98
98. சிவனடியே சிந்திக்கும் பெருமக்கள் நினைவு, வடலூர்
வள்ளலின் திருவுள்ளத்தில் மேம்பட்டு நிற்கிறது. அவர்களுடைய திருவுருவம் மனக்கண்ணில் காட்சி
தருகிறது. அவருடைய புறத் தோற்றத்தில் ஊன்றிய அறிவு அவருடைய உடற்குள் ஊடுருவிச் செல்கிறது. அங்கே
உள்ளத்தாமரையில் சிவத்தின் அருளுருவம் தெரிகிறது. அதனைக் கண்டு பரவும் மனக்கண் அன்பர் மனத்தை
அம்பலமாக்கி, அதன்கண் இறைவன் நின்றாடும் திருக்கோலத்தைக் கண்டு பரவுகிறது; அந்நிலை
சிறிது மாறுகிறது. உலகியல் காட்சி கண்ணெதிரே தோன்றுகிறது. வள்ளலாரைச் சூழ்ந்து கொண்டு பலர்
இருக்கின்றார்கள். அவர்கள்பால் கடுத்த பார்வையும் மடித்த வாயும் வெடித்த சொல்லும் நிகழ்கின்றன.
அவர் மனத்தே அன்பில்லை; மாறாக வன்புப் பண்பு மேலோங்கி நிற்கிறது. அவர்களின் வன்மைமிகுதி
நோக்கத் தாம் மிகச் சிறியராய் இருக்கின்றார். அவர்களிடம் வன்பு மிக்கிருப்பத் தம்பால்
ஒருவகை மயக்கமிருந்து கையறவு செய்கிறது. இக்காட்சியிற் கருத்துச் சென்று கலந்ததும் மெய்யன்பர்
திருவுள்ளத்திற்கண்ட சிவத்தோற்றம் மறைந்தொழிகிறது. ‘ஐயோ, மறைந்தனையே’ என்று அரற்றுகின்றார்.
இந்நிலையில் சிவம் தோன்றித் தனது இன்பவடிவைக் காட்டுகிறது. அதனை ஞானிகளாய் உள்ளவர் கண்டு
இது துரியவடிவம் என்று சுட்டிக் காட்டுகின்றார்கள். அவ்வடிவம் துன்பவடிவுடைய மக்கள் தேவர் என்ற
இருவகை உயிர்களின்றும் வேறாய்ப் பிரிந்து விளங்குவதையும் காட்டுகின்றார்கள். இங்ஙனம் பிரிந்து
இது துரியத்தே விளங்கும் இன்ப வடிவம் என்பதை எண்ணுகின்ற வள்ளற்பெருமான் இப்பெருமக்கள் இதனை
எங்ஙனம் கண்டு நமக்கு உரைக்கின்றார்கள் என்று தமக்குள் ஆராய்கின்றனர். “துரியர் இன்பவடிவம்
என்பதை அறியவேண்டுமாயின், அறிபவரும் துரியத்தில் இன்ப வடிவெடுத்தாலன்றிக் காணமுடியாது; ஆகவே,
தமது ஞானக்கண்களால் துரியநிலையில் வயங்கும் இன்ப வடிவத்தைக் கண்டு மகிழும் இம் மெய்யன்பர்
யாவரும் இன்பவடிவம் பெற்றவராவர்; என்னளவில் யான் அவ்வடிவு பெற்றேனில்லை, யான் என்ன
சொல்வேன்” என்று மனம் கனிந்து தமது சிறுமைக்கு வருந்துகின்றார்.
2168. அன்பர்திரு உளங்கேரயி லாகக் கொண்டே
அற்புதச்சிற் சபையோங்கும் அரசே இங்கு
வன்பரிடைச் சிறியேனை மயங்க வைத்து
மறைந்தனையே ஆனந்த வடிவோய் நின்னைத்
துன்பவடி வுடைப்பிறரில் பிரித்து மேலோர்
துரியவடி வினனென்று சொன்ன வெல்லாம்
இன்பவடி வடைந்தன்றே எந்தாய் அந்தோ
என்னளவென் சொல்கேனிவ் வேழை யேனே.
உரை: அன்பர் உளம் கோயில் கொண்டிருந்தே சிற்சபையில் ஒங்கும் அரசே! வன்பரிடை என்ன மயங்கவைத்து மறைந்தாய்; ஆனந்த வடிவுடையோய், துன்ப வடிவுடைய பிறரினின்றும் வேறாகப் பிரித்துத் துரியவடிவினால் இப்பெருமான் என்று மேலோர் நின்னைச் சொன்னவற்றை நோக்கின், அவர் தாமும் இன்னவடிவுடன் நின்று கண்டதனாலன்றோ? என்னளவில் அஃது இயலாமையால் யான் யாது சொல்லவல்லேன், யான் மெய்யுணர்வில்லாது ஏழையாதலால். எ.று.
