91

      91. உடல் உழைப்பின்றி, உணர்வைப் பெருக்கிப் கொள்ளும் ஊக்கமும் இன்றி, பொருட் செல்வம் ஒரளவு பெற்றுள்ள மக்களை நோக்குகின்றார். நம் வடலூர் அடிகள். அவர்களுக்கு உலகியல் உண்மையுணர்ந்த அறிஞர்களின் தொடர்பும் இருக்கிறது. அவர்கள் உடல் வாழ்வின் நிலையாமையை நினைத்து வரும் கணத்திலே இவ்வுடல் இறந்துபடுமோ, வாழுமோ என உறுதி கூறமாட்டாத வகையில் உடம்பு உளது என்று அறிவுறுத்துகின்றனர்; அவரது அறிவுரை அச் செல்வர்களின் செவியிற் புகவில்லை; அவரது மனத்தில் “என்றும் வாழலாம்” என்ற எண்ணமே மீதூர்ந்து நிற்கிறது; உடற்கு வேண்டுவன அறிந்து உரிய அளவில் நல்குவோமாயின் பல்லாண்டு வாழலாம் என்ற கருத்து வலியுற்றுது. அதனால், தமது உடல் வாழ்வுக்கு இன்பம் தருவனவற்றை நாடுகின்றனர். எங்கே இருப்பினும், எங்கே செல்லினும் அவரது வாழ்வு மனத்துக்கினிய பெண்ணுறவு, வயிற்றுக்குத் தும்பைமலர்போலும் தூய வெண்மையான சோறு, மெல்லிய ஆடை, வசதியான இடம் என்ற இவற்றையே பெரிதும் வேண்டுகின்றது; பார்க்குமிடந்தோறும் கண்களுக்கு வியப்பும் மகிழ்ச்சியும் நல்கும் காட்சிகளை நாடுகின்றது. அவர்களின் மனத்தில் எழும் நினைவுகள் யாவும், இவற்றைச் சார்ந்துள்ளனவேயன்றி எள்ளத்தனையும் இறைவனை நினைப்பதில்லை; இவர்கட்கு உய்யும் வகை யாது? என வள்ளலார் உள்ளத்தே உன்னுகின்றார். அவர்கள் பொருட்டு வடலூர் வள்ளலின் தூயநெஞ்சம் பரிவு கொள்கிறது; அவர்களில் ஒருவராகத் தம்மை நிறுத்துகின்றார்; இறைவன்பால் முறையிடுகின்றார்.

2161.

     வருகணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த
          மலக்கூடென் றறிஞரெலாம் வருந்தக் கேட்கும்
     அருகணைத்துக் கொளப்பெண்பேய் எங்கே மேட்டுக்
          கடைத்திடவெண் சோறெங்கே ஆடையெங்கே
     இருகணுக்கு வியப்பெங்கே வசதி யான
          இடமெங்கே என்றுதிரிந் திளைத்தேன் அல்லால்
     ஒருகணத்தும் உனைநினைந்த துண்டோ என்ளை
          உடையானே எவ்வகைநான் உய்யும் ஆறே.

உரை:

     மலக்கூடமாகிய இவ்வுடம்பு வரும் கணத்தில் வாழுமோ, வாழாமல் இறந்துபடுமோ என்ற ஐயத்துக்கு இடமாய், நிலையா இயல்புடையதாய் உளது என அறிஞர் பலரும் மனம் வருந்தியுரைக்கின்றார்கள்; என்றாலும், அவரது அறிவுரையைக் கேட்டுத் தெளிந்தொழுகுவோர் பெரும்பாலும் இல்லை; பலரும்போலப் 'பெண்ணெங்கே? சோறெங்கே? ஆடையெங்கே? கண்கவரும் காட்சி எங்கே? வசதியான இடம் எங்கே?' என்று நாளும் பலவிடத்தும் திரிந்து உடலும் உள்ளமும் இளைத்தேனேயன்றி, ஒரு கணமேயும் உன்னை நினைந்திலேன்; யான் உய்யும் வகை யாது. எ.று.

