14

         14. இறைவன் தூய அறிவு வடிவினன் எனச் சாத்திரங்களும் தோத்திரங்களும் சொல்லுகின்றன. திருவள்ளுவரும் “வாலறிவன்” எனத் தெரிவிக்கின்றார். உமாபதிசிவனார் “அகரவுயிர்போல் அறிவாகி எங்கும் நிகரில் இறை நிற்கும் நிறைந்து” என்று தெளியக் கூறுகின்றார். ஆகவே, அறிவுருவாகிய பரம்பொருள் உயிர்களின் அறிவின்கண் விளங்கி அருள்புரிவன் என்பது சான்றோர் கருத்தாக அமைந்து உளது. “அமுதே ஊறிநின்று என்னுள் எழுபரஞ்சோதி” என மணிவாசகர் உரைத்தருள்வது நம்மனோர் ஐயமின்றி ஏற்கச் செய்கிறது. இக் கருத்தின் உறுதிப்பாட்டால் வடலூர் வள்ளல் தம்மை ஆராய்ந்து நோக்குகின்றார். மக்களினம் அனைத்தையும் தம்மோடு சம நிலையில் ஒப்ப நோக்கும் ஆன்மநேய ஒருமைப்பாட்டால் உயர்ந்தவராதலால் அவரது நோக்கம் மனித வினம் அனைத்தையும் ஒருசேர நோக்கும் இயல்பிற்றென்பது மறக்கப்படாததொன்று. மண்ணகத்தில் தமது வாழ்நாள் ஒவ்வொரு கணமும் கழிந்து வாழ்வெல்லை குறைந்துகொண்டே யிருக்கிறதென்பதைச் சிறிதும் நினையாமல் மக்கள் வீணாகக் கழிப்பது தெரிகிறது; இறைவன் திருவடியை இக்கால வெல்லைக்குள் ஒருபொழுதேனும் ஒருமுறையேனும் காண்பவர் இல்லை; கண்டோரையேனும் கண்டதுண்டோ எனினும் அது தானும் இல்லை. காண்பது எங்ஙனம் என்பார்க்கு முன்னைச் சான்றோர் அன்பாகிய கண்ணாற் காணவேண்டும்; அன்பே பரம்பொருளாகிய சிவம் எனத் தெரிவித்துள்ளனர். அன்பு கருவியாதல் அறிந்தும், யான் சிவன்பால் அன்பு கொள்கின்றேனில்; அன்பு செய்தல்வேண்டின், எவ்வுயிர்க்கும் தீங்கு நினையாச் சிந்தையும், எத்துணைத் துன்பம் எய்தினும் பிறரை நோவாது தாங்கிக் கொள்ளும் மனத்திண்மையுமாகிய தவம் வேண்டும் என, அறவோர், அறிவிக்கின்றனர். அதனை அறிந்தும் அறிவறியாப் பருவத்தேயே ஒளவை மூதாட்டியும் பிறகும் அறிவுறுத்தினர்; அறத்தைச் செய்வதோ செய்ய விரும்புவதோ இல்லை. அதனை வாயாலும் யான் உரைக்கின்றேனில்லை. இக் குறைகள் எல்லாம் என்பால் இருக்கக் காண்கின்றேன். குறை காணப்பட்டவிடத்து அக் குறையுடையார்க்கு நாணம் தோன்றும்; எனக்கு அந்த நாணமும் இல்லை. மக்களை விலங்கினின்றும் பிரிப்பது நாணமாகிய பண்பே. நாணம் இல்லாமையால் கடையனாக இருக்கின்றேன் என்று மனம் மிக நொந்து வருந்துகிறார். இவ் வருத்தம் மக்களனைவர்க்கும் உண்டாதல் வேண்டும் என்ற ஆர்வத்தால் எளிய இனிய சொற்களாற் பாடுகின்றார்.

2184.

     வீணே பொழுது கழிக்கின்ற
          நான்உன் விரைமலர்த்தாள்
     காணேன்கண் டாரையுங் காண்கின்றி
          லேன்சற்றும் காணற்கன்பும்
     பூணேன் தவமும் புரியேன்
          அறமும் புகல்கின்றிலேன்
     நாணேன் விலங்கிழி யாணே
          யெனுங்கடை நாயினனே.

உரை:

     வீணே பொழுது கழிக்கின்ற நான் உன் தாள் காணேன்; கண்டாரையும் காண்பதில்லை; காண்பதற்கு வேண்டும் அன்பும் உடையவனல்ல; அன்பால் தவம்புரிவதில்லை; அறத்தை விரும்புவதில்லை; நாணம் சிறிதும் இல்லேன்; விலங்கினத்தும் இழிந்த நாயினத்தைச் சேர்ந்தவனாவேன். எ.று.