உலகுயிர்களிடத்தில் முறையே ஒன்றாயும் உடனாயும் இருக்கும் பரம்பொருள் மெய்யன்பர் உள்ளத்தை இடமாகக் கொண்டவன் என்று சான்றோர் பலரும் கூறுவது உலகறிந்த செய்தி; இங்ஙனம் அன்பர் உள்ளத்திற் கோயில் கொண்டருள்வதோடு அந்நிலையிலே தில்லையில் கண்டோர் உள்ளம் களிகொள்ளுமாறு இன்ப நடம்புரியும் கூத்தப்பெருமானாகவும் உள்ள சிறப்பை எடுத்து மொழிகின்றார். அதுபற்றி “அன்பர் திருவுளம் கோயில் கொண்டே அற்புத சிற்சபை ஒங்கும் அரசே” என்று கூறுகின்றார். ஒரு காலத்தில் ஓரிடத்தில் இருப்பதும் அதே கணம் பிறதோரிடத்திலும் இருப்பதென்பதும் இயலாத செயல். கால இடங்களின் எல்லைக்குட்பட்ட பொருட்கு இவ்விதி அமையும்; கால இடங்களின் கட்டுக்கு அப்பாற்பட்ட பரம்பெருளாதலின், சிவனை “அன்பர் உளம் கோயிலாகக் கொண்டே சிற்சபையில் ஓங்குகின்றான்” என உரைக்கின்றார். அன்பர் உளம் இறைவன் தங்குதற்குரிய ஞான மணமும் தூய்மையும் சிறப்பும் உடையதென்றற்கு “அன்பர் திருவுளம்” என்று கூறுகின்றார். ஓரிடத்தில் ஒருகாலத்தில் காணப்படுவது, அதே காலத்தில் பேரவையில் பலரும் காண விளங்குவது அற்புதமாகலின், “அற்புத சபையில் ஓங்கும் அரசே” என்ற இயம்புகிறார். மேலும் அவன் ஓங்கித் தோன்றும் சபை உலகியற் பொருட்சபையாகாது மேலான ஞானசபை என்றற்குச் “சிற்சபை” என்று சிறப்பிக்கின்றார். உலகியல் அரசியற்சபைகளில் அறிவுடையோரேயன்றி ஏனையோரும் இருப்பர்; இறைவனது சிற்சபையில் ஞானிகளே நிறைந்து விளங்குவதும், அங்கு வீற்றிருக்கும் முறைசெய்யும் அரசனாகிய இறைவன் ஞானவுருவினனாய் ஓங்குதலும் விளங்கச் “சிற்சபை யோங்கும் அரசே” என்று இசைக்கின்றார். அவர் கூட்டத்தில் இருத்தி ஞானத் தெளிவுற்று இன்புறச் செய்யாது அன்பில்லாதவர் கூட்டத்தில் இருத்தி மயங்கச் செய்தது முறையாகாதே என்றும், மயங்கவைத்துடன் யான் காணாவகை மறைவதும் ஆகாது என்றும் விளம்புவது தோன்ற, “சிறியேனை மயங்க வைத்து மறைந்தனையே” என்று கூறுகின்றார். நினது வடிவம் ஆனந்த வடிவாதலின், சிறுமையால் மயங்கினும் இன்பம் பெறுதல் ஒழியாது என்றற்கு “ஆனந்த வடிவோய்” என்று சொல்லுகின்றார். நனவு கனுவு சுழுத்தி என்ற நிலைகளிலன்றித் துரியத்தில் மேலோர் கண்டு, இப்பெருமான் துரியக் காட்சியில் புலப்படும் துரிய வடிவினன் என்று சொல்லுகின்றார்கள். துரிய வடிவம்; இன்ப வடிவம் அவ்வடிவத்தைத் துரியத்திற் காண்போர் தாமும் இன்பவடிவின ரானாலன்றிக் காணுமாறில்லை; கண்டு உரைத்தலின், அங்ஙனம் உரைப்பவர் இன்ப வடிவடைந்தவர் என்பது திண்ணம். அப் பெருமக்கள் சொல்லக் கேட்கும் பேறுபெற்ற நான் துரியத்தேயிருந்து இன்பவடிவு பெற அருளுதல் வேண்டும். அதனை அப் பெருமக்கட்கருளிய நீ என்னளவில் அருளாதொழிவதை நின் திருவருள் என்று சொல்வதா, அருளாமை என்பதா, “என் சொல்கேன்” என்று சொல்லி, ஏழையாகிய எனக்கு இதனையேனும் தெரிவித்தல் வேண்டும் என்பராய் “ஏழையேன்” என்று முறையிடுகின்றார். இதனால் தமக்கும் அன்பர்க்குச் செய்யும் நல்லருள் வழங்கி இன்பவாழ்வு பெற அருளல் வேண்டுமென்று கேட்டுக்கொள்வது பயன். (98)
|