92

      92. உலக வாழ்வு பொருளைச் சார்ந்திருத்தலால், மக்கள் பொருளையீட்டுவதில் நினைவையும் செயலையும் ஈடுபடுத்துகின்றனர். பொருளுடையார் இனிது வாழ்வது எல்லோரையும் பொருட்பேற்றில் ஈர்க்கின்றது. பொருள் கிடைக்கும்போது வேட்கையெழுந்து, அதனை மேலும் பெருக்குவதில் செலுத்துகின்றது. பொருளாசை தீப்போல் நெஞ்சை வெதுப்புகின்றது. ஒன்று பத்தின் மேலும், பத்து நூறின் மேலும், நூறு ஆயிரத்தின்மேலும் ஆசை தோன்றிக் கோடிக்கணக்கில் எய்தினும் தணிவதில்லை. பொன்னும் மணியும் பொருளும் மலைபோல் குவியினும், சிறிது என்னும் உணர்வு தோன்றி மேலும் பெருக்குதற்கு ஊக்குகிறது. இவ்வகையில் பொன்னும் பொருளும் தேடி அலைகின்ற செல்வ மக்களை நோக்குகின்றார் வடலூர் அடிகள். மக்கள் மனநிலை, கருதிய பொருள் கிடைப்பினும், அது கருதிய அளவு எய்தாமை கண்டு ஏங்குவதும், இரங்குவதுமாக இருப்பதைப் பார்க்கின்றார். இங்ஙனம் பொருள்வகை மலைமலையாகப் பெருகுமாறு படைத்தருள்பவன் பரம்பொருளாகிய சிவன் என்பதை வள்ளலார் நினைக்கின்றார். பொருளை நினைந்து பெறற்கு முயன்று வாடும் உலகமக்கள், முதல்வனை நினைப்பது முறையாயிற்றே என எண்ணி, அவர்கள் சொல்லும் சொல் கருவியாகவும், செய்யும் செயல் வாயிலாகவும் ஆராய்கின்றார். அவர் நெஞ்சில் இறைவனைப்பற்றிய எண்ணமில்லாமை இனிது புலனாகிறது. பொருட்பற்றுக்கு இடம் விரிந்து கொடுக்கும் நெஞ்சம், இறைவனது அருட்பற்று நினைப்பதுமில்லை; நினைவுக்கு நெஞ்சில் இடம் தருவதும் இல்லை என்று அறிகின்றார். அவர்களின் வேறாகத் தம்மை நினைப்பவரல்லராதலால் வருந்துகிறார். பொருளாசையால் விழுங்கப்பட்ட நெஞ்சைக் கடிந்து நொந்து பாடுகின்றார்.

2162.

     பொன்மலையோ சிறிதெனப்பே ராசை பொங்கிப்
          புவிநடையில் பற்பலகால் போந்து போந்து
     நென்மலையோ நிதிமலையோ என்று தேடி
          நிலைகுலைந்த தன்றிஉனை நினைந்து நேடி
     மன்மலையோ மாமணியோ மருந்தோ என்று
          வழுத்தியதே இல்லைஇந்த வஞ்ச நெஞ்சம்
     கன்மலையோ இரும்போ செம் மரமோ பாறைக்
          கருங்கல்லோ பராய்முருட்டுக் கட்டை யேயோ.

உரை:

     பொன்மலையும் சிறிது எனப் பேராசையுற்று, நெல்லும் நிதியும் மலையளவு என்னுமாறு தேடி நிலைகுலைந்தேனேயன்றி, உன்னை நினைந்து, மன்மலையே, மாமணியே, மருந்தே என்று வருந்தியதே இல்லை; என் நெஞ்சம் கல்மலையோ, இரும்போ, செம்மரமோ, கருங்கல்லோ, முருட்டுக் கட்டையோ? என்னென்று உரைப்பேன். எ.று.

