96

      96. உடம்புக்கு சிறு ஊறுண்டாயினும் வருந்துகிறோம்; ஊறு செய்வதொன்று காணின் அஞ்சுகிறோம். இதுபோலவே உயிர்க்குத் தீங்கு வருமோ என அஞ்சுகிறோம்; வருந்துகிறோம். இவற்றிற்கு என்ன காரணம் என நினைக்கின் உடம்பின் மேலும் உயிர் மேலும் உள்ள பற்றே என்பது விளங்கும். இவ்வாறே, ஈட்டிய பொருட்கும் ஈட்டுகின்ற பொருட்கும் தடையும் ஊறும் உண்டாயின், நாம் அஞ்சுதற்கும் வருந்துதற்கும் பொருளின்பால் உள்ள பற்றுக் காரணமாகிறது. இவ்வாறே பொருள் பற்றியும் புகழ் குறித்தும் அறிவு வேண்டியும் வினை மேற்கொள்ளும்போது, இடையூறும் இடையீடும் தோன்றுங்கால் நெஞ்சு வருந்துகிறது; அச்சமுண்டாகிறது. இதற்குக் காரணம், வினை பயக்கும் நலங்களின்பால் நமக்குள்ள பற்றேயாகும். பொருளும் வினையும் இல்லையாயின் வாழ்வில்லை. இப்பற்றுக்கெல்லாம் அடிப்படை வாழ்க்கை மேலுள்ள பற்றுத்தான் என்பது சிந்திப்பவர்க்குச் சிறந்து தோன்றும். வாழ்தல் வேண்டி ஈன்று புறந்தந்து ஓம்பும் தாயின்பாலும், அறிவும் ஒழுக்கமும் தந்து வாழ்விக்கும் தந்தைபாலும் நமக்குப் பற்று உண்டாகிறது. பின்பு அறிவு தந்தும், பொருளுதவியும் துணைபுரிந்தும் வாழச்செய்கின்ற பிறிரிடத்தும் நமக்குப் பற்றும் அன்பும் உண்டாகின்றன. இங்ஙனம் பலவகைப் பற்றுக்களால் நாம் வாழ்வில் பிணிக்கப்பட்டிருக்கிறோம்.

      இவ்வண்ணம் பிணிப்புண்பதால் நம் நினைவும் சொல்லும் செயலும் நேரிய வழியின் இனிது செல்ல முடியாமல் பிழைபடுதற்கு வாயப்புண்டாகிறது. மனம் மொழி மெய் என்று மூன்றன் செயல்களிற் பிழை செய்கிறோம். பிழை தோன்றியவிடத்து, இளமையில் தாய் தந்தையரும், பின்னர் மனைவிமக்களும், நண்பர்களும் பெரியோர்களும் பொறுக்கின்றனரெனினும், இப் பிழைகளை யாரும் விரும்புவதில்லை. சிறு பிழைகள் குற்றமாய் வளர்ந்து மிக்க துன்பம் எய்துதற்குக் காரணமாகின்றன; அது பற்றியே யாரும் பிழை கண்டவிடத்து எடுத்துரைக்கின்றனர். 

      அன்றியும், நாம் பிழையை மாத்திரம் செய்வதில்லை; நல்லதும் செய்கிறோம். எனினும், பிழைதான் மற்றவர் கண்களுக்கு விளங்கித் தோன்றுவது, அதனால், யாரும் பிழை காண வல்லவர்களாக உள்ளனர். 

      பிழை காண்பவரும் நம்மோடு தொடர்புடையவரும் இல்லாதவரும் என இரு திறத்தினராவர். தொடர்பில்லாதவர் பிறர்பால் பிழைகாணின் “நமக்கு என்” என்று நினைந்து ஒதுங்கிவிடுவர்; நமது பிழை பெருகிக் குற்றமானபோது வரும் துன்பத்தைப் பிறர் எண்ணமாட்டார்கள். தொடர்புடையவர்களாயின், உடனே எடுத்துக்காட்டித் திருந்தச் செய்வர். நம்பாலுள்ள தொடர்பால், எத்தகைய பிழையும் நம்மிடத்தே உண்டாதல் கூடாதென்றும் கருத்துட்கொண்டு, நண்பர்கள் பிழை கண்ட வண்ணம் இருப்பர்; இல்லாவிடத்தும் நம் பிழை அவர்கட்கு எளிதில் நன்கு தெரிந்துவிடும். அவருள் பெற்றதாய் பிழை காணப்பொறாது வருந்தவள். பெற்ற பிள்ளை மாசு மறுவற்று குணம் செயல்களையுடையனாதல் வேண்டுமெனக் கனவிலும் நனவிலும் கருதிய வண்ணமிருப்பது தாய்மையின் இயல்பு. 

