94

           94. பொருட்பற்று மிகுந்து, செய்வினைகளில் பிழை பெருக்கித் துன்புறுவது மக்கள் வாழ்வில் பெரும்பான்மையாக இருக்கிறது; சிறியவர் பிழை செய்வதும், பெரியவர் பொறுப்பதும் ஒரோருபால் காணப்படுகின்றன. எனினும், பிழைகள் குறைவதின்றிப் பெருகியவண்ணம் இருக்கின்றன. பெருகுவதற்குக் காரணம் யாதென எண்ணுகின்றார். உலக வாழ்வு நல்கும் சிற்றின்ப மயக்கம் ஒரு காரணமாகத் தோன்றுகிறது. “பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்கால், பழியதனைப் பாராதே படலம் என்கண் மறைப்பித்தாய்” என்று நம்பி ஆரூரர் கூறுவதால், பொறுத்தலும் பிழைவளர்தற்குக் காரணமெனத் தெரிகிறது. இவ்விரண்டினுள் பின்னது மிகச் சிறுபான்மையாகவும்,முன்னது பெரும்பான்மையாகவும் உள்ளன. உலகிடைத் தோன்றும் மயக்கம், வாழ்வை நன்முறையில் நுகர்ந்து அறிவுவிளக்கம் எய்துதற்காகவே என்பது புலனாகிறது. இயல்பாகவே உயிரறிவிற் படிந்திருக்கும் மலமும், அது காரணமாக வந்துள்ள மாயாகாரியத்தின் மயக்கமும் உயிர்கள் பிழைமிகச் செய்தற்கு ஏதுவாக இருக்கின்றமை கண்டு, ஒரளவு பொறுப்பது பரம்பொருட்கு இயற்கையறமாகிறது. இதுபற்றியே அருட்செல்வர்கள், பிழைத்து பொறுத்தல் வேண்டும் என இறைவனைப் போற்றி செய்கின்றனர்; “வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை நின் பெருமையினால் பொறுப்பவனே” என்றும், “பொறுப்பரன்றோ பெரியோர் சிறுநாய்கள் தம் பொய்வினையே” என்றும் மணிவாசகர் உரைக்கின்றார். இறைவன் உலகவர் செய்பிழையைப் பொறுத்தாண்டது பெரியோர் வரலாறுகளால் அறியப்படுகிறது. தமது வாழ்வையும் வடலூர் அடிகள் எண்ணிப் பார்க்கின்றார். தாம் செய்த பிழைகளும் அவற்றைப் பொறுக்குமாற்றால் அறிவுக்கு விளக்கம் தந்து இறைவன் ஆட்கொண்ட திறமும் நினைவில் எழுகின்றன. இங்ஙனம் பிழை பொறுத்தாண்ட பெருமான், பிழைசெய்து பேதுற்றத் துன்புறும் தனக்கு அருளாமையை எண்ணி வருந்துகிறார். முன்னம் செய்த பிழையைப் பொறுத்து, உண்மையுணர்ந்து தெளிவுபெறுமாறு அருள்ஞானம் வழங்கிய நீ, இன்று அது செய்யாமை ஏன் என்று வினவுகின்றார். முன்னைப் பிழையை மனம் கொள்ளாமையால் பொறுத்தனை; இப்போது மனம் கொண்டு என்பால் வெறுப்புற்றாய் போலும் என விண்ணப்பிக்கின்றார். வெறுக்கும் அளவு யான் பிழை செய்ததில்லை; மறைகள் யாவும், திருமால் முதலிய தேவர்களின் இனம் நெடும் பிழை ஆயிரம் செய்ய, அனைத்தையும் பேரருளால் பொறுத்து ஆண்டாய் என்று உன்னைச் சிறப்பித்துக் கூறுகின்றன. அவ்வாறாயின்  என் சிறு பிழையை மனங்கொண்டு வருந்தச் செய்வது கூடாது என வடலூர் வள்ளல் முறையிடுகிறார்.

2164.

     அடியனேன் பிழையனைத்தும் பொறுத்தாட் கொண்ட
          அருட்கடலே மற்றேங்கும் அரசே இந்நாள்
     கொடியனேன் செய்பிழையைத் திருவுள் ளத்தே
          கொள்ளுதியோ கொண்டுகுலங் குறிப்ப துண்டோ
     நெடியனே முதற்கடவுட் சமூகத் தோர்தம்
          நெடும்பிழைகள் ஆயிரமும் பொறுத்த மாயை
     ஒடியநேர் நின்றபெருங் கருணை வள்ளல்
          எனமறைகள் ஓதுவதிங் குனைத்தா னன்றோ.

உரை:

     அடியேன் பிழைகளைப் பொறுத்து ஆட்கொண்ட அருட்கடலே, மன்றோங்கும் அரசே, இந்நாள் கொடியேன் செய்யும் பிழையே உள்ளத்தே கொள்கின்றாயோ? கொண்டு குலம் பேசுவது உலகில் இல்லையன்றோ? நெடுமால் முதலிய தேவர் கூட்டம் ஆயிரம் பிழை செய்த போதும் பொறுத்து, மாயை தரும் மயக்கம் கெடுமாறு நேர்நின்று அருள் புரியும் பெருமான் என மறைகள் ஓலமிட்டு உரைப்பது உன்னையேயன்றோ. எ.று.

