90

      90. இவ்வாறு உடம்பினுள் அகப்பட்ட உயிர் பொறிபுலன்களாலும், அந்தக் கரணங்களாலும், காமாதி குற்றங்களாலும், இருட்டறைச் சிறையாலும், பசித்தீயின் வெம்மையாலும் அலைப்புண்டு வருந்தும் திறத்தை விளக்கிய வடலூர் வள்ளல், உடலைச் சுமந்து புறத்தே உடல் ஓம்புவது குறித்து அவ்வுயிர் மேற்கொண்டு புரியும் செயல்வகைகளைத் தொகுத்துக் காட்டுகின்றார். தொடக்கத்தில் ஈன்றவர் வேண்டுவ கொடுத்துவளர்க்க வளர்ந்த நான், அவர்கள் செயலை மேற்கொண்டு, பொன்னும் பொருளும் வேண்டி அவற்றை உடையவரிடம் செல்கின்றேன். அவர் அவற்றை எனக்கு ஈதலை நாடி, அவர் மனம் உவக்குமாறு பொய்பல மொழிகின்றேன்; வேளை தோறும் உடல் பருத்து வளர்தல் குறித்து வயிற்றிடை எழும் பசிக்குச் சோறு தருகின்றேன்; வாடைக் காலத்துக் குளிர் போக்கவேண்டி உடையும் போர்வையும் நாடிப் பெறுகின்றேன்; உடல் பருத்தற்கெழும் பசித்தீ போல வேறு உடல்களைப் பெற்றுப் பெருக்குதற்குக் காமத்தீ எழுகிறது. அதன்பொருட்டு மகளிர் கூட்டத்தில் வீழ்கிறேன். இவ்விருவகைத் தீ விளைக்கும் மயக்கத்தினின்று விழிக்கின்றேன். இவற்றைச் செய்வதற்காகவா என்னை வளர்ப்பது? இஃது என்ன விளையாட்டு என்று எண்ணுகின்றார்; எண்ணம் ஒரு பாட்டுருவில் வெளிப்படுகிறது.

2160.

     பொன்னுடையார் இடம்புகவோ அவர்கட் கேற்கப்
          பொய்ம்மொழிகள் புகன்றிடவோ பொதிபோல் இந்தக்
     கொன்னுடையா உடல்பருக்கப் பசிக்குச் சோறு
          கொடுக்கவோ குளிர்க்காடை கொளவோ வஞ்ச
     மின்னிடையார் முடைக்சிறுநீர்க் குழிக்கண் அந்தோ
          வீழ்ந்திடவோ தாழ்ந்திளைத்து விழிக்க வோதான்
     என்னுடையாய் என்னுடையாய் என்னை இங்கே
          எடுத்துவளர்த் தனைஅறியேன் என்சொல் வேனே.

உரை:

     பொன்னுடைச் செல்வர் இடம் புகவோ, அவர்முன் பொய்புகலவோ, பசிக்குச் சோறு கொடுக்கவோ, குளிர்க்கு ஆடைகொளவோ, காமத்தீவிழைவுக்கு மடவார் இடையில் வீழவோ, அதனால் இளைத்துறங்கி விழிக்கவோ என்னை எடுத்து வளர்த்தாய்; ஈது என்ன விளையாட்டோ? உண்மை யறியேன்; வேறு யான் என் சொல்வேன் என்பது.