     பொன்னும் மலையளவாக வந்த போதும், அது கண்டு தணியாது சிறிதேயாம் என்று ஆசை பெருகுவது தோன்ற, “பொன்மலையோ சிறிதெனப் பேராசை பொங்கி” என்று கூறுகின்றார். இன்றும், ஆயிரம் பதினாயிரம் என ஊதியம் பெற்ற போதும், “போதுவதில்லை” என்ற சொல்லையே அது பெற்றவர் பேசக் கேட்கின்றோமன்றோ? உலக வாழ்வில் செல்வர் பலரும் போதும் என்று அமையாது பலவகையில் பலகாலும் செல்வம் பெருகுவதற்கு ஆவன நினைந்து முயல்வது காணப்படுவதால், “புவி நடையிற் பற்பலகால் போந்து போந்து” என்று வள்ளலார் புகன்று உரைக்கின்றார். அம் முயற்சியில் கருதிய அளவில் மிக்கு வந்தாலும், மேலும் பெருக வரவில்லையே என்ற ஏக்கத்தால் மனம் நிலைபெறாது அலைவது கண்டு, “தேடி நிலைகுலைந்த தன்றி” என்று கூறுகின்றார். இங்ஙனம் மலைமலையாகச் செல்வப்பொருள் உலகில் இருப்பதற்குக் காரணம் அதனைப் படைத்தளித்த முதல்வன் நீ என்று நினைத்தல் வேண்டும் என்றற்கு “உனை நினைந்து தேடி” என்று குறிக்கின்றார். ஆசை மிகுந்து பொருள் பெறுதற்குரிய செயல்களைச் சூழ்ந்தவண்ணம் இருக்கும் செல்வர் நெஞ்சு; பொன்மணியாகிவற்றைப் படைத்த முதல்வனாகிய உன்னை நினைக்க விழைவதில்லை; நினைந்து, 'மலையே மணியே மருந்தே' என்று பரவுதற்குக் கடமைப்பட்டுளது மனம்; அவ்வாறு பரவி வழிபடுவதில்லை என்பது தோன்ற, “மன்மலையே மாமணியே மருந்தே என்று வழுத்தியதே இல்லை” என்று வெளிப்பட விளம்புகிறார். மன்மலை-சலியா நிலைமையுடைமையால் இறைவனை மன்மலையே என்று புகழ்கின்றார். நிலைகுலைந்தவர்க்கு நிலை குலையாத பொருள் துணை என்ற கருத்துத் தோன்ற, 'மன்மலையே' என்று கூறுகிறார். உலகிற் கிடைக்கும் மணிகள் எளிதில் அகப்படாமல் அரிது முயன்று கண்டு சாணையிற் கடைந்து பெறும் அருமை யுடையவனவாகும்; இறைவனாகிய மணி, நினைப்பவர் மனத்தைக் கோயிலாகக் கொண்டு, அறியாமையாகிய இருள்போக்கி ஞானவொளி தந்து இன்புறுத்துவது என்றற்கு, “மாமணி” என்று வழுத்துகின்றார். தன்னைப் பெற்றவர் மனத்தில் ஆசையைப் பெருக்கும் மணி தன்பாலுள்ள குற்றம் வெளிப்பட்டவிடத்துப் பெருந்துன்பத்தை விளைவித்து மாற்று மருந்தில்லாத நோய் செய்வது போலாது, மனக்கவலை முற்றவும் போக்கி இன்பம் செய்வது பற்றி, இறைவனை, மருந்து என்று பாராட்டுகின்றார் இவ்வாறெல்லாம் நினைந்தும் சொல்லியும் வழிபடுவது இல்லை என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கின்றார். நினைத்தாலும், நினைந்து உருகுதலும் இல்லாமையை உருகாத பொருள்களோடு ஒப்பவைத்து ஆராய்கின்றாராதலால், நெஞ்சம் 'கன்மலையோ இரும்போ செம்மரமோ பாறைக் கருங்கல்லோ பராய் முருட்டுக்கட்டையோ' என்று உரைக்கின்றார். “வன்பராய் முருடு ஒக்கும் என் சிந்தை” (செத்திலா 4) என்பது மணிவாசகம். பராய்-பராய்மரம்; இதனைப் பிராய்மரம் என்று வழங்குவர். மருதம் நின்ற ஆற்றுத்துறையை மருதந்துறை எனவும், மாமரத்துறையை மாந்துரை எனவும், ஆலமரம் நின்ற துறையை ஆலந்துறை எனவும் கூறுவதுபோலப் பராய்த்துறை என்பது பராய்மரம் நின்ற துறையாதல் காணலாம், “பராய்த்துறை இருக்கை மேவிய ஈசன்” (திருநாவுக்) என்ற தொடரும் இப்பொருட்டு அரண் செய்கிறது. முருடு - வளைவு.

     இதனால் இறைவனை நினைந்து வருந்தாது பொருளே நினையும் மனத்தின் இயல்புகூறி அருள் வேண்டுவது முறை என்பது கருத்தாவது காணலாம்.

     (92)