     “வருகணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த மலக்கூடு” என்பது அறிஞர் உரை. “இன்றுளேன் நாளையில்லேன் என் செய்வான் தோன்றினேனே” என்று நாவுக்கரசரும், “நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு” என்று திருவள்ளுவரும், இவ்வாறே பலரும் உரைப்பதுபற்றிப் பொதுவாக “அறிஞரெலாம்” என்று கூறுகின்றார். அறிவார் அறிவது உலகு உடம்புகளின் நிலையாமையாதலால் “அறிஞரெலாம்” எனல் வேண்டிற்று. “எல்லாம் என்பது, எஞ்சாப் பொருட்டாய இடைச்சொல்” என்பர். சேனாவரையர். உண்பன அனைத்தும் மலமாய்க் கழிவதுபற்றி உடம்பை, “மலமாக் குரம்பை இது மாய்க்க மாட்டே்ன” (சதக. 54) என்பது காண்க. ஆராக் காதல் வேட்கையை விளைவித்தலால், பெண்ணைப் 'பேய்' என்று பேசுகின்றனர். பெண் பேய் - பெண்ணாகிய பேய். அருளறத்தின் உருவாதல்பற்றி இறைவனைப் “பெண்ணாகிய பெருமான்” என்று சான்றோர் புகழ்ந்தோத, வள்ளற் பெருமான் பெண்ணைப் பேய் என்றது பெண்ணினத்தையன்று; காமத் தீவேட்கையை விளைவித்துத் துன்பம் எய்துவிக்கும் பெண்டிரை எனப் பிரித்து அறிதல் வேண்டும். அருளுருவாகிய உமையம்மையை, “அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும் பெண்ணே மலை பெறும் பெண்மணியே தெய்வப் பெண்ணமுதே” (வடிவுரை 7) என்று அடிகளார் பாடிப் பரவுவதால் இவ்வுண்மையை நன்கறியலாம். மேடு - வயிறு. செந்நெற் சோற்றினும், வெண்ணெற் சோறு மென்மையாலும், தும்பைமலர் போலும் வெண்மையாலும் சுவைமிக்கிருப்பதுபற்றி, 'வெண்சோறு எங்கே' என வேண்டுகின்றனர். வெண்ணெல்லின் வெண்சோறு சுவை மிகவுடைமைபற்றிச் சான்றோர் “வென்ணெல் வெஞ்சோறு” (குறுந். 210) என்றும், வெண்ணிறத்தை விதந்து “வெண்ணெல் வெண்சோறு” (பதிற். 12) என்றும் புகழ்வர். ஆடைக்குத் தலைமை மென்மையாதலால், அடையொன்றுமின்றி “ஆடை” என்றார். அடைகொடாமை ஏற்றத்தை விளக்குமெனப் பேராசிரியர் (திருக்கோவை) கூறுவது அறிக. புதுப்புது அழகிய காட்சிகள் கண்களுக்கு வியப்பை விளைவிப்பதுபற்றி “வியப்பு” என்றார். வியப்பு வியத்தகு காட்சிமேல் நிற்கிறது. கண்ணிரண்டும் தனித்தனியே காண்பதில்லை யாதலால், “இருகணுக்கு” என எடுத்து மொழிந்தார். இவை யாவும் ஒருங்கே வேண்டியவாறு கிடைப்பது அரிதாதலால், தேடிப் பெறல் வேண்டுதலால், “எங்கே எங்கே என்று திரிந்து இளைத்தேன்” என மொழிகின்றார். இங்ஙனம், உண்டியையும் உடையையும், உறையுளையும், உவகைதரும் காட்சிகளையுமே நினைந்து கொண்டு திரிந்ததன்றி, இவற்றைப் படைத்தளித்து வாழ்விக்கும் பரம்பொருளாகிய உன்னை ஒருபோதும் நினையாது நன்றி கொன்ற குற்றத்துக்கு உள்ளாயினேன் என்பதற்காக, “ஒரு கணத்தும் உனை நினைந்ததுண்டோ” என்று இயம்புகின்றார். மேற்கூறிய அனைத்தும் நினது உடைமை என எண்ணாது, நன்றி கொன்றார்க்கு உய்வில்லை என அறநூல் கூறதலால், உய்தியின்மைக்கு அஞ்சுகிறேன் என்பர். “உடையானே எவ்வகை நான் உய்யுமாறே” என உரைக்கின்றார். இதனால், பொருள்களின் நிலையாமை யுணர்த்தக் கேட்டும், அவற்றையே நாடி இறைவனை நினையாது நன்றிகொன்ற குற்றத்துக் காளாயினமை கூறி, உய்யும் நெறி காட்டவேண்டுமென வேண்டுவது கருத்து என்று அறியலாம்.

     (91)