95
95. பன்னாள் பல்கால் இறைவனை வேண்டியும் திருவருட் செல்வம் எய்தவில்லை என ஏங்குகின்றார்
நம் வடலூர் வள்ளல். இறைவனை நோக்குகின்றார். அவன் உலகப் பொருள்களிற் கலந்து ஒன்றாயும்,
உயிர்களொடு உடனாயும் இருப்பதாக ஞானிகள் உரைப்பதை எண்ணி உலகுயிர்களைக் காண்கின்றார்.
அவனைக் காண முடியவில்லை. அறிவுக்கண் இருளால் மறைப்புண்டு எங்கும் இருளே காண்கிறது. அறிவு ஆராயுங்கால்,
ஐம்பொறிகளும் தத்தமக்குரிய புலன்களைக் காட்டிச் செடியும் கொடியும் மரமும் தழையும் பின்னிக்
கிடக்கும் காடு போல் காட்சி தருகின்றன. அவற்றிடையே உயிரறிவு மயக்கமுற்று, மேற்செல்லும் நெறியறியாது
மழுங்கித் தடைப்படுகிறது; உடனிருந்து கண்டும் காட்டியும் உதவும் பரம்பொருள் தன்னைக் கைவிட்டு
நீங்கிவிட்டதாக நினைக்கின்றார். உடனிருந்து தாய்போல் தலையளிக்கும் தலைவன் எங்கே
போயிருப்பான் என்ற கேள்வி நெஞ்சில் எழுகிறது. பேரருட் பிழம்பாகிய அப்பரம்பொருளைத்
தன்னினின்றும் நீக்கிக்கொண்டு செல்லக்கூடியது யாதாகும் என எண்ணுகின்றார். காலம் நியதி என்ற
தத்துவங்கள் அவர் மனக்கண்ணில் எழுகின்றன. உயிர்கள் நுகர்தற்குரிய வினைப்போகங்களை வகுத்து
அவ்வவற்றுக்கும் அவற்றின் வழிநின்று அப் பயன்களை நுகர்விப்பவனாதலின், இறைவன் அவற்றின்பின்
செல்கிறான்போலும் எனக் கருதுகின்றார். அவன் காலங்கடந்த கடவுளாதலின், காலம் அவன் பின்னதாவதன்றி
முன்னின்று அவனைக் கொண்டு செல்லும் மதுகையுடைத்தன்று என்ற உணர்வு எழுகிறது. காலத்தைவிட்டு நியதியைப்
பார்க்கின்றார். இன்ன காலத்தில் நுகர்வதற்குரிய போகம் இத்துணைஎன வரையறுப்பது நியதி. அஃது
இல்வழி உயிர்கட்குப் போகம் ஊட்டலாகாது; போகமூட்டுபவனாதல்பற்றி, அதன் பின் செல்கிறான்போலும்
என்று துணிகின்றார்; ‘இறைவனே என்னைக் கைவிட்டு நியதியின்பின் போய் மறைந்தனையே! இதுதான்
நின் அருள் வழங்கும் வள்ளன்மையோ’ என்று கேட்கின்றார். இறைவன் செயல் உலகவர்க்கு விளங்குதற்
பொருட்டு நன்கறிந்த உவமையொன்றை எடுத்தாளுகின்றார். இருள் நிறைந்த இரவில், ஒரு காட்டுவழியே,
கருத்தில்லா தன் சிறுவனைக் கொண்டு செல்லுகின்றாள் ஒரு தாய். கடுங்காட்டுள் நுழைந்தவுடன், சிறுவனைக்
கைவிட்டு வேறொருத்தன் பின்னே செல்வாளாயின், அவளை என்னென்பது? அவளுடைய செயல் போலவன்றோ
உன் செயல் இருக்கிறது என்று கூறலுறுகின்றார். அஃதோர் இனிய பாட்டாய் வெளிவருகிறது.
2165. கண்மயக்கும் பேரிருட்டுக் கங்குற் போதில்
கருத்தறியாச் சிறுவனைஒர் கடுங்கா னத்தே
உண்மயக்கம் கொளவிடுத்தே ஒருவன் பின்போம்
ஒருதாயைப்போல் மாயைஇருள் ஓங்கும் போதின்
மண்மயக்கம் பெறும்விடயக் காட்டில் அந்தோ
மதியிலேன் மாழாந்து மயங்க நீதான்
வண்மையுற்ற நியதியின்பின் என்னைவிட்டே
மறைந்தனையே பரமேநின் வண்மை என்னே.
உரை: பேரிருட்டுக் கங்குற் பொழுதில் கருத்தறியாத சிறுவனைக் கடுங்காட்டில் விடுத்து ஒருவன் பின்போய் மறையும் ஒரு தாயைப்போல் மாயையாகிய இருள்நிறைந்த காலத்தில், புலன்களாகிற கடுங்காட்டில் யான் கலங்கி மயங்க, என்னைக் கைவிட்டு நியதியின்பின் நீ சென்று மறைந்தனையே, பரம்பொருளே! என்னே நின் வள்ளன்மை இருந்தவாறு. எ.று.
