93

     93. திருவடிப் பேற்றின் கண் அடியவர் எய்தும் இன்பநுகர்ச்சிய்யைத் தீம்பாலும் சருக்கரையும் தேனும் நெய்யும் கலந்த அமுதத்தை ஒப்புக் காட்டி, உவகை மிகுந்து, வடலூர் வள்ளலார் அதனையே மென்மேலும் நினைந்து நினைந்து, தமக்கும் அப்பேறு கிடைக்குமோ என எண்ணமிடலானார். சிவத்தின் அருளமுதம் உண்டு மகிழும் அடியார் கூட்டம் தானும் அருள்வயமாய் அதனுள் ஒடுக்கித் தம்மை அறவே யிழந்து நிற்பதை நினைக்கின்றார். அவர்பால் பிறவி வெப்பம் சிறிதுமின்றித் திருவருளின் தட்பமே மன முதலிய கருவிகளிற் பாய்ந்து குளிர்விப்பதை அறிகின்றார். தமக்கு அப் பெருமக்களின் திருக்கூட்டத்தைச் சேர்ந்திருக்கும் சிறப்பு உண்டாகுமாயின் பிறவித்தொடர்பு உண்டாக்கும் விருப்பு வெறுப்புக்களால் எய்தும் வெம்மை முற்றும் நீங்கும்; மன முதலிய கருவிகள் தண்ணியவாகி மெய்ம்மையறிவும் நாட்டம் பெறும்; திருவருள் ஞானத்தை நல்கும் புதிய உரைகளைக் கேட்கும் வாய்ப்புமுண்டாகும்; அக் கேள்வி மெய்யறிவு பெறுவித்துச் செம்மையேயாய சிவபோகப் பெருவாழ்வில் சேர்ப்பிக்கும் என்று தெளிகின்றார். மெய்ம்மை நாடியலையும் மனமும் அமைதியுற்று மௌன நிலையை மேவும். அந்நிலையில் இரவு பகல் என்று உணர்விழந்து இன்பமே துய்க்கும் பேரின்பநிலை மேலிட்டு நிற்கும். வேறு நிலைகளிற் பெறலாகும் இன்பங்கள், இருள் கலந்த ஒளிபோலத் துன்பம் விரவியிருப்பது போலின்றித் தூய இன்பமே பொருந்தியது அப்பேரின்பம்; அதனை மறுமை அம்மை எனப்படும் பத முத்திகளிலும் பெறவொண்ணாது; அத்தூய பெருநிலைப் பேரின்பத்தை இம்மையிலே பெறலாம், என்று தமது அருட்கண்ணாற் காண்கின்றார் அடிகளார். இம்மை நினைவு எழுந்ததும் தம்முடைய நிலைமை உண்ரவுக்குத் தோன்ற இறைவனை நோக்கி, “எம்பெருமானே, அத்தகைய பெருமக்கள் பெற்ற ஞானமில்லாத ஏழையேனாகிய யான், அந்த “எம்மையிலும் காணாச் சுத்த இன்ப நிலையை அடைவேனோ?” என் ஏங்கி முறையிடுகின்றார்.

2163.

     தம்மைமறந் தருளமுதம் உண்டு தேக்கும்
          தகையுடையார் திருக்கூட்டம் சார்ந்து நாயேன்
     வெம்மையெலாம் தவிர்ந்துமனங் குளிரக் கேள்வி
          விருந்தருந்தி மெய்யறிவாம் வீட்டில் என்றும்
     செம்மையெலாம் தரும் மௌன அணைமேற் கொண்டு
          செறிஇரவு பகலொன்றும் தெரியா வண்ணம்
     இம்மையில் எம்மையினும் காணச் சுத்த
          இன்பநிலை அடைவேனோ ஏழை யேனே.

உரை:

     அருளமுதம் உண்டு தம்மை மறந்து தேக்கெறியும் தகையுடையார் கூட்டத்தைச் சார்ந்து, வெம்மை தவிர்ந்து மனம் குளிர்ந்து கேள்வி விருந்தருந்தி மெய்யறிவு என்னும் வீட்டில், மௌனமாகிய அணை மேல் இருந்து, இரவு பகல் அறியாவண்ணம் எம்மையிலும் காணலாகாத சுத்த இன்ப நிலையை ஏழையேன் இம்மையிலே அடைவேனோ அருள் புரிவாயாக. எ.று.