      தாய்மையின் செயலுக்கும் பெரியதொரு தடையுண்டு. பெற்ற குழந்தையின்பால் அவட்குள்ள அன்பு மிகவும் பெரிது. தன் உடல் பொருள் உயிர் என்ற மூன்றின்பால் உள்ள பற்றைவிடத் தன் குழந்தை பால் அவட்குள்ள பற்றும் அன்பும் அளவிடற்கரியன. அந்த அன்பு அவளுடைய அறிவுக் கண்ணை மறைத்துவிடும். தம்மால் அன்பு செய்யப்பட்டார் யாவராயினும், அன்பரது அன்பு அவரது அறிவை மறைப்பது பொது இயல்பு. “வாரம் பட்டுழித் தீயுவும் நல்லவாம், தீரக் காய்ந்துழி நல்லவும் தீயவாம், ஓரும் வையத் தியற்கையன்றோ” எனத் திருத்தக்கதேவர் கூறுவர். தாய் அன்புருவாக இருப்பவளாதலால் பெற்ற பிள்ளைகள்பால் காணப்படும் பிழைகள் யாவும் காணமுடிவதில்லை. பெரும்பிழைகளும் குற்றங்களுமே காணப்படும். அதனால், கட்குடி முதலிய குற்றம் “ஈன்றாள் முகத்தேயும் இன்னாது” என்று திருவள்ளுவர் கூறுகின்றார். எனவே, பெற்ற பிள்ளைகளின் பிழை காணமாட்டாளாகிய தாயும்பிழை காண்பதும் அதுகண்டு வருந்துவதும் உண்டு என்பது தெளிவாகும்.           

      இங்ஙனம் பெற்றுப் பேரன்பு செலுத்திப்பேணி வளர்க்கும் நற்றாயும் பிழை காண்பாளாயின், பிறர் காண்பதில் தடையேது? பற்றில்லார் காண்பாராயின், அதனை எடுத்துக்காட்டாது அது மேலும் வளருமாறு காணார் போல ஒதுங்குவர். பற்றுடையாருள்ளும், பிழைகாணுமிடத்து அதனை எடுத்துரையாது பெட்பின்றி வெறிதே நீங்குவோர் பலர். அவருடைய பற்று வீனேயாகும். அவரிடத்திற் பற்றுக்கொள்வதும் பயனில் செயலேயாகும் என்று வடலூர் வள்ளல் காண்கின்றார்; பற்றுடையோர், எம்பால் நிகழும் பிழைகளை எடுத்துக் காட்டித் திருத்தி உலகியல் வாழக்கைக்கு ஏற்ற செந்நெறியைக் காட்டுகின்றனர்; அதுவும் உலகியலுக்குரிய பற்றுக்களைப் பெருக்கி அவற்றின்கண் அழுந்துமாறு செய்தலால், அவரும் பற்றுக்களை இறுகப்பற்றும் நெறியின ராகின்றார்கள். இம் பற்றுக்களில் பற்று வையாமல், நின்பால் பற்று வைக்கும் பெரியோரே வேண்டப்படுகின்றனர். அப் பெருமக்களின் பற்றையும் பலவேறு வகையால் ஆராய்பவன் சிவபெருமான்; இதனைத் திருத்தொண்டர் வரலாறுகள் மிகத் தெளிவாகக் காட்டுகின்றன. ஆகவே அதுவும் அரியதொன்று. 

      இவ்வாறு பற்றற்ற நின் பற்றினைப் பற்றற்குள்ள அருமைப்பாட்டினையும் பிழைசெய்யும் எனது எளிமை நிலையையும் எண்ணுகிறபோது, பிழைபொறுக்கும் நின் பெருங்கருணையைப் பெறுவதுதான் செய்யத்தக்கது என்று துணிந்து திருவடியையே மிகவும் விரும்புகிறேன்; என் பிழையைப் பொறுத்தருள்க என்று வள்ளலார் வேண்டுகிறார்.

2166.

     நற்றாயும் பிழைகுறிக்கக் கண்டோம் இந்த
          நானிலத்தே மற்றவர்யார் நாடார் வீணே
     பற்றாயும் அவர் தமைநாம் பற்றோம் பற்றில்
          பற்றாத பற்றுடையார் பற்றி உள்ளே
     உற்றாயுஞ் சிவபெருமான் கருணை ஒன்றே
          உறுபிழைகள் எத்துணையும் பொறுப்ப தென்றுள்
     பொற்றாளை விரும்பியது மன்று ளாடும்
          பொருளேஎன் பிழையனைத்தும் பொறுக்க வன்றே.

உரை:

     தாயும் பிழை குறிக்கக் கண்டோம்; ஆகவே, மற்றவருள் யாவர் பிழை நாடாதொழிவர்; வீணே பற்றாயும் அவர்களை நாம் பற்றோம்; பற்றில் பற்றாய் பற்றுடையாரைப் பற்றி அவர் பற்றினுட் புகந்து அதனை ஆராய்பவன் சிவபெருமான்; அவன் கருணையொன்றே பிழைகள் எத்தனையும் பொறுப்பது, என்று அறிந்தே உன் பொற்றாமரை போலும் திருவடியை அடியேன் விரும்பியது; ஆதலால் என் பிழைகள் யாவையும் பொறுத்தருள்க. எ.று.

