15
15. திருவருளின்
ஞானவொளி யில்லையாயின் தமது நிலை உலகில் என்னும் என வள்ளலார் நினைக்கின்றார். உடலின்கண்
உறையும் உயிர்மெய் வாய் முதலிய அறிகருவிகளைக் கொண்டு உலகப் பொருள்களை அறிவதும், வாய்
கை முதலிய செயற்கருவிகளைக் கொண்டு செய்வன செய்வதும் என்ற இரண்டையும் செய்கிறது. இவ்விரண்டிற்கும்
உரிய இருவகைக் கருவிகளும் ஒழுங்காகத் தொழில்புரிதல் இன்றியமையாதது. கண்ணொன்றைக் காண வேண்டுமாயின்
அதன் உறுப்புக்கள் அத்தனையும் செவ்வையாக இயங்கவேண்டும்; ஒன்று கெடினும் கண்கள் பார்த்தலாகிய
செயலைச் செய்யமுடியாது. அவற்றைச் செம்மையாக இயக்குவது திருவருள். இவ்வாறே கை கால்கள் முதலியன
தொழில்செய்வதற்கு அவற்றின் உள்ளுறு உறுப்புக்கள் நன்கு இயலவேண்டும்; இவ்வாறே உடற்குள்
இருக்கும் உறுப்புக்கள் அத்தனையும் ஒழுங்குறச் செயல் புரிந்தாலன்றி உயிர் உடலைக் கொண்டு வாழ
இயலாது. உடம்பினுள் இருக்கும் உறுப்புக்களும் கட்புலனாகாது உடலின் கண் உள்ளமன முதலிய கருவிகளும்
கலை முதலிய உட்கருவிகளும் முறையாக இயங்கவேண்டும். இவை யாவும் தத்தமக்குரிய பணிகளைப் புரியுமாறு
செய்வது திருவருள். இவ்வாறு உடல் வாழ்வுக்கு அருளின் துணை மிக இன்றியமையாதிருப்பது உணர்வார்,
அதனையே நினைவர்.
இத் திருவருள் உடலினுள் ஒவ்வோர் உறுப்பையும் அணு அணுவாக இயக்குவதுடன் வேறோரு நல்ல உதவியையும்
புரிகிறது. உலகியற் பொருள்களின் குணஞ்செயல்களை அறியும்போது அறிவு சோர்வையடைதலுண்டு; தொழில்
செய்யும் தொழிற்குரிய செயல்வகை விளங்காமல் திகைப்படைவதும் உண்டு. அக் காலங்களில் இறைவன்
அருளால் உண்மையொளி தோன்றி நன்னெறி காட்டும். காட்டாவிடின் பலவேறு தவறுகளும் பிழைகளும்
குற்றங்களும் தோன்றித் துன்பம் விளைவிக்கும். குற்றங்களின் நீங்கிக் குணமானவற்றை அறிந்து
நடக்க இயலாதாகும். அதனை நினைந்தே வள்ளலார் “இறைவனே, நின் திருவுள்ளம் இரங்கி அருளாதாயுன்,
யான் நெறியறியாது காட்டில் திரிந்து கெடுவேனோ, கடலில் வீழ்ந்து மடிவேனோ” என்று கையாற்றுப்
பாடுகின்றார்.
2185. நானோர் எளிமை அடிமையென்
றோநல்லன் அல்லனென்று
தானோநின் அன்பர் தகாதென்பர்
ஈதென்று தானினைந்தோ
ஏனோநின் உள்ளம் இரங்கிலை
இன்னு மிரங்கிலையேல்
கானோடு வேன்கொல் கடல்விழு
வேன்கொல்முக் கண்ணவனே.
உரை: முக்கண்ணனே, நான் ஒர் எளிய அடிமையென்று இகழ்ந்தோ, நல்லவனல்லன் என்று கருதியோ, எனக்கு அருளும் இது தகாது என்று நின் அன்பர் உரைப்பரென்று எண்ணியோ, வேறு என்ன காரணத்தாலோ நீ திருவுள்ளம் இரங்குகின்றாயில்லை; இப்பொழுதும் இரங்கி அருள் நல்காயாயின், நெறியறியாமல் நாடு நீங்கிக் காடடைந்து திரிந்து கெடுவேனோ, கடலில் வீழ்ந்து மடிவேனா; அறியேன். எ.று.