     பயனுண்டாகக் கழிக்காத காலத்தை 'வீண்பொழுது' என்பது வழங்கியில் மரபு. கழிக்கும் திறத்தைப் பிறிதோரிடத்தில், ஆறாந் திருமுறைச் சிவபுண்ணியப் பேறு என்னும் திருப்பதிகத்தில், “மாலிலே மயங்கி மண்ணிலே அநித்த வாழ்விலே வரவிலே மலஞ்சார் தோலிலே மாயைவைத்து வீழ்பொழுது தொலைக்கின்றார்; மதத்திலே சமயவழக்கிலே ஆசை மருட்டிலே இருட்டிலே மறவாக்கத்திலே மனத்தை வைத்து வீண்பொழுது கழிக்கின்றார்” என வள்ளலார் தொகுத்துரைக்கின்றர். திருவடியுண்மையும் அதன் நலமும் திருவடிக்காட்சி என்றும், திருவடிஞானம் என்றும் சாத்திரங்கள் கூறும் காட்சிப் பெருமை தோன்ற, “உன் விரைமலர்த்தாள் காணேன்” என வுரைக்கின்றார். எளிமையும் அறியாமையும் உடையனாதலால், திருவடிகாண்பது இயலவில்லையாயின், திருவடிகண்ட ஞானிகளைக் காண்பது எளிது என்பர்; அதனையும் யான் செய்யாது வீண்பொழுது கழிக்கின்றேன் என்பாராய்க் “கண்டாரையும் காண்கின்றலேன்” எனக் கூறுகின்றார். திருவடிகண்ட சிவஞானச் செல்வர்களை உடல் சுமந்து கண்களை திறந்து காண்பதினும், காண்டற்கு முதலாக மனத்தில் காணவேண்டுமென்ற அன்பு கொளல் எளிது; அதனையும் செய்திலேன் என்றற்கு, “காணற்கு அன்பு பூணேன்” எனப் புகல்கின்றார். சிவஞானிகள்பால் அன்பு கொள்வதும், அவர்களைக் காண்பதும் தவத்தாலன்றிக் கைகூடாதென்பர்; “அம்மான் திருவருள் பெற்றவரல்லால் இம்மாதவத்தின் இயல்பறியாரே” (திருமந். 1625) எனத் திருமூலர் தெரிவிக்கின்றார். தவம் பொருள்மேலும் அறம் இன்பத்தின் மேலும் நிற்பன; நேரிய முறையிற் செயலுருவாவது அறம்; அதனைப் பயன் எய்துங்காறும் அயராது தொடர்ந்து செய்வது தவம். இங்ஙனம் தவமும் அறமும் ஒன்றையொன்று சார்ந்து நிற்பதுபற்றி, “தவமும் புரியேன்” என்றவர், “அறமும் புகல்கின்றிலேன்” என அவல முறுகின்றார். செய்தற்குரிய அறவினை செய்யப்படாத போதும், செய்யுமிடத்துக் குறைபடினும், செய்முதலாகிய ஆண்மையுடையானுக்கு நாணம் உண்டாதல் இயல்பு. தவமும் அறமும் செய்யாமையால், நாணம் உறுதற்குரிய யான் அதனைக் கொண்டிலேன் என்பவராய், நாணேன் என நவில்கிறார். மக்கட்கு நாணம் பிறவிப் பண்பு; அஃதில்லையாயின் அவர் மக்களாயினும் விலங்கினமேயாவர். விலங்கினுள்ளும் உயர்நிலையில் வைத்துப் பேணப்படினும், நாய் தனது இழிபண்பு; நீங்கள் ஒரொருகால் இழிசெயலைக் செய்தே தீரும்; அதனால் அது கடைப்பட்ட இனமாகக் கருதப்படுகிறது. யானும் அதுபோல நாணமின்றியிருத்தலால் யான் “விலங்கு இழி ஆணே எனும் கடைநாய் இனனே” என எடுத்துரைக்கின்றார். விலங்குகளில் இழிந்து கடைப்பட்ட ஆண்நாய் இனத்தவன் என்ற பொருள்பட 'விலங்கிழி ஆணே எனும் கடை நாய் இனனே' எனப் பழித்துரைக்கின்றார். இனம் என்னாமல், இனன் என்றது இனத்தவன் எனப் பொருள் ஒலித்தல் வேண்டும் என்றற்காம்.

     இதனால் திருவடி காணும் முயற்சியும், கண்டாரையேனும் காணும் செய்கையும், அதற்குரிய அன்பும், அவ்வண்புக்கு இன்றியமையாத தவமும் அறமும் மேற்கொள்ளாமல் வீண் பொழுது போக்கியதற்கு நாணி, நாணமில்லாமல் நாயிற் கடையினமாக குற்றத்தை விரித்துக் கூறித் தன்னை அருள்கொண்டு அறிவும் செய்கையும் தரவேண்டுமென முறையிடுவது இத் திருப்பாட்டின் கருத்து.

     (14)