     நற்றாய்-பெற்ற தாய், பெற்ற பிள்ளையின் நலம் ஒன்றையே நோக்குவது பற்றித் தாய் என வெறிது மொழியாது நற்றாய் என்று வள்ளலார் உரைக்கின்றார். தாயர் ஐவகையர் என்போரும் பெற்ற தாயை நற்றாய் என்பர். “சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்” என்று சான்றோர் கூறுதலால், பெற்ற பிள்ளைபாலும் பிழைகாணும் காட்சி தாய்க்குண்டென்பது காணலாம், நால் நிலம்-பாலையொழிந்த குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்ற நான்கு, சான்றோர் “நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப், படுதிரை வையம் பாத்திய பண்பே” என்பது காண்க. நடுவணது பாலைத்திணை. தாய்மை அறிவு அன்பால் மறைக்கப்படினும் பிழை காணற்படுவதாய் “பிழை குறித்தல் கண்டோம்” என்று கூறுகின்றார். அன்பில்லாத் மற்றவர், பிழையே காண்பர் என்றற்கு, “மற்றவர் யார் நாடார்” என்று உரைக்கின்றார். பற்று ஆயும் அவர், நம்பாலுள்ள பற்றுக் காரணமாகப் பிழைகளைக் கண்டு காட்டித் திருத்துபவர். அவர் பற்றும், பிழை நீக்கி உலகியற் பற்றுக்களில் பிணிப்புறுத்தல் பற்றி, வீணே; அதனால் “அவர்தமை நாம் பற்றோம்” எனத் தெளியவுரைக்கின்றார். எனவே, உலகியற் பற்றுக்களில் பற்றற்றார் பற்றே வேண்டுவதாயிற்று, அப் பற்றற்றார், பற்றற்ற இறைவன் பற்றை உடையவராவர்; இறைவன் பற்றை அவர்கள் பற்றுவது உலகியற் பற்று விடற்கே யாதலால், அதுவும் காரணம் பற்றியுண்டான பற்றாகிறது; அதனால் அஃது இறைவனால் ஆராயப்படுகிறது. இவ்வுண்மை தோன்றவே “பற்றாயும்” என்று தெரிவிக்கின்றார். மக்களிடத்தே நினைத்தல், பேசுதல், செய்தல் என்ற யாவும் யாதானுமொரு காரணம்பற்றி நிகழ்கின்றனவேயன்றி வேறில்லை; ஆதலாற், பற்றும் ஆராயப்படுகிறதென்பதாம். இறைவன் திருவடிக்கண் பற்றுக்கொண்டு விடாப்பிடியாய் ஒழுகிய திருநீலகண்டர் முதலிய தொண்டர் எல்லாருடைய உண்மைப் பற்றையும் சிவபெருமான் பல்வேறு உருவிற் சென்று ஆய்ந்தமை திருத்தொண்டர் புராணத்தால் உலகறிந்தது. அதனால், அதனை எடுத்தோதாமல் “உள்ளே உற்று ஆயும் சிவபெருமான்” என்று பொதுவுண்மையாகப் புகன்று மொழிகின்றார். பற்றின் அடிப்படையில் மக்கள் வாழ்வு பிழைமலிந்து கிடக்கின்றமையால் பிழைபொறுக்க வேண்டுவதொன்றே நாம் செயற்பாலது என்பது விளங்க; “என் பிழையனைத்தும் பொறுக்க” என வேண்டுகின்றார். பற்றில் பற்றாத பற்றுடையார் பற்றையே பற்றி உள்ளுற்று ஆயும் சிவபெருமான் பிழை பொறுப்பானோ எனின், அவன் கருணையொன்றே எத்துணைப் பெரும்பிழை செய்யினும் பொறுத்தாற்றும் பண்புடையது என்றும், அது நினைந்தே அவனுடைய திருவடியை விழைந்து பரவுவதாகவும் கூறுகின்றார். பொற்றாள்-பொற்றாமரைபோலும் திருவடி; என்றும் புலராது யாணர்நாள் கழியினும் நின்று ஒளிதிகழும் நீர்மையது பொன்தாமரை. மன்றுள் ஆடும் பொருள் - ஞான சபையில் ஞானநாடகம் புரியும் ஞானத்திரளாய் நின்று திகழும் பரம்பொருள்.

     இதனால், தாயினும் சிறந்த நிலையில் பிழைபொறுக்கும் பண்புடைமைபற்றிச் சிவபெருமானை நமது பிழை பொறுத்தருள்க என வேண்டுவதே நாம் செய்யத்தக்கது என்பது கருத்தாதல் காண்க.

     (96)