9
9. சஞ்சலம்
பொங்குவதால் நெஞ்சம் திண்மையிழந்து மெலிவுறுகின்றமை கூறிய வள்ளற்பெருமான், மெலிந்தழிவதால்
வரும் இடர்ப்பாட்டை எண்ணுகின்றார். துன்ப அலைகளால் உள்ளமும் உணர்வும் மென்மையாய்
பெருந்துயருழப்பதைப் பெருங்காற்றால் அலைப்புண்ணும் பஞ்சியின்மேல் வைத்துப் பஞ்சிபடும் பாட்டினும்
பெரும்பாடு படுவதாக உரைக்கின்றார். அப்பாட்டினை எடுத்துச்சொல்லக் கருதுகின்றார். சொற்களுக்கு
அடங்காமல் அது பெருகி நிற்கிறது; எத்துணைப் பெரிய பொருளையும் தன்னகத்தே அடக்கிக் காணும்
ஆற்றல் நெஞ்சுக்குண்டு. ஆயினும், உலக நடை பயக்கும் துன்பத்தின் தொல்லை நினைவின் எல்லை
கடந்து நிற்பது கண்டு நெஞ்சால் எண்ணப்படாத இயல்பை நோக்குகின்றார். எண்ணும் எண்ணத்துக்கும்
சொல்லும் சொல்லுக்கும் எட்டாமல் அவற்றிடையே கலங்கி மீளும் திறம் புலப்படாது மெலியும் நிலையை
உணர்கின்றார். இந் நிலைதான் திருவருள் புரிதற்கு ஏற்றது; ஏன் துயரப்படுகின்றாய்? என்று உரைப்பதுபோலும்
நோக்கினும் உய்தி பெறலாம் என்று ஒரளவு ஊக்கமுண்டாகும்; ஒரு குறிப்பும் இன்றாயின் எனக்குச் செயல்வகை
ஒன்றுமே இல்லையாம் என்று உன்னுகின்றார். இப்பாட்டினைப் பாடுகின்றார்.
2179. நான்படும் பாடு சிவனே
உலகர் நவிலும்பஞ்சு
தான்படு மோசொல்லத் தான்படு
மோஎண்ணத் தான்படுமோ
கான்படு கண்ணியின் மான்படு
மாறு கலங்கிநின்றேன்
ஏன்படு கின்றனை என்றிரங்
காய்என்னில் என்செய்வனே.
உரை: சிவபெருமானே, நான் படும் பாடு உலகவர் உரைக்கும் பஞ்சி படும்பாடு. அதனை இத்தகையது எனச் சொல்லவும் முடியாது; இவ்வளவிற்று என எண்ணவும் முடியாது; காட்டின்கண் வேட்டுவன் வைத்த கண்ணியிற் பட்டு வருந்தும் மான்போல உளம் கலங்கி விடுபட்டேகும் விரகு காணாது நிற்கின்றேன்; இப் பொழுதில்தான் நீ போந்து “ஏன் வருந்துகின்றாய்” என்று இரங்கியருளல் வேண்டும்; இல்லையாயின் யான் ஒன்றும் செய்கில்லேன். எ.று.
