப்பதனால் உணரப்படும். அத் திருக்கூத்தும் காரண காரியம் கடந்தது என்று கூறும் சேக்கிழார் அடிகள், “ஆதியும் அந்த மில்லா அற்புதத் தனிக்கூத்து” என்பர். பிறவி வெப்பத்தைத் தணிக்கும் சிறப்புப்பற்றித் திருவடியைத் “தண்ணுடைய மலரடி” என்று இயம்புகின்றார். தண்-தட்பம்; முதனிலைத் தொழிற் பெயராக்கித் தணித்தல் என உரைப்பினும் அமையும். 'மலர்' என்றது இங்கே தாமரை. தண்ணீரிலே மலர்ந்திருப்பதுபற்றித் தன்னுடைய மலர் எனப்பட்டது. காரண காரியம் காணும் அறிவுடையவன் உலகின் காரியப்பாட்டால் காரணனாகிய இறைவனை ஆராய்ந்தறிந்து, அவனது அருணிலையை ஓர்ந்து, அவன் திருவடிக்கண் அன்புசெய்யக் கடவனாகவும், அது செய்யாமை புலப்பட, “மலரடிக்கு ஓர் சிறிதும் அன்பு சார்ந்தேனோ” என்று வருந்துகின்றார். அன்பிலா வாழ்வை 'வற்றல் மரம்' என்பர் திருவள்ளுவர். அதனை இலக்கணையாகச் 'செம்மரம்' என்று உரைக்கின்றார். இமையாதவரை இமயவர் என்றும் கொடிய நஞ்சுடைய பாம்பை நல்ல பாம்பென்றும் கூறுவது போலப் பசுமையும் நிழல் தரும் நீர்மையுமில்லாத வற்றல் மரத்தைச் செம்மரம் என்று வள்ளலார் கூறுகின்றார். அன்பும் ஆர்வமுமாகிய செயற்பாடின்மை விளங்க, 'தணிந்த நெஞ்சேன்' என்று இயம்புகின்றார். தணிவு-ஆர்வத் துடிப்பில்லாமை. இறைவன் திருவடிக்கண் அன்பும் ஆர்வத்துடிப்பும் இல்லையே ஒழியப் பெண்ணின்பத்தில் பேரார்வமுற்று அறிவு மயங்கி அலைவது தோன்ற, “பெண்ணுடைய மயலாலே சுழல்கின்றேன்” என்று சொல்லுகின்றார்; இன்பத்துக்கேதுவாகிய இறைவன் தண்ணிய மலரடிக்கன்பு செய்யாது துன்பத்துக் கேதுவாகிய பெண்ணியலார் கூட்டத்தை விரும்பி, அறிவயர்ந்து அலமருவது பேதைமை யாகும்; அதுபற்றியே தன்னைப் “பேதையேன் என் புகல்வேன்” என நொந்து பேசுகின்றார். ஆரா இயற்கையதாகிய அவாவினால் அலைவது பேய்; அதுபோல் தானும் அலைவது தோன்றப் பேயேன் என்று உரைக்கின்றார். புண்ணுடைய புழுவை விரும்பும் புள்ளினத்துள் காக்கை, கரியன் முதலிய புட்கள், ஆடுமாடுகளின் உடலிடையுண்டாக்கிய புண்களில் நெளியும் புழுக்களைத் தின்பது இயல்பு. கிழங்கும் இலையும் காயும் கனியுமிருக்க அவ்வுணவை வெறுத்துப் புலால் உண்ணும் புலையனை ஒக்கின்றேனாதலால் என்னைப் புழுத்தின்னும் புள்ளென்பேனாயினேன் என்று உரைக்கின்றார். புலால் உணவு புலையர் உணவு என்பதைத் திருமூலர் “பொல்லாப் புலாலை உண்ணும் புலையர்” (திருமந். 199) என்பர்.
இதனால், இறைவன், தண்ணிய திருவடிக்கண் அன்பு சிறிதுமின்றி, பெண் மயக்குற்றுப் பேதைமை எய்திப் புலையனாய், நான் புண்ணிலுள்ள புழுத்தின்னும் புள்ளினும் கடையனாக வுள்ளேன், எனக்கு உய்தியில்லை என வருந்துவது பயனாம். (89)
|