பேரிருட்டுக் கங்குல் - மிக்க இருள் சூழ்ந்த இரவுக்காலம். திணிந்த இருளாயினும் சிறிது கழியின், கண்ணொளி எழுந்து ஒரளவு தெளிவு நல்குவதுண்டு; கண்ணின் ஒளியும் எழாவாறு மயக்கும் பேரிருள் என்பது தோன்றக் “கண் மயக்கும் பேரிருட்டுக் கங்குல்” என்று தெரிவிக்கின்றார். தன்னைக் கொண்டேகும் தாயின் கருத்தையறிந்து கொள்ளும் வன்மையில்லாத சிறுவன் என்னும் பொருள் விளக்கக் “கருத்தறியாச் சிறுவன்” என்று சொல்லுகின்றார். 'துணையாயினார் கைவிட்டால், தானே நெறிநினைந்து செல்லும் திறமையில்லாத சிறுவன்' என்றும் இதற்குப் பொருள் காணலாம்; ஆனால் சிறுவன் என்ற சொல் தானே சிந்தித்துச் செயல்படும் அளவு மனவளர்ச்சியில்லாதவன் என்பதைக் காட்டுவதால், அது பொருத்தமாகத் தோன்றவில்லை. சிறுவனது சிறுமைக்கு ஏற்றவாறின்றிக் கருத்தறிந்த பிறரும் புகவரிதான காடு என்பது விளங்கக் “கடுங்கானம்” என்று காட்டுகின்றார். கைவிட்ட வழிச் சிறுவன் உள்ளம் மயக்கம் அடையவது இயல்பாதலால், “உள்மயக்கம் கொள” என்றும், தாய்மைக்கு மாறாக நெஞ்சில் ஈரமின்றிக் கைவிடுவது எத்தாயும் செய்ய இயலாத ஒன்று; அதனையும் செய்வது போல என்னைக் கைவிட்டாய் என்று பொருண்மை புலப்பட “விடுத்து” எனவும் விளம்புகின்றார்.
இவ்வாறு, ஒரு தாயும் செய்யாளெனின், செய்பவளும் உண்டு என்பது தோன்ற, “ஒரு தாய்” என்றும், இங்ஙனம் ஏதிலான் ஒருவன் பின் செல்லும் தாய் இதுபோலும் செய்கைகளைப் புரிதற்கு அஞ்சாள் என்று கருத்துப்புலப்பட “ஒருவன் பின்போம் ஒருதாய்” எனவுரைக்கின்றார். மயையை 'இருள்' என்று கூறுகிறார், திருவருள் பெறும் நெறி புலனாகவண்ணம் மறைத்தல் பற்றி; மாயையாவது உயிரறிவுக்குள் கலந்திருக்கும் மலவிருளைப் போக்குதற்குத் துணைபுரியும் ஒளியுடைய சக்தி; அது திருவருளால் உலகமாகவும், உலகியல் நுகர் பொருளாகவும் அவற்றை உண்டு வளரும் உடம்பாகவும் உடம்பினுள் அருவமாய் இயக்கும் மண முதலிய கருவிகளாகவும் காரியப்பட்டிருக்கிறது. இவை மலவிருள் நீக்கத்துக்குத் துணை புரிவனவாயினும், இன்பம் தந்து அறிவை மயக்குவனவாகவும் இருப்பதால், “மாயை இருள்” என்று உரைக்கின்றார். அது ஓங்கும் காலம் - உலக போகங்களை நுகரும்போது அந்நுகர்ச்சி தரும் இன்பத்தில் மயங்கி அதனுள் அழுந்திக் கிடக்கும் காலமாகும். விடயக்காடு - கண் காது மூக்கு முதலிய ஐந்து பொறிகளின் வாயிலாக எழும் ஐவகை ஆசைப்பெருக்கு. அவை மண் பெண் பொன் என்ற முன்றனுட் புகுத்தித் தெளிவெய்த மாட்டாவாறு மயக்குவதை “மன்மயக்கம் பெறும் விடயம்” என்று விளம்புகின்றார். மன்மயக்கம் என்றதனால், ஏனைப் பெண்மயக்கம், பொன்மயக்கம் என்று இரண்டும் கொள்ளப்படும். மதி-இயற்கையறிவு; “மதிநுட்பம் நூலோடு உடையார்” (குறள். 636) எனத் திருக்குறள் கூறுவது காண்க. அது மலமாயைகளால் மறைப்புண்டு கிடப்பதுபற்றி “மதியிலேன்” என்று கூறுகிறார். மாழ்தல் -கூர்ப்பின்றி மழுகுதல், மழுகியவழி மயக்கம் உடனிகழ்தல் பற்றி, “மாழாந்து மயங்க” என்பாராயினர். நியதி தத்துவம்; உயிர் நுகர்தற்குரிய போகங்கள் தன்னளவில் நிறைந்திருப்பதால் “வன்மையுற்ற நியதி” எனச் சிறப்பிக்கின்றார். நியதி நல்கும் போக நுகர்ச்சியைப் பின்னின்றுதவும் திருவருள் மறைத்துவிடுவதால், “நியதியின் பின் மறைந்தனையே” என்று வருந்துகின்றார். மாயை விடயம் நியதி முதலிய எல்லாத் தத்துவங்கட்கும் மேலாய்த் தத்துவாதீதமாய் இருப்பது பற்றி, இறைவனைப் “பரமே” என்று குறிக்கின்றார். தான் தந்த போகப்பொருளைப் பெறும் உயிர், நுகருங்கால் தன்னைக் கண்டவழி நுகர்வதின்றி, இருளிலே கிடந்து இடர்ப்படும் எனத் திருவுள்ளம் கொண்டு மறைந்து நிற்றலும் வள்ளன்மையே என்ற கருத்துப் புலப்பட “நின்வண்மை என்னே” என்றும் இசைக்கின்றார்.
இதனால், மாயாகாரியமான உலகவிடயங்களில் ஒவ்வொன்றிலும் அதுவதுவாய் மயங்கிப் போகம் நுகர்வித்து உய்தி பெறுவிக்கும் இறைவனது வள்ளன்மையை ஒராற்றல் வியந்து பரவுவது கருத்து என அறிதல்வேண்டும். நுகர்விப்பதில் 'இரக்கமற்ற ஒரு தாய்போல்' என உவமம் கூறியது வஞ்சப்புகழ்ச்சி வாய்ப்பாடு. (95)
|