     அடியேன், இறைவனாகிய நின் திருவடியையே நினைந்தும் பேசியும் பணிசெய்தும் ஒழுகுபவன். அடியனாய் இருந்து பிழை செய்தபோது அப்பிழை யனைத்தும் பொறுத்து ஆள்வது அடிமைக்குப் ஆண்டானுக்கும் உள்ள உறவுபற்றிய தாகுமேயன்றி, அருளுடைமையாகாது என்பது புலப்பட, “அடியனேன் பிழையனைத்தும் பொறுத்து ஆட்கொண்ட அருட்கடலே” என்று அவலிக்கின்றார். நீதிமன்றத்திருந்து முறை செய்யும் அரசனாதலால், யார் மாட்டும் கண்ணோடாது முறை செய்வதன்றோ செயற்பாலது என்றற்கு, “மன்றோங்கும் அரசே” என்று கூறுகின்றார். அன்று அடியனாகிய யான் இன்று கொடியனானேன் என்பது தோன்று, “இந்நாள் கொடியனேன்” என்று கூறுகின்றார். கொடியேன்-அடியனாம் நேரிய நெறியினின்று உலகியல் மயக்கத்தால் மாறினவன். நெறியினின்றும் கோடியதற்குக் காரணம், நின் அருள்வழி தோற்றுவிக்கப்பட்ட உலகியலின் மயக்கமாதலால், அதுபற்றி யான் செய்த பிழையை நீ மனம் கொள்வது கூடாது என்றற்குக் “கொடியனேன் செய்பிழையைத் திருவுள்ளத்தே கொள்ளுதியோ” என்று கூறுகின்றார்; கொள்ளமாட்டாய் என்பது குறிப்பு. கொள்ளாதொழிவது யாங்ஙனம் எனின், கொண்டு குலம் பேசுவது, அறமன்று; குலம் பேசுவது, குணம் குற்றம் கண்டு குணத்தைக் கொள்வதும் குற்றத்தைத் தள்ளுவதுமாகும்; கொள்ளுதற்குமுன் செய்ய வேண்டியதைக் கொண்டபின் செய்வது முறையன்று; “நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே” (நற். 32) என்று சான்றோர் கூறுவர். திருவள்ளுவரும், “நட்டபின் வீடில்லை நட்பாள்வார்க்கு” என்பர். பிழைசெய்தவழிச் செய்தவரின் தொடர்பு நோக்காது, பிழையின் வன்மை மென்மை கண்டறிவது மண்ணரசுக்கேயன்றி, விண்ணரசுக்கும் உரிய அறம் எனின், விண்ணகத் தேவருள் நெடுமால் முதலிய தேவர்களை உள்ளிட்ட கூட்டம் பெரும்பிழைகளை ஒன்றிரண்டன்றி ஆயிரம் செய்த காலை, அவற்றைப் பொறுத்து, அவர்க்காக நஞ்சையுண்டு அமுதம் அளித்தாய் என்றும், “பிரமனும் மாலும் பிரானே நான் என்னப், “பிரமன்மால் தங்கள் பேதைமையாலே, பரமன் அனமாய்ப் பரந்துமுன் நிற்க அரன் அடிதேடி அரற்றுகின்றாரே” (திருமந். 372) என்றும், பிழை பொறுத்து அமுதளித்ததை; “பொறுத்தான் அமரர்க்கு அமுதருளி நஞ்சுண்டு” (திருநா) என்றும் தமிழ் மறைகள் உரைக்கின்றன; இங்ஙனம் பிழை பொறுத்தும், மயங்கியவழி விளக்கம் அளித்தும் உதவுபவன் என மறைகள் உரைப்பதால், என் பிழையை மனங்கொள்ளலாகாது என வற்புறுத்துவாராய், 'நெடியனே முதற்கடவுட் சமூகத்தோர் தம் நெடும் பிழைகள் ஆயிரம் பொறுத்து மாயை ஒடிய நேர்நின்ற பெருங்கருணை வள்ளல்' என மறைகள் ஒதுவது இங்கு உனைத்தான் அன்றே” என உரைக்கின்றார். நெடியன் என்றது, திருமாலை. அவர் மாவலின்முன் குறளுருவிற் சென்று ஓங்கி உலகளந்தமைபற்றி, “நெடியன்” எனப் படுகின்றார். மாயையால் மனமருட்சி எய்தி அறிவு இருண்டபோது, தீத்திரளாய் அடிமுடியறியாத ஒளிப்பிழம்பாய் நின்ற மருட்சியும் இருட்சியும் போக்கினமை தோன்ற, 'மாயை ஒடிய நேர் நின்ற கருணை வள்ளல்' என்று கூறுகின்றார். இவ்வாறு மறைகள் உன் கருணையை விரித்து விளங்கவுரைத்தலால் நீ இனி மறைத்தலாகாது என்றற்கு, “மறைகள் ஒதுவது இங்கு உன்னைத்தானே” என்று உரைத்து மகிழ்கின்றார்.

     இதனால், அடியனாய் ஒழிகியபோது என் பிழையைப் பொறுத்தது போல, நெறிகோடிக் கொடியனாய்ச் செய்த பிழையையும் உள்ளத்திற்கொள்ளாது பொறுத்தருள வேண்டும் என்பது கருத்து.

     (94)