மிக்க துன்பத்தால் அலைபடுவோர் அதனை வெளிப்படுத்தற்குப் பஞ்சி படும்பாட்டை உவமத்தில் வைத்துரைப்பது மரபு. பஞ்சிக்குள்ளிருக்கும் கொட்டைகளை நீக்குமிடத்தும், அப் பஞ்சியில் ஒட்டியிருக்கும் தும்பி தூசுகளைப் போக்குதற்கும், இழைத்தற்கு ஆகாத பகுதியை விலக்குதற்கும் பன்முறையும் பலவேறு கருவிகளைக் கொண்டு அடிப்பர். இவ்வகையில் பஞ்சி மெல்லிய நூலாவதற்குள் படும்பாடு எண்ண முடியாதாகும். நெய்தற்றொழில் பண்டைநாளில் மிக்க செல்வாக்குப் பெற்றிருந்தமையின் அதுபற்றிக் கூறுவன மக்களிடையே நன்கு பரவியிருந்தன. அதனாற்றான் “உலகர் நவிலும் பஞ்சு” என்று குறிக்கின்றார். நவிலுதல் - நன்கு பயிலுதல்; “வினை நவில் யானை” (பதிற்.) என்றாற்போல. நான் படும்பாடு என்ற தொடர், ஆற்றலால் உடல்படும் பாட்டின்மேல் நிற்பதால் ஏனைக் காரணங்களால் உணர்த்தப்படாமை தோன்றச் “சொல்லத்தான் படுமோ எண்ணத்தான் படுமோ” என்று குறிக்கின்றார். துன்ப மிகுதியைப் பொதுவாக உடல் வாய் உள்ளமாகிய கரணங்களால் அளவறிந்து உணர்த்த மாட்டாமையைக் கூறிய வள்ளலார், துன்பத்தின் இயல்பைக் காட்டிடத்தே வேட்டுவன் வைத்த கண்ணியிற் பட்டுக் கலங்கி நிற்கும் மான் ஒன்றின் நிலைமேல் வைத்துக் “கான்படு கண்ணியில் மான்படுமாறு கலங்கி நின்றேன்” என்று கூறுகின்றார். கானும் கண்ணியும் மானும் உவமங்களாய் நின்று உள்ளத்தின் உணர்வைச் சிந்தனையிற் செலுத்துவனவாகும். இருள்படப் பொதுளி முள்ளும் தூறும் கற்களும் நிறைந்து தீங்கு செய்யும் உயிரினம் உலவும் கானம் உலகியல் வாழ்வையும், ஒன்றையொன்று தொடர்ந்து அகப்பட்டதைப் பின்னிப் பிணிக்கும் கண்ணி (வலை) காரணகாரியத் தொடர்ச்சியாய்ச் செய்தாரைப் பிணிக்கும் வினைவகைகளையும், உணவு நாடி ஓடிக் கண்ணியிற் சிக்கித் துன்புறும் மான் அறிவறியாது ஆக்கைக்கே இரைதேடி அலமரும் மக்களுயிரையும் சுட்டி நிற்கின்றன. கண்ணியிற் பட்ட மான் கால் பிணிப்புண்டு கலங்கி நின்று ஒழிவதுபோல மக்களுயிர் வினைச்சூழலிற் சிக்கிப் பிணிப்புண்டு வினை விளைவினின்றும் நீங்கும் திறமின்றி வினைக்குள்ளே நிற்பது விளங்க, “கான்படு கண்ணியில் மான்படுமாறு கலங்கி நின்றேன்” என்று அடிகளார் கையற்றுரைக்கின்றார் ஒக்கலும் மக்களும் உடன்வாழ உழக்கும் உழப்பே உலகியலாதலால், உலகியல் வாழ்வை “ஒக்கல் வாழ்க்கை” என்று கண்ட சங்கச் சான்றோர், “அதள் எறிந்தன்ன நெடுவெண் களரில், ஒருவன் அலைக்கும் புல்வாய்போல, ஒடியுய்தலும் கூடுமன், ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே” என்று ஓலமிடுகின்றார். வினை வலையிற் சிக்கி மேல் இயங்கமாட்டாத நிலையைக் கண்டு, அருள் மேற்கொண்டு, “ஏன் படுகின்றனை” என ஒரு சொல்லாற் கேட்பினும் அலையும் மனம் ஆறுதல் பெறும்; அதனைத் தானும் திருவுள்ளம் இரங்கிக் கேட்கின்றாயில்லை; என்பாராய்; “ஏன்படுகின்றனை என்று இரங்காய்” என்று மொழிகின்றார். சாமம் தானம் முதலிய உபாயங்களாற் பெறப்படுவதன்று திருவருள்; அதனால், இரங்காய் எனின் யான் செயலாவது ஒன்றுமில்லை என்று தெரிவிக்கலுற்ற அருளொளி வள்ளலார் “என் செய்வனே” என்று இயம்புகின்றார்.
இதனால் உலநடைத் துன்பத்தின் இயல்பைக் காட்டி அதனிடைக் கலங்கி நிற்கும் மக்களுயிரின் மாட்டாமை புலப்படுத்தி இரங்கியருள்க என இறைவனை வேண்டுவது பயன் என உணர்க. (9)
|