     அருளமுதம் தேக்கெறியும் அளவு உண்டவழித் தமது கருவி காரணங்கள் யாவும் பசுத்துவம் இழந்து பதிகரணங்களாக மாறுதலால், அருளமுதம் உண்டு தம்மை மறந்து தேக்கும் தகையுடையார் என்று உரைக்கின்றார். தேக்கெறிதலை 'ஏப்பமிடல்' என்பர். உண்டது மீண்டும் தொண்டையளவு வெளிவருமாறு ஏப்பமிடுதலை நூல்கள் தேக்கறிதல் என்று குறிக்கின்றன. மெய்யுணர்வும் தவவொழுக்கமுமாகிய தகைமையுடையார்க்கன்றித் தேவதேவனாகிய சிவத்தின் அருளாரமுதம் பெருதல் அரிது; அரிது பற்றியே அருளாளரைத் தகையுடையார் என்று குற்க்கின்றார். அவரது கூட்டம், சேர்ந்தாரை ஞானவொழுக்கங்களால் உயர்விக்கும் சிறப்புடையதாதலால், அதனைத் 'திருக்கூட்டம்' என்று சிறப்பிக்கின்றார். அதனைச் சார்ந்த வழி எய்தும் பயனை விளக்கவந்த வடலூர் அடிகள், வெம்மை தவிர்தல், மனம் குளிர்தல், கேள்வி விருந்தயர்தல், மெய்ஞ்ஞான வீட்டைதல், மௌனியாதல், சுத்த இன்பநிலை பெறுதல் என முறையாக வுரைக்கின்றார். பிறவி வேட்கை நீங்கித் திருவருள் நாட்டம் எய்தினாலன்றி அதற்குரிய முயிற்சி பிறவாது; வேட்கை விருப்பத்தின் மேனின்று கருவி கரணங்களை வெதுப்புவதுபற்றி 'வெம்மை' எனப்படுகிறது. “வெம்மை வேண்டல்” என்பது தொல்காப்பியம். அவ் வேட்கை மெய்யுணர்வால் தணியும் இயல்பிற்று; அதனால் மெய்ந்நெறியுடையார் திருக்கூட்டம் மேவுதல் முதற்படி என்றற்குத் “திருக்கூட்டம் சார்ந்து” என்றும், அதனால் வேட்கை வெம்மை தணிதலும், அதன்வழி நின்று வெதும்பிய மனம் குளிர்ச்சி எய்துவதும் பற்றி, “மனம் குளிர்” என்றும் கூறுகின்றார். மீண்டும் வேட்கைத் தீ வந்து தாக்காமைப் பொருட்டு ஞான நாட்டம் கொண்டு மெய்யுணர்வுடைய மேலோர் உரைக்கும் ஞானவுரைகளைக் கேட்டுத் தெளிவும் ஊக்கமும் எய்தும் திறத்தைக் “கேள்வி விருந்தருந்தி” என்றும் உரைக்கின்றார். மெய்யுணர்வு பெருகப் பெருகப் புதிய புதிய ஞானப் பொருள்கள் பெறப்படுதலின் “கேள்வி விருந்து” என்று குறித்தருளுகின்றார். “புணர்ந்தாற் புணருந்தொறும் பெரும்போகம் பின்ணும் புதிதாய் வளர்கின்றது” (கோவை 9) எனத் திருவாதவூரடிகள் கூறுவர். மெய்யுணர்வின் எல்லை இன்பப் பெருவீடு என்றற்கு “மெய்யறிவாம் வீட்டில்” என்று விளக்குகின்றார். பொய்ம்மை கொடுமை முதலிய குற்றங்களின்றுச் செம்மையேயாய சிவம் நிலவும் வீடாதலால், வீடடைந்தார்க்கு எய்துவது சிவம் தழைக்கும் மோன நிலை என ஞானசம்பந்தர் முதலிய பெரியோர் கூறுப. அங்கே கருவி கரணங்களின் செயற்பாடு ஒழிதலால் செயற்குரிய இரவுபகலெனச் செறியும் காலக் கூறுகள் இல்லை; காலதத்துவம் என ஒன்றிருப்பினும் புலனாகா தொழிதல்பற்றி, “செறி இரவு பகல் ஒன்றும் தெரியாவண்ணம்” என்று கூறுகின்றார். இன்பமும் துன்பமும் விரவிய உலகியலில் இரவு பகலெனப் பிரிந்தியங்கும் காலக்கூறுகள், துன்பத்தில் தோய்கின்றபோது நெடிது பெருகிக் காட்டுதல் போலாது இன்ப நுகர்ச்சியில் தமது இருப்புப்புலனாகாவாறு விரைந்து கழியுமாயின், “இன்பமே எந்நாளும் துன்பமில்லை” என்ற பேரின்ப நிலையில், காலக்கூறு சிறிதும் தெரியாதென்பது விளங்குதற்கு, “இரவு பகல் ஒன்றும் தெரியாவண்ணம் இம்மையிலே சுத்த இன்பநிலை அடைவேனோ” என்று இயம்புகின்றார். காலம் கடந்த இன்பச் சுழல் என்பது தோன்றத் தானே “சுத்த இன்பநிலை” என்றது. தத்துவநூல்களும் காலம் கலந்தவற்றை அசுத்தம் என்றும், காலத்துக்கு அப்பாற்பட்ட சிவதத்துவத்தைச் சுத்தமென்றும் சொல்கின்றன. இம்மையுலகுக்கு மேற்பட்டதை மறுமை என்றும், அதற்கு மேற்பட்ட முத்திபதங்களை அம்மை என்று கூறும் வழக்கை உட்கொண்டு, ஆங்கும் இன்றி அதற்கும் மேலதாகிய பரமுத்தி நிலையை எம்மையிலும் காணாச் சுத்த இன்பநிலை என்றும், அதனை இம்மையிலே பெறுவது கருத்து என்றற்கு “இம்மையிலே அடைவேனா” என்றும் எடுத்துரைக்கின்றார். அறிவுடைமை உடைமை; அஃது இன்மை ஏழைமை என்பர். சுத்த இன்பம் பெறுவிக்கும் உண்மையறிவு தம்பால் இன்மை தெரிவித்தற் பொருட்டே “ஏழையென்” என வள்ளலார் இறைவன்பால் வெளியிடுகின்றார். இதனால், அருளமுதம் உண்டு தேக்கெறியும் அடியார் கூட்டத்தின் சேர்க்கைபால் உள்ள ஆர்வத்தைப் புலப்படுத்துவது பயன்.

     (93)