     மக்கள் ஈட்டும் பொருள்களுள் தலையாயது பொன்னாதலின், பொன்னுடையாரை எடுத்துரைக்கின்றார். “பொன்னுடையார் போகங்கள் பல அடைந்தவர்” என்ப. உள்ளத்தே உவகையோ இரக்கமோ நிறைந்ததாலன்றி ஒன்றை ஒருவர்க்கு ஈயும் மனநிலை பிறவாதாகலின், அவை பொன்னுடையார் உள்ளத்தில் தோன்றி நிறைதற்கு இரப்பவர் இல்லனவும் உள்ளனவும் உரைப்பர். அவர் உரையுள் உள்ளது கூறலினும் இல்லது புனைந்து கூறுதலே பெரும்பான்மையாதலின், “அவர்கட்கேற்பப் பொய்ம்மொழிகள் புகன்றிடவோ” என்று உரைக்கின்றார். உலகில் உடையவர் சிலரும் இல்லாதவர் பலருமாக இருத்தல்பற்றி, இங்கே இல்லார் வாழ்வையே எடுத்து மொழிகின்றார். பசியில்வழி உண்ணும் உணவு நோய் விளைவித்து உடலின் வளத்தைக் கெடுத்து ஆற்றலைக் குறைப்பதும், பசித்துண்பது உடல் வளத்தைப் பெருக்கவதும் எண்ணியே, “பொதிபோல் இந்த உடல் பருக்கப் பசிக்குச் சோறு கொடுக்கவோ” என்று கூறுகிறார். பொதி - பண்டம் நிறைந்த மூடை. உடல் பருக்கச் செய்வது பசியெனவே, உலகில் உயிர்தாங்கிய உடம்புகள் பெருகுதற்கு காமப்பசி எழுகிற தென்றாவாறாம், உடல் வளர்க்கும் பசி வெம்மை செய்தலால், வெப்பம் உடற்கு இன்றியமையாமை அறியலாம். குளிர் காலத்துக் குளிர் அவ் உடல் வெம்மையைக் குறைக்காதவாறு, உடையாலும் போர்வையாலும் குளிரைத் தடுப்பது வேண்டப்படுகிறது. நீர் நிலைகளிற் படிந்து நீராடுவோர் உடலிற் குளிர்தோன்றுதற்குமுன் கரையேற வேண்டுமென உடற்கூறு அறிந்த வல்லுனர் உரைப்பதை நாம் இங்கே நினைவுகூர்தல் வேண்டும். இதுபற்றியே, பசிவெம்மையை உரைத்த வள்ளலார், “குளிர்க்கு ஆடை கொளவோ” என்று அடுத்து மொழிகின்றார். மகளிர் இடைச் சிறுமையைப் புனைந்துரைக்கும் கவிஞர், இருப்பதும் இல்லாததும் போலத் தோன்றி மறையும் என்பவராதாலின், வள்ளலார், “வஞ்சி மின்னிடையார்” என உரைக்கின்றார். உண்மை போலத் தோன்றிப் பொய்படுவது வஞ்சம். உடல்வளர்க்கும் பசிக்குணவு நறுமணமும் நன்னீரும் உடையதாக, உடல்களில் தொகையைப் பெருக்கும் காமப் பசிக்குரியவரை “முடைச் சிறு நீர்க்குழி” என இயல்பு கூறி இழிக்கின்றார். இருவகைப் பசியும் தணியுமிடத்து மயக்கமும் தாழ்ச்சியும் பயந்து விழிக்கச் செய்தலின், “தாழ்ந்து இளைத்து விழிக்கவோ”என்று சாற்றுகின்றார். என்னுடையாய் என்னுடையாய் - முன்னது எல்லாம் உடையவனே என்றும், பின்னது என்னை உடையவனே என்றும் பொருள் தருகின்றன. ஏன் - எல்லாம்; “என்னுடையரேனும் இலர்” (குறள்) என்பதுபோல, கேவலத்தில் மலமறைப்புண்டு கிடந்த உயிரை எடுத்து உடம்பொடுகூடிய சகலத்தில் புகுத்தினமை புலப்பட, “எடுத்து வளர்த்தனை” என்று குறிக்கின்றார். இதுவும் நினக்கு விளையாட்டாயின், நின் திருவுள்ளக் குறிப்பறியேன் என்பதற்கு, “அறியேன்” என்றும், அறியாமையால் ஒன்றும் சொல்லுதற்கில்லை என்பது தோன்ற, “என் சொல்கேனே” என்று இயம்புகின்றார்.

     இதனால் இறைவனுக்கும் தமக்கும் உள்ள தொடர்பு, வளர்ப்பவனுக்கும் வளர்க்கப்படும் பொருட்கும் உள்ள தொடர்பு என்று காட்டுவதுபயனாதல் அறிக.

     (90)