“தன் கடன் அடியேனையும் தாங்குதல்” என்ற பொருளுரையால், அருளுதல் இறைவற்குக் கடன் என்பது கருத்தில் நிலவுவதுபற்றி, வள்ளலார், திருவுள்ளம் இரங்காமை இயற்கையன்று; செயற்கையாண் உளதாயது. செயற்கை நிகழ்ச்சி காரணமின்றி உளதாவதில்லை. ஆகவே இறைவன் இரங்கியருளாமைக்கு காரணம் யாதாகலாம் எனத் தம்மையே ஆராய்கின்றார். அந்த ஆராய்ச்சி தமது எளிமையையும் அடிமைத் தன்மையையும் காட்டுகிறது. பொறிபுலன்களின் வழிச்சென்று அலைவது எளிமை; அறிவித்தாலன்றி அறியாமையும், செய்வித்தாலன்றிச் செய்யாமையும், காட்டினாலன்றிக் காணாமையுமாகிய இயல்புகள் அடிமைத் தன்மையைக் காட்டுகின்றன. இதுபற்றியே சான்றோர்கள், “பரதந்திரியம் கரைகழி பந்தம்” (ஞானா : 19 : 10) என்று பழிக்கின்றனர். இக் குறைபாடு கண்டு நீ எனக்கு அருளவில்லை போலும் என்பார், “நான் ஒர் எளிமை அடிமையென்றோ உள்ளம் இரங்கிலை” என்று உரைக்கின்றார். நல்லதாகிய பசுவுக்கு உதவும் நீர் பாலாதலும், பாம்புக்கு உதவும் பால் நஞ்சாதலும் போல நல்லாரல்லாதார்க்குச் செய்யும் அருள் தீதாய்த் துன்பம் விளைவிக்கும் என்பது கருதி அருளிலைபோலும் என்பாராய், “நல்லனல்லன் என்று தானோ உள்ளம் இரங்கிலை” என விளம்புகின்றார். யாவர் மாட்டும் நலங்கண்டு பாராட்டும் நற்பண்பே உருவாக அமைந்த நீ ஒருகால் அருள நினைக்கினும், நினக்கு அன்பரானவர் என்னைக்கண்டு, 'இத்தகையோர்க்கு அருள் புரிவது தகவில்லாரை ஊக்கிப் பெருகுவிக்கும்' என்று சொல்லி மறுப்பரென்று நினைந்து, அன்பரது அன்பைப் பேணிப் போற்றும் பெருந்தகைமையினால், நீ மனம் இரங்குகின்றாய் இல்லை போலும் என்பாராய், “அன்பர் தகாது என்பர் ஈது என்று தான் நினைத்தோ நின் உள்ளம் இரங்கிலை” என்று கேட்கின்றார். இத்துணை ஆராய்ச்சி செய்தும் வள்ளலார் உள்ளம் அமைதி பெறாது. மேலும் பல காரணம் இருக்கலாமெனவும்; அவற்றைத் தாம் கண்டறிய மாட்டாமையும் நினைந்து “ஏனோ நின் உள்ளம் இரங்கிலை” என மொழிகின்றார்.
இன்னோரன்ன காரணங்களால் நின் உள்ளம் இரங்காதொழியுமாயினும், நின் அருட்பெருமைக்கு இரக்கமின்மை பொருந்தாது; இன்னமும் திருவுள்ளம் இரங்காதாயின், அருளொளி இல்லாமையால் யான் சென்னெறி யறியாது தீநெறிப்பட்டு நாடும் வீடும் இழந்து காடுசென்று திரிந்து மாய்வேன், நிலவுலகில் எல்லை கடந்து கடலகம் புகுந்து வீழ்ந்து கெடுவேன் என்ற தமது முடிவை, “இன்னும் இரங்கிலையேல் கானோடுவேன்கொல் கடல் விழுவேன்கொல்” என்று கட்டுரைக்கின்றார்.
இதனால், நின் அருள் பெறோனாயின் வாழ்வாங்கு வாழ்த்தி உய்தி பெறாது இடைமுரிந்து காட்டில் திரிந்தோ கடலில் வீழ்ந்தோ கெடுவேன் என்பது பயனாம். (15)
|